திங்கள், 10 மே, 2010

கூட்டமைப்புக்கு ஒரு உணர்வுள்ள தமிழனின் பகிரங்க மடல்.

அன்பான கூட்டமைப்பினரே, 17ம் திகதி எல்லா ஆலயங்களிலும் பிரார்த்தனை செய்ய முடிவெடுத்துள்ளமைக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால்,மே 18ம் திகதி என்ன செய்ய யோசித்துள்ளீர்கள்?. அன்றைய தினத்தில்
 40,000 மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை இப்போது உலகமே ஏற்றுக் கொள்ளுகின்றது. உலகத் தமிழர்கள் அத்தினத்தை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், போர்க்குற்ற நாளாகவும் அனுஷ்டிக்கின்றார்கள். ஏகாதிபத்திய சிங்கள அரசு அந்தத் தினத்தை வெற்றி விழாவாகக் கொண்டாடத் தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பினராகிய நீங்கள் இந்த நாளில் என்ன செய்ய யோசித்துள்ளீர்கள்? வீட்டைப் பூட்டி உள்ளேயிருந்து ஒப்பாரி வைக்க யோசித்துள்ளீர்களா? இல்லாவிடில், நீங்களும் அந்நாளைப் புலிகளிடமிருந்து உங்களுக்கு விடுதலை கிடைத்த நாளாகக் கொண்டாடப் போகின்றீர்களா? நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்? முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழருக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட உங்களால் பகிரங்கமாக விட முடியாதா? நீங்கள் உண்மையில் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளா? கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 82 வீதத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் உங்களுக்கு வாக்களிக்காதமையினால் அவர்கள் மீது உங்களுக்குக் கோபமிருக்கலாம். அதற்காக அவர்களைப் பழிவாங்கி விட வேண்டாம். உங்களுக்கு வாக்களித்தவர்களுக்காவது கொஞ்சமாவது மனச்சாட்சியுடன் செயற்படுங்கள். போர்க்குற்றவாளியான சிங்கள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நம்பி ஏமாற வேண்டாம். சிறீலங்காவின் அரசியல் யாப்பினைத் திருத்துவதற்கு அவனுக்கு உங்களின் ஆதரவு தேவையில்லை. அவன் விரைவில் எதிர்கட்சியிலுள்ள 6 பேரை மந்திரிப் பதவி கொடுத்து வாங்கிவிடுவான். நீங்கள் இந்தியாவை நம்பிப் பகல் கனவு காண வேண்டாம். கிழக்கில் உருவானது போன்ற இன்னொரு மாகாணசபை வடக்கிலும் உருவாக்கப்படும். அது தான் உங்களுக்குச் சிங்கள அரசு கொடுக்கப் போகும் அதிகாரப் பகிர்வாகவிருக்கும். தமிழ்த் தேசியத்தைத் தலை முழுகியதுக்கு இதுதான் இந்தியா உங்களுக்கு வாங்கிக் கொடுக்கப் போகும் பரிசாகும். இரா. சம்பந்தனின் அஜராகப் போக்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது பிளவுபட்டுக் கிடக்கின்றது. அதனை ஒன்றுபடுத்துவதற்கான எந்தவித முயற்சியும் இதுவரையும் உங்களால் எடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியத்தை ஆதரித்த காரணத்துக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் ஒதுக்கப்பட்டனர். அவர்கள் உங்களுக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தமையினால் ஈழத்தமிழர்கள் தமிழ்த் தேசியத்தைப் புறக்கணித்து விட்டார்களென பிழையாகக் கணக்குப்போட வேண்டாம். உங்களுக்கு 18 வீதத்துக்கும் குறைவான ஈழத்தமிழர்கள் மட்டுமே வாக்களித்தார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம். இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும்படி ஈழத்தமிழர்களை யாரும் கேட்கவில்லை. ஆயினும், பெரும்பான்மையானவர்கள் அதனைப் புறக்கணித்தார்கள். சிங்களப் பாராளுமன்றத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையே அதற்குக் காரணமாகும். நீங்கள் அங்கு போடப்பட்டுள்ள நாற்காலிகளைச் சூடாக்கவே போகின்றீர்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இதுவரை நீங்கள் செய்யத் தவறியவற்றை மன்னித்து மறந்து விடுவோம். வருங்காலத்திலாவது ஈழத்தமிழர்களுக்காக துணிவுடன் ஏதாவது செய்யுங்கள். மே 18ம் திகதியை திகதியைத் துக்கதினமாகப் பிரகடனப்படுத்துங்கள். வடக்கிலும் கிழக்கிலும் ஹர்த்தாலுக்கு ஒழுங்கு செய்யுங்கள். முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழருக்காக 18ம் திகதி ஒரு நிமிடமாவது மெளன அஞ்சலி செலுத்துங்கள். அவர்களின் ஆத்மாவாவது சாந்தியடையட்டும். யாரடா, இந்தப் பயல் எங்களுக்கு அறிவுரை சொல்ல எனக் கோபப்பட வேண்டாம். உங்கள் மனச்சாட்சியைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள், அது பதில் சொல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக