திங்கள், 10 மே, 2010


வன்னிப் பேரவலத்தின் நினைவுகள் ஒவ்வொருவர் நெஞ்சையும் எரிய வைத்துக் கொண்டிருக்க, அதன் ஓராண்டு முடிவடையும் காலத்துள் நாம் வாழ்வது என்பது தாங்க முடியாத சோகமானது. பேரினவாத சிங்கள அரசு தனது ஆயுத பலத்தை தமிழ்மக்கள் மீது மூர்க்கத்தனமாக மேற்கொண்டதால் எம் மக்கள் கடந்த வருட மே மாதத்தில் வகைதொகையின்றிக் கொன்று குவிக்கப்பட்டனர். மே மாதம் 18ஆம் திகதி என்பது, உலகம் கண் விழித்துப் பார்த்திருக்க, ஈழத் தமிழினத்தின் மீது மனிதகுலம் ஏற்க முடியாத கொடூரத்தைதச் சிங்கள தேசம் ஏவி, அதன் உச்சத்தைத் தொட்ட இருண்ட நாள். மே மாதம் 18ஆம் திகதியை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் போர்க் குற்றவியல் நாளாக கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீரம் நிறைந்த மறவர்களின் தியாகத்தாலும் தீரத்தாலும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக விரிக்கப்பட்ட விடுதலைப் பயணம் அவர்களின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில், பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது துயரமானது. அகதிகளாக்கப்பட்டவர்களின் அவலம் தொடர்கிறது. புனர்வாழ்வு என்ற பெயரில் கைதான போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. தமிழரின் தாயக பூமியில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. வன்னிப் பெருநிலம் இராணுவ மையமாக மாற்றப்படுகின்றது. இத்தனை கொடுமைகளையும், கண்டும் காணாதது போல சர்வதேசம் கண்மூடிப் பூனையாக நடிக்கிறது. எங்கள் மண்ணுக்காக மடிந்த மக்களையும் மாவீரர்களையும் மறந்துவிட முடியாது. அவர்களின் நினைவுகளை நெஞ்சில் இருத்தி அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வது காலத்தின் கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக