திங்கள், 10 மே, 2010

உசாரடைய வேண்டிய புலம்பெயர் தமிழர்கள்

இத்தாலியப் பொலிஸாரால் 9 இலங்கைத் தமிழர்களை கைது செய்யப்பட்டதையடுத்து இவர்கள் சிறீலங்கா அரசின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலை விரும்பிகளிற்கு எதிரான ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது
. இவர்கள் செய்ய வேண்டிய திட்டம் என்ன என்பதை இவர்கள் இத்தாலி சென்றடைந்த பின்பே தெரிவிப்பதாக இவர்களிற்கு கூறப்பட்டுள்ளதாகவும். மேற்படி நபர்கள் இத்தாலியிலுள்ள சிறீலங்கா தூதராலயத்தில் பணிபுரியும் தமிழ்நபர் ஒருவரைச் சந்தித்ததாகவும் இத்தாலியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களனைவரும் போரின் இறுதி காலத்தில் வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றவர்கள் என்ற விடயமும் தெரியவந்திருக்கது. இவர்கள் இவ்வாறு கைது செய்யப்படாவிட்டால் இவர்கள் இறுதிப் போரில் தப்பி வந்தவர்கள் என்ற கோதாவில் விடுதலைக்காக உழைப்பவர்கள் மத்தியில் ஊடுருவியிருப்பார்கள். நாங்கள் எங்களிற்குள்ளேயே ஒற்றுமைகளை குலைத்து சிறுவிடயங்களிற்காக தகராற்றில் ஈடுபட்டுள்ள காலமே இன்றைய காலமாகும். எங்களிற்குள்ளேயே இரண்டு தரப்புக்களாக நாங்கள் பிரிந்து இருப்பது இதற்கான சந்தர்ப்பத்தை மேலும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஏனென்றால் எந்தச் சம்பவம் நடந்ததாலும் அதை பழிபோடுவதற்கு இன்னொரு தரப்பு எங்களிடைய இருக்கிறது என்ற நிலை இப்போது புலம்பெயர்ந்த நாடுகள் அனைத்திலும் எழுந்திருக்கிறது. ஒருவர் மீதான மற்றவரின் துண்டுப்பிரசுரம். மொட்டைக்கடிதம். மின்னஞ்சல்களென வானலைத் தாக்குதலென பல கோணங்களிலும் எழுந்துள்ள இந்த நிலைமை எதிரிக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த நிலையில் நாங்கள் எங்களிற்குள்ளே நடக்கிற விடயங்களிற்கு ஒரு தரப்பு மறு தரப்பு மீது பழிசுமத்த அது எதிரிக்கு மிகவும் சாதகமாக அமைந்து விடப் போகிறது. ஆவன் உள்நுழைவது மிகவும் இலகுவாக இருக்கப்போகிறது. இந்த நிலையில் இவ்வாறான விடயங்கள் எவ்வாறு தாக்கத்தையேற்படுத்தும் என்பதைக் காட்டுவதற்கான சம்பவம் ஒன்று கனடாவில் நான்கு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது. அந்தச் சம்பவத்தை நாங்கள் படிப்பினையாக எடுத்து நோக்க வேண்டும். எவ்வாறான விடயங்களை நாங்கள் தவிர்க்க வேண்டும் என்பதற்கு இது நல்ல உதாரணம். தேசியத்தலைவரின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்திய மதன் என்ற நபர் தான் தமிழீழத்தில் இருந்து நேரடியான தகவல்களைச் சேகரிப்பதற்காக தலைவரால் அனுப்பி வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு நேரடியாக விடுதலைக்காக செயற்படும் அமைப்பின் காரியாலயத்திற்குள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார். ஒருநொடியில் தொடர்பு கொள்ளக்கூடிய தூரத்தில் வன்னியுடனான தொலைதொடர்பு இருந்த போதும் யாருமே அவரைப் பற்றி விசாரிக்கவேயில்லை. அவரிற்கு தங்குமிட வசதி செய்து கொடுக்கப்பட்டு சகல செயற்பாட்டாளர்களையும் சந்திக்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஒவ்வொருவரையும் சந்தித்து மிகவும் துல்லியமாகத் தகவல்களைத் திரட்டிய அவர் அதன் அடுத்த கட்டமாக அமைப்பின் பெயரால் உள்ள ஊடகங்கள். கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் செயற்பாட்டாளர்களையும் சந்தித்தார். தகவல்களை தாராளமாகத் திரட்டினார். விடுதலைப்போராட்டத்திற்கான கனடாத் தமிழர்களின் முழுச் செயற்பாட்டையும் திரட்டிய அந்த நபர் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த இளைஞர்கள் சிலரிற்கு கையில் பொருளையும் கொடுத்துப் படம்கூட எடுத்தார் என்பது உள்ளகத் தகவல்கள். யாருமே எள்ளளவும் சந்தேகம் கொள்ளவில்லை. காரியத்தை முடித்த நபர் காணமல் போன பின்பே சகலரும் விழித்துக் கொண்டனர். வன்னிக்குத் தொடர்பையேற்படுத்தினால் அவர்களோ அவ்வாறான ஒரு நபர் தங்களிடம் இல்லையெனவும் தாங்கள் யாரையுமே அனுப்பவில்லையெனவும் தெரிவித்தனர். முடிவு அந்த அமைப்பு விசாரணைக்கு முன்னரேயே இழுத்து மூடப்பட்டது. இன்னமும் விசாரணையே தொடங்கவில்லை. ஆனால் அமைப்பு முடக்கப்பட்டபடியே இன்றும் உள்ளது. இதிலிருந்து நாங்கள் அறிவது யாதெனில் யாரோ மூன்றாம் நபரை நாங்கள் துரோகிகள். தேசத்துரோகிகள் என்று சபித்துக் கொண்டிருக்க உளவாளிகள் உள்வீட்டிலேயே தங்கியிருந்து காரியத்தை முடித்துப் போவர்கள் என்பதே. விடுதலைப்போராட்டத்தின் வீழ்ச்சியின் போது கூட இவ்வாறான துல்லியத் தாக்குதல்களின் மூலமே விடுதலைப் போராட்டம் நிலைகுலைய வைக்கப்பட்டது. பல தளபதிகள் துல்லியமான கிளைமோர்த் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள். தமிழ்ச்செல்வன். தீபன். அமுதாப். துர்க்கா போன்றவர்கள் இலக்குகளாக கண்டு தாக்கி அழிக்கப்பட்டார்கள். எனவே உளவு என்பது உள்ளேயே ஒட்டியிருந்து எம்மில் ஒருவராக உட்புகுந்து சேதப்படுத்துவதாகும். இவ்வாறான ஒரு திட்டத்தை இத்தாலியப் பொலிசார் ஏதோ ஒரு தகவலின் பேரில் கண்டுபிடித்ததுள்ளார்கள். ஆனால் மற்றைய நாடுகளில் எத்தனை பேர் எப்படி ஊடுருவியிருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. எனவே நாங்கள் எங்களிற்குள் சண்டை பிடிப்பதை நிறுத்தி விட்டு உச்சவிழிப்பிலிருக்க வேண்டிய காலமிது. அதைவிட்டு விட்டு சர்வத்தையும் நாமே கட்டியாளவேண்டும் என நினைத்து ஒருவரையொருவர் துரோகி என்று ஒரு தரப்பு முயல மறுதரப்பு வெறுத்து ஒதுங்க நாங்கள் மீண்டும் பலமிழந்து போவோம். ஏதிரி எந்தவிதச் சிரமமுமில்லாமல் உள்நுழைந்து தனக்கு வேண்டியதை செய்து கொண்டிருப்பான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக