திங்கள், 10 மே, 2010

முளையிலேயே கிள்ளி விட வேண்டும் என்ற முனைப்புடன் சிங்கள தேசம்!


"கொடியும் கோசமும் தமிழர் உரிமையை பெற்றுத் தருமா"? தமிழீழ தேசியக் கொடியை நாங்கள் மறந்து விடுவது சரியானதா என்ற உணர்வுபூர்வமான கேள்வியொன்று இந்த இடத்தில் எழுவதும் இயல்பானதே. தமிழீழ இராணுவமான விடுதலைப் புலிகள் இயக்கமோ, ஈகைக்கும் தியாகத்திற்கும் இலக்கணம் வகுத்த மாவீரர்களின் மகத்தான செயற்பாடுகளோ எதுவித சர்வதேச உதவியுமின்றி தமிழீழ தாயகத்தில் நிலவிய நிர்வாகக் கட்டமைப்புகளோ எந்தவொரு தமிழனதும் நினைவுகளிலிருந்தும் அழிக்கப்படக் கூடியதல்ல. உலகில் கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை இந்த நினைவுகளும் வீரம் செறிந்த வரலாறும் நினைவில் இருக்கத் தான் போகிறது. ஆனாலும்
 கோசம் போட்டு கொடி பிடித்துத் தான் எம் தமிழ் மறவர்களை நினைவில் வைக்கும் அளவிற்கு தமிழர்கள் ஞாபக மறதி கொண்டவர்களோ நன்றி மறந்தவர்களோ அல்ல. போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனாலும் போராட்ட இலட்சியம் மாறாது என்ற தேசியத் தலைவரின் வார்த்தைக்கேற்ப நாம் எமது குறீயீட்டு அடையாளங்களுக்குத் தற்காலிக மௌனத்தைக் கொடுத்து விட்டு சாணக்கிய அரசியல் மூலம் சர்வதேசத் தலைவர்களை எம்மை நோக்கித் திரும்ப வைப்போம். எமது கருத்துக்களைச் செவிமடுப்பதற்கும் எம்மோடு ஒரே மேசையில் அமர்ந்து பேசுவதற்குமான சூழலை ஏற்படுத்துவோம். எனவே தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தோற்கடிப்பட்டு ஓராண்டு கடந்துள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் தமிழர் தாயகம் பல்வேறு வகைகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டு மிக வேகமாக சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இறுதி யுத்த காலத்தில் சுமார் நாற்பதினாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்பட்டமான போர்க் குற்றங்கள் சிங்களத்தினால் அரங்கேற்றப்பட்டன. போர் முடிந்த பின்னரும் சிங்கள தேசத்தின் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. சிங்கத்தின் குகைக்குள் சிக்குண்ட மானைப் போல சின்னா பின்னப்படுத்தப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் அவலங்களை சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் படம் போட்டுக் காட்டியிருந்தன. ஆனாலும் சிங்கள அரசின் இந்தக் கொடுமைகளைப் பகிரங்கப்படுத்தும் விதமான செயற்பாடுகளைப் புலம் பெயர் தேசத்தில் இயங்கும் தமிழர் அமைப்புகள் முனைப்புடன் முன்னெடுத்தன என்று சொல்ல முடியாது. தமது இருப்புக்களைக் காத்துக் கொள்வதிலும் பதவிக் கதிரைகளுக்குப் பங்கம் வராமல் காய் நகர்த்தல்களை மேற்கொள்வதிலுமே இந்த அமைப்புக்கள் குறியாக இருந்தன என்பதே கசப்பான உண்மை. தாயகப் போர் யாரும் எதிர்பாராத வகையில் முடக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல மீண்ட தமிழர் சமூகம் தாயக விடுதலைப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான மார்க்கமொன்று குறித்துச் சிந்தித்தது. அதன் விளைவாக உருவெடுத்ததே நாடு கடந்த அரசாங்கம் என்னும் உத்தியாகும். உலகில் இதுவரை முன்னுதாரணம் காட்ட முடியாத புதிய வகையான உத்தி குறித்த செய்திகள் வெளிவந்ததிலிருந்தே இது குறித்த விமர்சனங்களை பலரும் முன்வைத்து வந்தனர். குற்றங்காணல் என்னும் கண்ணாடியை அணிந்து கொண்டு இதனை அவதானித்து வந்த விமர்சகர்களின் செயற்பாடுகள் ஒரு புறமிருந்தாலும் தாயக விடிவிற்கான உகந்த மார்க்கம் இதுவே என உறுதியாகக் கண்ட தமிழ் ஆர்வலர்கள் புத்திஜீவிகள் ஆகியோரின் துணையுடன் முனைப்புப் பெற்ற இந்த நாடு கடந்த அரசாங்கம் மே 2ம் திகதி நடைபெற்ற தேர்தலுடன் உருவாக்கம் பெற்றது. இந்த நிலையில் நாடு கடந்த அரசாங்கம் என்பது சிங்கள தேசத்தின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. தமிழர்களின் அடுத்த உரிமைப் போர் வடிவத்தை முளையிலேயே கிள்ளி விட வேண்டும் என்ற முனைப்புடன் சிங்கள தேசம் காய்களை நகர்த்தி வருகிறது. விடுதலைப் புலிகளையும் அதனுடன் தொடர்புபட்ட புனர்வாழ்வுக் கழகம், உலகத் தமிழர் அமைப்பு போன்றவற்றை எவ்வாறு தடை செய்யும் உபாயங்கள் கைக்கொள்ளப்பட்டனவோ அதே உபாயங்களைப் பயன்படுத்தி இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தையும் செயலிழக்கச் செய்து சட்டவிரோதமான அமைப்பாக அறிவிக்க வைக்கும்படி புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் அதிகமுள்ள நாடுகளின் தூதரகங்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிங்கள தேசத்தின் இந்தக் காய் நகர்த்தலை முறியடிக்க தமிழர் தரப்பு எவ்வாறு செயற்படப் போகிறது என்பதே இன்றுள்ள கேள்வி. சிங்கள தேசத்தினால் முன்னெடுக்கப்படும் ஆபத்தைத் தெரிந்து கொண்டும் விட்டில் பூச்சிகளைப் போல அந்த ஆபத்தில் விழப் போகின்றோமா? அல்லது சிங்களத்திற்கிணையான அல்லது ஒரு படி மேலான இராஜதந்திரத்தைக் கையாண்டு இந்த ஆபத்திலிருந்து மீளப் போகின்றோமா என்பதே இன்றுள்ள கேள்வி? ஆனாலும் அண்மைய நாட்களாக புலத்தில் இடம் பெறும் செயற்பாடுகள் ஆரோக்கியமான சமிக்ஞைகளைத் தரவில்லை என்பது கண்கூடு. நாடு கடந்த அரசுடன் தமிழீழக் கொடியையும் இணைத்து உருவாக்கப்பட்டு வரும் சர்ச்சை பலத்த சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. தமிழீழம் நோக்கிய எமது அடுத்த கட்ட நகர்விற்கு ஆதாரமாகவும் அச்சாணியாகவும் அமையப் போவது சர்வதேச மட்டத்தில் நாம் ஏற்படுத்திக் கொள்ளப் போகும் நட்புறவும் நம்பகத் தன்மையுமே என்பது அரசியல் அரிச்சுவடியை அறிந்த அனைவருக்குமே புரிந்திருக்கும். இந்த நிலையில் தொடர்ந்து சர்வதேசத்தின் சந்தேகப் பார்வையை தக்க வைக்கும் விதமான செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக அமையப் போவதில்லை. அப்படியானால்: தமிழீழ தேசியக் கொடியை நாங்கள் மறந்து விடுவது சரியானதா என்ற உணர்வுபூர்வமான கேள்வியொன்று இந்த இடத்தில் எழுவதும் இயல்பானதே. தமிழீழ இராணுவமான விடுதலைப் புலிகள் இயக்கமோ, ஈகைக்கும் தியாகத்திற்கும் இலக்கணம் வகுத்த மாவீரர்களின் மகத்தான செயற்பாடுகளோ எதுவித சர்வதேச உதவியுமின்றி தமிழீழ தாயகத்தில் நிலவிய நிர்வாகக் கட்டமைப்புகளோ எந்தவொரு தமிழனதும் நினைவுகளிலிருந்தும் அழிக்கப்படக் கூடியதல்ல. உலகில் கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை இந்த நினைவுகளும் வீரம் செறிந்த வரலாறும் நினைவில் இருக்கத் தான் போகிறது. ஆனாலும் கோசம் போட்டு கொடி பிடித்துத் தான் எம் தமிழ் மறவர்களை நினைவில் வைக்கும் அளவிற்கு தமிழர்கள் ஞாபக மறதி கொண்டவர்களோ நன்றி மறந்தவர்களோ அல்ல. போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனாலும் போராட்ட இலட்சியம் மாறாது என்ற தேசியத் தலைவரின் வார்த்தைக்கேற்ப நாம் எமது குறீயீட்டு அடையாளங்களுக்குத் தற்காலிக மௌனத்தைக் கொடுத்து விட்டு சாணக்கிய அரசியல் மூலம் சர்வதேசத் தலைவர்களை எம்மை நோக்கித் திரும்ப வைப்போம். எமது கருத்துக்களைச் செவிமடுப்பதற்கும் எம்மோடு ஒரே மேசையில் அமர்ந்து பேசுவதற்குமான சூழலை ஏற்படுத்துவோம். அவ்வாறு பேச்சுக்கள் நடைபெறும் போது அவர்கள் முன் வைப்பதற்கான எமது பக்க நியாயங்கள் தாராளமாகவே உள்ளன. இந்த நியாயங்கள் சர்வதேசம் தமது கண்ணோட்டத்தையும் கடந்த காலக் கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தும். எங்கள் அரசியல் தலைமையையும் எமக்காக செயற்பட்ட நிறுவனங்களையும் தடை செய்தவர்களே தம் மீளப் பெறும் நிலையை ஏற்படுத்தும். தமிழர்கள் மட்டும் ஒன்று கூடி தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பிக்கும் நிலை மாறி சர்வதேச நாட்டுத் தலைவர்களும் எம் தமிழீழ தேசியக் கொடிக்கு தலை வணங்கி மரியாதை செய்யும் நிலை உருவாகும். அதற்காக உணர்வுகளுக்குக் கடிவாளம் போடுவோம்... சாணக்கிய அரசியலை முன்னெடுப்போம்... ஒட்டு மொத்த தமிழினத்தின் கனவை விரைவில் நனவாக்குவோம்... மாண்ட வீரர் கனவு பலிக்க மண்ணில் எம்மக்கள் நிமிர்ந்தே வாழ மாநிலத் தலைவர் எம்மோடு இணைய மதியுடன் எங்கள் பணியினைத் தொடர்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக