வெள்ளி, 28 மே, 2010

செய்தித் துளிகள்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சார்பான பிரசாரங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இரு பிரதேசங்களையும் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதாகும் போது அவர்களிடமிருந்த கையடக்க தொலைபேசிகளில் விடுதலைப் புலிகளுக்குச் சார்பான வீடியோ காட்சிகள் இருந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.


வடக்கின் பாண்டிருப்பு மற்றும் எருவில் போன்ற பிரதேசங்களைச் சொந்த இடமாகக்கொண்ட இவ்விருவர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடுத்தே இந்த கைது இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.


கடந்த வருடம் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரசாரங்களில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.


இவ்விருவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.




சவூதியில் மண்திட்டு சரிந்து விழுந்ததில் இலங்கையர் பலி; மற்றொருவர் காயம் .
சவூதியில் மண்திட்டு சரிந்து விழுந்ததில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். சவூதி அரேபியாவின் ரியாத் நகர விமான நிலையத்திற்கு அருகில் இருந்த பாரிய குழியொன்றிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.


இதில் பிலியந்தளையைச் சேர்ந்த தச்சுத் தொழி லாளியான ஆர்.பி.ஷெல்ட்டன் ரஞ்ஸாகொட (வயது 41)என்பவரே உயிரிழந்தவராவார். அத்துடன் கம்பஹாவைச் சேர்ந்த மற்றொருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


சவூதி நேரப்படி நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளதாக சம்பவத்தில் உயிர்த்தப்பியுள்ள பிலியந்தளை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பந்துல பிரதீப் குமார என்பவர் ரியாத் நகரிலிருந்து தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்




தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் 19 பெண்கள் உட்பட 27 பயணிகள் காயம்
தனியார் பஸ் ஒன்று இன்று காலை விபத்துக்கு உள்ளானதில் 19 பெண்கள் உட்பட 27 பயணிகள் காயமடைந்துள்ளனர்.


50 பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த பஸ் வளைவில் திரும்புகையிலேயே பாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது.


அநுராதபுரத்திற்கும் மாத்தளைக்கும் இடையிலான வீதியில் குறுந்தன்குளம் பகுதியிலிலுள்ள வளைவிலேயே இந்த விபத்து இடம்பெற்றிருக்கிறது.


காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதுடன், இவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதற்கிடையில், மேற்படி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் நிலைமை தொடர்பில் தெரிவித்த வைத்தியசாலையின் பேச்சாளர், சிறியளவில் காயமடைந்தவர்கள் சிகிச்சையின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.




மலேஷிய முகாமிலுள்ள இலங்கை அகதிகள் தொடர்ந்து உண்ணாவிரதம் .
மலேஷிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.


இந்நிலையில், இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்திருப்பதாகவும் தெரியவருகிறது.


மலேஷிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 67 பேர் தங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது மூன்றாவதொரு நாட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 3 நாள்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இது இவ்வாறிருக்க, மேற்படி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்களை சந்திப்பதற்கு மலேஷியாவிலுள்ள தமிழர்களுக்கான அமைப்பு முயற்சித்தபோதிலும், அது பலனளிக்கவில்லை எனவும் அறியவருகிறது.


மலேஷிய கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 75 இலங்கைத் தமிழர்களை பினாங்கு கடற்படையினர் அழைத்துச் சென்றிருந்த நிலையில், இவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக