செவ்வாய், 11 மே, 2010

வழிப்படுத்த வாரீர்!:

கடந்த வருடம் மேமாதம் தாயகத்தில் நிகழ்தேறிய பேரழிவின் பின்னர் புலத்துவாழ் தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்புக்கள் புதியதோர் பரிணாமத்தில் பிரவேசிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவ்வாறான மாற்றமானது தமிழீழ தேசிய தலைமையின் விருப்புகளுக்கு அமைய – அவரின் வழிகாட்டலுக்கு அமையவே – நிகழ்த்தப்பட்டது. அதன்படி புலத்து வாழ் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு படிமுறையாக,
 நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் பல நாடுகளில் நடந்து நிறைவுபெற்று, இன்னும் சில நாடுகளில் நடைபெறவும் இருக்கின்றன. இந்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற புதிய முயற்சியை கண்டுகொண்ட சிங்கள பேரினவாத அரச இயந்திரம் அதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளதொடங்கிவிட்டது. இவ்வாறான சிறிலங்கா அரசின் முயற்சிக்கு துணைசெய்வது போன்று, முன்னர் தமிழ் தேசியத்திற்காக பயணித்த ஊடகங்களும் கைகோர்த்திருப்பதுதான் வேதனையானது. இன்று தமிழ்நெற் இணையதளத்தில் வெளிவந்துள்ள கட்டுரை ஒன்றில், நாடு கடந்த தமிழீ அரசு தொடர்பான பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து – நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான – தமது நிலைப்பாடு என்ன என்பதை அந்த இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் மீதும் அதனை நெறிப்படுத்துகின்ற திரு. உருத்திரகுமார் அவர்கள் மீதும் மதிப்பு வைத்து புலத்துவாழ் தமிழ்மக்கள் முழு வீச்சுடனும் எழுச்சியுடனும் இன்று தமது அரசியல் – ஜனநாயக கட்டமைப்பை கட்டியெழுப்புவதில் முனைப்பு பெற்றிருக்கின்ற வேளையில் - தமிழ்நெற் போன்ற இணையங்கள் இவ்வாறு சேறு பூசும் செயற்பாடுகளில் இறங்கியிருப்பது ஏன் என்ற வினாவுக்கு பதில்தேடும் காலகட்டம் நெருங்கியுள்ளதாகவே கருதுகின்றோம். நாடு கடந்த தமிழீழ அரசு என்ற எண்ணக்கருவானது தாயகத்திலும் புலத்திலும் இழந்துபோன உரிமைக்குரலை நிலைநிறுத்துவதற்கான கடைசி ஆயுதமாகவே தற்போதைய நிலையில் இருக்கின்றது. இதன் உருவாக்கமானது தனியே திரு.உருத்திரகுமாரன் அவர்களால் மட்டும் பிரசவிக்கப்பட்டதல்ல. அதன் படிநிலை உருவாக்கமானது 1985 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே முன்னிறுத்தப்பட்டதாகும். அவ்வேளையில் தாயகத்தில் நடைமுறையிலிருந்த நிழல் அரசும் அதனை நிலைநிறுத்திய போராட்டமும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேவையை அவசியமற்றதாக்கியிருந்தது. ஆனால், இன்றைய நிலையில் அது அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.நாடு கடந்த தமிழீழ அரசு என்பது காலத்தின் தேவையாக வளர்ந்திருக்கிறது. அதன் தேவை என்ன? அதன் உருவாக்கம் எவ்வாறானது? அதன் கட்டமைப்பு எத்தகையது? அதற்குரிய ஆலோசனைகள் என்ன? அது பயணிக்கவுள்ள பாதை எது? அதில் பங்கெடுக்கப்போகின்றவர்கள் யாவர்? - போன்ற பல்வேறுபட்ட விடயங்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளுடனும் திரு. உருத்திரகுமார் அவர்களும் அவருடன் கூடிய தேசிய பற்றாளர்களும் பேசி இந்த நாடு கடந்த தமிழிழ அரசு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இவ்வாறு விதையிட்டு வளர்த்தெடுக்கப்படவேண்டிய மரத்தை முளையிலேயே கருவறுக்க துணைபோகும் தமிழ்நெற் போன்ற இணையங்களும் அதன் ஊடாக தமிழினத்தை தவறான பாதையில் இட்டுச்செல்ல துடிப்பவர்களையும் தட்டிக்கேட்க வேண்டிய நிலையில் ஈழத்தமிழினம் இன்றுள்ளது. உள்ளக கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு கண்டு அதன் ஊடாக நாடு கடந்த தமிழீழ அரசை பலமாக்குவதை விடுத்து, எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது போல சிறிய சிறிய விடயங்களை சுட்டிக்காட்டி பிழைபிடிக்க முற்படுவது ஒட்டுமொத்த தமிழினத்துக்கே சாபக்கேடானது. ஒன்றுபட்ட புலம்பெயர்வாழ் தமிழ்மக்களின் ஒருமைப்பாட்டினால் பிரசவிக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு கட்டமைப்பு மீது அவ்வப்போது சேறடிக்கும் பிரசாரங்களை இந்த இணையங்கள் மேற்கொண்டுவந்தபோதும், அவர்கள் திருத்திக்கொள்வார்கள் என பல மாதங்களாக எதிர்பார்த்து அதற்கான விமர்சனங்களை முன்வைக்காது இருந்தோம். ஆனால் அவ்வாறு மௌனமாக நாங்கள் இருப்பதனை தமக்குரிய சம்மதமாகவும் – தங்களது நடவடிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் – கருதி இன்னும் பல கேடுகளை விளைவிக்கும் அபாயம் தற்போது எழுந்துள்ளதை தெளிவாக அவதானிக்ககூடியதாகவுள்ளது. தாயகவிடுதலை போராட்டத்தில் சிந்தப்பட்ட குருதியும் அதற்கான அர்ப்பணிப்புகளும் விலைமதிக்கமுடியாதவை. அதனை விலைபேச முற்படும் சக்திகளை வழிப்படுத்தாமல் மௌனமாகவிருப்பது தமிழீழ தேசிய தலைமையின் வழிகாட்டலில் இதுவரைகாலமும் செயற்பட்டதற்கே அர்த்தமற்றதாக்கிவிடும். எனவே அனைத்து தமிழர்களும் – குறிப்பாக புலத்துவாழ் ஈழத்தமிழர்கள் – உடனடியாக செயற்படவேண்டியது அத்தியாவசியமானது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு, சேறு பூச முற்படும் தமிழ்நெற் போன்ற இணையதளங்களையும், அதன் ஊடாக ஊடக சண்டித்தனம் செய்யும் ”எமது தேசப்பற்றாளர்களையும்” கண்டித்து வழிப்படுத்த முன்வரவேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றே ஆரம்பிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக