வெள்ளி, 28 மே, 2010

உருவாகி வரும் புதிய சிக்கல்கள்..............

இலங்கையின் அரசியல் இப்போது மீண்டும் ஒரு சிக்கலான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இரண்டு பிரச்சினைகள் இந்த நெருக்கடியை உருவாக்கியிருக்கின்றன. அல்லது இரண்டு விவகாரங்கள் இந்த நெருக்கடிக்குக் காரணமாக இருக்கின்றன. இனங்களுக்கிடையிலான அதிகாரப்பகிர்வு முதலாவது பிரச்சினை.



இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தியும் அதற்கு அப்பாலும், சர்வதேச நிலைமைகளின் விளைவான ஆதிக்கப்போட்டியில் செல்வாக்குச் செலுத்த முனையும் வெளிநாடுகளின் பிரச்சினை மற்றையது.


இந்த இரண்டு பிரச்சினைகளும் இலங்கைத் தீவை மீண்டும் ஒரு கொந்தளிக்கும் நிலைக்குக் கொண்டுபோகப்போகின்றன.


முதலாவது விவகாரம் சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பானது. போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டாலும் சிறுபான்மையினரின் அரசியற் கோரிக்கை கைவிடப்படவில்லை. அரசியற் போராட்டங்களும் நிறுத்தப்படவில்லை. தீர்வுத் திட்டமொன்று அரசாங்கத்தால் வைக்கப்பட்டு, அந்தத் தீர்வுத் திட்டத்தை தமிழ்பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ளும்வரை இந்தக் கோரிக்கையும் போராட்டம் தொடரும்.


ஆகவே, இன விவகாரப் பிரச்சினை தொடரப்போகிறது. ஆனால், முன்னரைப் போல அது நேரடியான விளைவுகளை அதிகம் தரமாட்டாது. எப்போதும் தந்திரோபாயங்களாலும் அதிகாரத்தினாலும் படைப்பலத்தினாலும் இந்தப் போராட்டத்தையும் கோரிக்கைகளையும் கட்டுப்படுத்தலாம் என்பது சிங்கள அதிகாரத்தரப்பினரின் நம்பிக்கையாக இருந்தது. இன்னும் அப்படியான நம்பிக்கை உண்டு. போர் முடிவுக்கு வந்தபோது இத்தகைய உணர்நிலைதான் சிங்களத்தரப்பில் காணப்பட்டது.


ஆனால், இப்பொழுது நிலைமைகள் வேறு திசைகளில், எதிர்பாராத விதமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. கட்டுப்பாடுகளை மீறும் விதமாக அவை புதிய சவால்களையும் எழுப்புகின்றன என்பதை சிங்களத் தரப்பு உணரத்தொடங்கியிருக்கிறது. இங்கே சிங்களத் தரப்பு என்று கூறப்படுவது சிங்கள அதிகாரவர்க்கத்தையே ஆகும்.


உள்நாட்டில் தமிழ்பேசும் மக்களின் இன்றைய அரசியல் கட்சிகளை சிங்களத் தரப்பால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால், தமிழ் மக்களின் சார்பாக வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் நடவடிக்கைகளை அப்படி நினைத்த மாத்திரத்தில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது. கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியாது. அதுவும் இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் நேரடியான அழுத்தங்களோ நெருக்குதல்களோ இல்லை என்பதால் இவை தீவிரமாகவும் சுதந்திரமாகவும் செயற்படக் கூடியவை.


அத்துடன் இவை இயங்குகின்ற தளம் மேற்குலகத்தினுடையது. மேற்குத் தளம் என்பது இந்த மாதிரி அமைப்புகள் இயங்கக் கூடிய அளவுக்கு விசாலமான வளம்சார் – ஜனநாயக பரப்பைப் கொண்டது. அத்துடன் சர்வதேசக் கவனத்தை ஈர்க்கக்கூடியது.


அதேவேளை, இந்த அமைப்புகள் தமிழ்த் தேசியத்தை தீவிர நிலையில் பின்பற்றுபவை. மேலும் இவை விடுதலைப் புலிகளின் தமிழீழ அரசியற் கோட்பாட்டைக் கொண்டவை. தனிநாட்டுக் கோரிக்கையை ஆதாரமாகக் கொண்டவை. எனவே இந்த அமைப்புகளின் இயங்குதல் நிச்சயம் நெருக்கடி நிலையைக் கொடுத்தே தீரும். குறிப்பாக, நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல், அதன் பின்னர் அந்த அவையின் செயற்பாடு போன்றவை முக்கியமானவை. அதைப்போல வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வலியுறுத்தும் தரப்பின் நடவடிக்கைகள். நாடுகடந்த தமிழீழத்துக்கான அவையின் முதலாவது அமர்வு அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது.


இந்த அவையின் முதலாவது அமர்வை அமெரிக்க அரசியலமைப்பை உருவாக்கிய பிலடெல்பியாவிலுள்ள தேசிய அரசியலமைப்பு நிலையத்தில் (என்.சி.சி.) மண்டபத்தில் நடத்தியதன் நோக்கம் இந்த அமைப்பையும் அதன் செயற்பாட்டையும் அதிக கவனத்துக்குட்படுத்துவதாகும். எனவே இது போன்ற நடவடிக்கைகளின் வளர்ச்சியானது, காலப்போக்கில் இந்த அமைப்புகள், இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களிடம் செல்வாக்குச் செலுத்தும் ஒரு நிலையை உருவாக்கினால் நிச்சயமாக அது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியே தீரும்.


இது, இப்போதிருக்கின்ற உள்ளூர் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளை நிராகரித்து புதிய ஒரு அரசியற் தலைமைத்துவத்தை உருவாக்க முனையும். மேற்கில் பலம் பெறும் அரசியல் முனைப்பை இலங்கையில் -வடக்கு, கிழக்கில் வேரூன்ற வைக்கும். இதற்கான வாய்ப்புகளும் இல்லாமலில்லை.


அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வை வைக்காமல் இழுத்தடிக்கும் போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வில் அக்கறை காட்டாத போதும், தமிழ் அரசியல் கட்சிகள் தீர்க்கமாகச் செயற்படாத போதும் இந்தக் குறிப்பிடப்பட்ட, மேற்கில் இயங்கும் தமிழ் அரசியல் இலங்கைத் தமிழரிடத்தில் செல்வாக்குச் செலுத்தலாம். எனவே, இது சிங்கள அதிகார வர்க்கத்துக்கு ஒரு சவாலாகவும் நெருக்கடியாகவும் இருக்கிறது என்பதால்தான், இப்போதே இதை கருநிலையில் கிள்ளிவிடத் துடிக்கின்றது அரசாங்கம்.


அரசாங்கத்தின் அடுத்த கட்டச் செயற்பாடாக இந்த அபாயச் சவாலை முறியடிப்பதாகவே அமைந்திருக்கிறது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகளை அதிகாரத் தரப்பு ஆரம்பித்தும் விட்டது. இது குறித்த பத்திரிகைச் செய்திகளை வாசகர்கள் வாசித்திருக்கக்கூடும்.


அரசாங்கம் இதை வெற்றிகரமாக்குவதற்கு மேற்குலக நாடுகள் ஒரு கூட்டு ஒத்துழைப்புத்திட்டத்திற்கு உடன்படவேண்டும். ஏனெனில் மேற்கில்தான் இந்த தமிழ் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே, மேற்கு ஒத்துழைக்க வேண்டும். ஆனால், மேற்கானது போருக்கும் புலிகளை அழிப்பதற்கும் ஒத்துழைத்ததைப்போல இந்த அரசியல் நடவடிக்கைக்கு எதிராக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.


அவ்வாறு முழுமையாக அரசாங்கத்திற்கு மேற்குலகம் ஒத்துழைக்காமல் விடுவதற்கான அக காரணங்களும் புறக் காரணங்களும் உள்ளன. சீனா, இந்தியா ஆகியவற்றுக்குச் சமதையான இடத்தை இலங்கை, மேற்குக்கும் வழங்குமாக இருந்தால், அல்லது அதற்கும் கூடுதலான இடத்தைக் கொடுத்தால் மேற்குலகம் தமிழ் அரசியலை மட்டுப்படுத்தி இலங்கையின் பதற்றத்தைக் குறைக்கும்.


ஆனால், அது இப்பொழுது இலங்கையால் முழுமையாக முடியாது. இலங்கையின் அரசியல் நிலைவரமானது மேற்கையும் கிழக்கையும் சமனிலைப்படுத்தும் வகையிலேயே திட்டமிடப்படுகிறது. அதுதான் இலங்கைக்கு அவசியமானதுமாகும். இதுவொரு கடினமான பணியாக இருந்தாலும் சிங்கள இராஜதந்திரம் இதற்காகவே இப்பொழுது உழைத்துக் கொண்டிருக்கிறது.


எனவே, இந்த நிலையில் நாட்டுக்கு வெளியேயான தமிழ் அரசியல் ஒரு அபாய விளக்காகவே இலங்கைக்கு இருக்கிறது. குறிப்பாக சிங்களத்தரப்புக்கு.


அடுத்தது, இலங்கைத்தீவை எதிர்காலத்தில் எப்படி தமக்கு ஏற்றவகையில் கையாளலாம், பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிந்திக்கும் ஆதிக்க நாடுகள் தொடர்பான விவகாரம். வளர்ந்து வருகிற சந்தைப் போட்டியிலும் சந்தைக்கான பாதுகாப்பு மற்றும் பொருத்தமான தளத் தயாரிப்பிலும் ஆதிக்க நாடுகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.


இந்த வகையில் இலங்கைத் தீவை அடுத்துவரும் ஆண்டுகளில், தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு இந்தியாவும் சீனாவும் முனைப்போடு முயன்று வருகின்றன. வளர்ந்து வரும் சந்தை மற்றும் உற்பத்திக்கான வளப்பகிர்வு போன்ற விடயங்களுக்காக இலங்கையை இரண்டு நாடுகளும் தத்தமது கைக்குள் போட்டுக் கொள்ள முயற்சிக்கின்றன.


இதை எதிர்கொள்வது இலங்கைக்குப் பெரும் சவால்தான். சிங்கள இராஜதந்திரம் மிகவும் பலமானது என்றாலும், எதையும் முறியடிக்கக்கூடிய ஆற்றலும் அனுபவம் உடையது என்றாலும் புதிய சவாலுக்காக அது நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. இந்தியா, சீனா போன்ற பிராந்திய நாடுகளுக்கு அப்பால், மேற்குலகத்தையும் சமனிலையில் வைத்திருக்க வேண்டிய தேவை இலங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது.


ஆனால், இதுவொரு கடினமான பணியாகும்.


ஒரு நண்பர் சொன்னதைப் போல “இன்று உலக ஆதிக்க நாடுகள் இலங்கையைக் குழுப்புணர்ச்சிக்குட்படுத்த முயற்சிக்கின்றன’ என்பது நிலைமைகளை விளங்கிக் கொண்டோருக்குப் புரியும்.


வெளியுறவுக் கொள்கையை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல், அப்படிக் காட்டி, சார்பு, எதிர் என்று அடையாளப்படுத்தி, அதன் எதிர்விளைவுகளைச் சந்திக்காமல், ஆனால், அதைக் கனகச்சிதமாகக் கையாண்டு வெற்றிபெறுவதில் சிங்கள அதிகார வர்க்க இராஜதந்திரத்துக்கு ஒரு சிறப்பான பாரம்பரியம் உண்டு. அந்தத் தேர்ச்சியை வைத்துக் கொண்டு அது, புதிய வேகத்துடன் காரியமாற்றத் தொடங்கியிருக்கிறது.


இங்கே நாம் அவதானிக்க வேண்டிய சங்கதி ஒன்றுண்டு. இலங்கையைச் சுற்றி எரிந்து கொண்டிருக்கும் அபாய விளக்குகளில் பலவற்றையோ அல்லது நெருக்கடிப் பொறிகளில் பலவற்றையோ இலங்கை இப்போது செயலிழக்கச் செய்து விடமுடியும்.


இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைத்து, அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்தி, இலங்கைத்தீவை ஐக்கியப்படுத்துவதன் மூலம் வெளிநெருக்கடிகளில் பாதியையும் உள் நெருக்கடிகளில் அதிகமானவற்றையும் தணித்துக் கொள்ளலாம். இதைச் சிங்கள அதிகார வர்க்கம் தெரிந்து கொள்ளாமல் இல்லை.


ஆனால், அது அதற்கு விரும்பவில்லை. சிறுபான்மைச் சமூகங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்காமல், அதேவேளை சர்வதேச நெருக்கடிச் சக்திகளையும் ஆதிக்கப் போட்டியையும் தனக்கு இசைவாக்கி விட முனைகிறது. இதில் சிங்கள இராஜதந்திரம் வெற்றிபெறலாம். ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதைப்போல, அதனுடைய தேர்ச்சியினாலும் தந்திரங்களினாலும்.


ஆனால், இந்த நெருக்கடியையும் அபாயத்தையும் இலகுவாக இலங்கை மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து தீர்த்துக்கொள்ள முடியும். அதுதான் சரியானதுமாகும் இலங்கைத்தீவு என்ற அடிப்படையில் எப்பொழுதும் தமிழ் பேசும் மக்களும் சிங்கள மக்களும் பிறசக்திகளால் ஒரேவகையான நெருக்கடிகளையே சந்திக்க வேண்டியுள்ளது. அது ஒரு யதார்த்தம். இந்த நெருக்கடிகளை தணிப்பதற்கும் வெல்வதற்கும் ஒன்றுபட்ட ஒரு எதிர்கொள்ளல் தேவை. தனித்தனியே இருக்கின்ற நாடுகள் கூட சில பொது உடன்பாடுகளில், பிராந்திய ரீதியிலும் கொள்கை தியாகவும் உடன்பட்டு தங்கள் நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்கின்றன.
புதிய பயணங்களை மேற்கொள்கின்றன.


இலங்கை இத்தகைய ஒரு புதிய பாரம்பரியத்துக்கும் பயணத்துக்கும் எப்போது தயாராகும்? இலங்கையைச் சுற்றியுள்ள நெருக்கடிகளை அது எப்படி இலகுவாகக் கடக்கும் நிலையை அடையப் போகிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக