செவ்வாய், 11 மே, 2010

தமிழீழத்திலிருந்து தொடங்கும்!!!


எந்த ஒரு இனத்திற்கும் இந்த ஒரு அவலம் நிகழ்ந்ததில்லை. யூதர்கள் ஒன்றிணைந்து அரேபியர்களை ஒடுக்கும்போதுகூட உலகத்தின் குரல் அதற்கு எதிராக எழுந்து நின்றது. பல்வேறு ஆப்ரிக்க நாடுகளில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் தேசிய ஒடுக்குமுறைகளை உலகமே பல்வேறு வழிமுறைகளில் கண்டிக்கிறது.
 உலகிற்கெல்லாம் வன்முறையற்ற வாழ்வை போதிப்பதாக கூறும் இந்த நாடு, நமது சொந்த மக்கள் கொன்றொழிக்கப்பட்ட அவலத்தை எதிர்த்துநிற்க நாதி இல்லாமல் கரம் கட்டி நின்றது. குரல் வளையை தாமே நெறித்துக் கொண்டது. இந்த நாட்டின் அவலத்தின் அடையாளமாக அந்த நிகழ்வுகள் இன்னமும்கூட ரத்த சாட்சியங்களாய் நம்முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது. கடந்த 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த பேரவலத்தின் சாட்சியமாக தமிழீழ மண்ணெங்கும் ரத்த வாடையால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அங்கே நிமிர்ந்து நின்ற சுவரெங்கும் துப்பாக்கி தோட்டாக்களின் வடுக்கள் தாம் இழைத்த அநீதியை சொல்லிக் கொண்டிருக்கிறது. யார் சொல்லியும் கேட்க மாட்டேன் என்று அகங்காரத்தோடு, ஆணவ திமிரோடு பௌத்தத்தை பேசிக் கொண்டு குருதியில் குளித்த சிங்கள பாசிச வெறியன் ராசபக்சே அவனுடைய கூட்டாளிகள் இன்றில்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் நீதியின் முன்னால் நின்றுதான் தீரவேண்டும். எத்தனை பெரிய அநீதி. தமது சொந்த மக்கள் செத்தொழிந்து கொண்டிருந்தபோது, தமிழினத் தலைவர் என்று கூறிக் கொண்ட கருணாநிதி ஆடிய நாடகம் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது. மிக கடுமையான சமரில் மக்கள் கொத்துக் கொத்தாய் கொன்றொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் தேசிய வீரர் படை தமது மக்களின் சாவை கண்டு சகிக்க முடியாமல் நாங்கள் எங்கள் துப்பாக்கிகளை மௌனிக்க செய்கிறோம் என்று உலக சமூகத்திற்கு அறிக்கைக் கொடுக்கிறார்கள். ஆனால் இதை தோல்வி என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்து எமது இனத்தின் வேறறுத்த கொடுங்கோலனாய் அந்த சிங்கள இன கொடியவன் கொக்கரிக்கிறான். தமிழ்நாட்டு அரச தலைவராக இருந்து கொண்டிருக்கும் கருணாநிதி என்னவெல்லாம் வசனங்கள் பேசி தீர்த்தார் என்பதை இப்போது நினைத்தாலும் நம் இனத்தின் அவலம் நிறைந்த அந்த அடையாளத்தை காண, கேட்க வெட்கப்படுகிறோம், தலைகுனிகிறோம். எங்கெல்லாம் அநீதி நடந்தாலும் அந்த அநீதியை சுட்டிக்காட்டி அந்த அநீதிக்கெதிராக சமர் செய்யக்கூடிய ஒரு மாபெரும் சனநாயக, மாந்த நேய புரட்சி இந்த மண்ணிலே கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், போரை நிறுத்த மாட்டேன் எனச் சொல்லி, அதைவிட கூடுதலாக உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட பல்வேறு மாந்த அழிப்பு கருவிகளை எமது மண்ணின் மீதும், எமது மக்களின் மீதும் பாய்ச்சி, மாபெரும் இன அழிப்பை நடத்தி முடித்து இன்று உலகெங்கும் தாம் உத்தமன் என அறிவித்து திரியும் அவலத்தை பார்க்கிறோம். இந்தியாவில் இருந்து ஒரே ஒரு அழுத்தம் போராளிகளையும், போர் வெறிபிடித்த சிங்கள படையையும் சொல்கிறோம், போரை நிறுத்துங்கள் என அறிவிக்கப்பட்டிருக்குமேயானால் இந்த வரலாற்றின் சுவடு மாறிப்போயிருக்கும். மாறாக, சிங்களனோடு சேர்ந்து கொண்டு தாமும் கருவி ஏந்தி, களத்திற்கு வந்த கேடுகெட்ட பேடிகளாய் இந்தியர்கள் அங்கே இருந்தார்கள். இதை தட்டிக் கேட்கும் திறனோ, துப்போ இல்லாமல் இங்கிருக்கும் அரசியல் நடந்து கொண்டிருந்தது. எப்படியாவது ஒரு மாந்தகுல அழிப்பை நிறுத்தமுடியும் என்கின்ற எண்ணம் இங்கிருக்கும் எந்த ஒரு தலைவருக்கும் வராமல் போனதுதான் நமக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகும். இதிலிருந்து இவர்களால் மீள முடியாது. இவர்களை மீண்டுவர அனுமதிக்கக்கூடாது என்கின்ற ஒரு தவறான அணுகுமுறையையும், தமது ஆட்சிக்கும், அரசியல் கூட்டணிக்கும் சிறு பாதகமும் நிகழக்கூடாது என்பதற்காக கேவலம் பிரணாப்பை அனுப்பு என்கின்ற ஒரே கோரிக்கையின் மூலம் இந்த தமிழ்நாட்டை, தமிழ்நாட்டின் மக்களை திசை திருப்பிய பெரும் தவறை கருணாநிதி செய்து முடித்திருக்கிறார். இது இந்த மாந்த நேயத்திற்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் இன விடுதலைக்கான சமர் நடத்தும் ஒட்டுமொத்த தேசிய இனங்களின் கௌரவத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை, சவால், அடக்குமுறையாளர்களின் ஆணவத்தை வெளிகாட்டும் அடையாளம் என்பதை அழுத்தமாக பதிவு செய்வதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். எந்த நிலையிலும் சொந்த மக்களை கொன்றொழிக்க தமது ராணுவத்தை ஏவும் கேட்டை இதுவரை எந்த ஒரு அரசும் செய்தது கிடையாது. சொந்த மக்கள்மீது விமான படை கொண்டு தாக்குதல் நடத்தும் அவலத்தை அரங்கேற்றிய அரசாக, பிணம் திண்ணும் அரசாக சிங்கள அரசு நடந்துகொண்டதென்றால் அதற்கு வழிகாட்டியாக இந்திய அரசு இருந்திருக்கிறது என்பதை மலைவாழ் மக்களின் அடையாளத்தை ஒடுக்க, விமானப்படையை அனுப்புவேன் என்று பா.சிதம்பரம் கூறியிருப்பதின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எந்த ஒரு நாட்டிலும் மேற்காசிய நாடுகளில் யாரும் தமது அடையாளத்தை நிறுத்திக் கொள்ளக்கூடாது, அதை அடக்குவதற்கு சொந்த மக்களிடமிருந்து பெற்ற நிதியாதாரத்தைக் கொண்டு, அந்த மக்களை கொன்றொழிக்கும் அதிநவீன ஆயுதங்களை படைத்து, சொந்த மக்களை நேரெதிர் கொடியவர்களாக நினைத்து சுட்டுவீழ்த்தும் பெருங்கொடுமையை செய்வதற்கு சிங்கள அரசு தயாராக இருந்ததென்றால், அதன் அரசமைப்பு கட்டுகளில் இந்தியாவின் தலையீடு பெருமளவில் இருந்திருக்கிறது என்பதை இப்போது இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போர் வடிவங்களைப் பார்க்கும்போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எத்தனை காலங்களானாலும் இந்த அவலத்தை மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? எடுத்துரைக்கும் எல்லோரையும் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பதும், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் கூட்டாளிகள் என வர்ணிப்பதும், சிறைகளையும், அடக்குமுறைகளையும் காட்டி ஒடுக்க நினைப்பதுமான செயலை செய்ய இந்த அரசு தொடர்ந்து முனைப்புக்காட்டுமேயானால் ஒன்றை இந்த அரசுக்கு நாம் சொல்கிறோம், இந்த உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, நடைபெற்று முடிந்த, இனி நடைபெற இருக்கிற எந்த ஒரு மக்கள் புரட்சியானாலும் அதில் ஆட்சி அதிகாரத்தின், ஆட்சியாளர்களின் அரச பயங்கரவாதம் முன்னின்று வெற்றிபெறாது. வெற்றி பெற்றது கிடையாது. இனி வரும்காலத்தில் வெற்றி பெற போவதும் கிடையாது. மக்கள் ஆற்றலுக்கு முன்னால் அரச பயங்கரவாதத்தின் ஆணவ கோட்பாடுகள் அடித்து குப்பைமேட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை வரலாறு பல இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது. பல இடங்களில் நிகழ்த்தி காட்டியிருக்கிறது. வரும் காலங்களில் அது தொடரும் என்பதை அரச பயங்கரவாதிகள் மறந்துவிடக்கூடாது. பெரும் கொடுமைக்காரன் ஐரோப்பிய நாடுகளை தமது சுண்டுவிரல் கோடுகளால் சுருட்டி விடலாம் என்று நினைத்து செயலாற்றிக் கொண்டிருந்த இட்லர், இறுதியில் அடையாளம் காணுவதற்காக உடலைத் தேட வேண்டிய அவலத்திற்கு கொண்டு செல்லப்பட்டான் என்பதை மிக சொற்ப கால வரலாற்றிலே நாம் பார்க்கிறோம். ஆகவே, எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த பெருங்கொடுமைக்கு நீதி கிடைக்கும்வரை இந்த தவறுகள் இந்த மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமக்கெதிராக சமர் புரிந்த கொடியவர்களை பழி தீர்க்கும்வரை நமது பணி ஓய்வு பெறக்கூடாது. பணி என்பது அதோடு நிறைவேறுவதல்ல. அதை கடந்து, நம்முடைய ஆட்சி அதிகாரத்தை மக்களுக்கான ஆட்சியை தமிழீழ மண்ணில் பதிவு செய்ய வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கிறது. உலக நாடுகளின் வரைப்படங்களில் இது தமிழரின் பூமி என்று சொல்லப்படதக்க, அதி அற்புத நிலைப்பாட்டை உருவாக்க வேண்டிய கடமை இன்றைய உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு முன்னால் குவிந்து கிடக்கிறது. ஓய்வெடுப்பதற்கோ, உறங்கிக் கொண்டிருப்பதற்கோ இது காலமல்ல. இந்த காலத்தில் அந்த பிணக்குவியலுக்கு முன்னால் நின்று நமக்குள் இருக்கும் பிணக்குகளை உடைத்தெறிந்து, நாம் ஒரே இனமாக இருக்கிறோம், இருப்போம். எமது இனத்தின் வீர அடையாளமும், வியக்கத்தக்க போர் திறனும், எதிரிக்கு அஞ்சாத மனதிடனும், எமக்கான மண்ணை கட்டி அமைக்கும் கலைதிறனும் உடையவர்கள் நாம் என்பதை இந்த உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. நமக்கு முன்னால் நம்மை வழிநடத்த அளப்பறியா ஆற்றலாளன், தமிழ் மக்களின் இதயங்களாக வாழும் எமது தேசிய தலைவர் இருக்கிறார். அவரின் தலைமையில் தமிழீழ அரசு அமைவது தவிர்க்க முடியாதது. எந்த ஒரு நிலையாலும், எந்த ஒரு அடக்குமுறையாலும் நமக்கான ஒரு அரசு அமைப்பதை தடுக்க முடியாது என்பதை எதிரிக்கு எடுத்துச் சொல்லுங்கள். எமது அரசு என்பது வரலாறுக்கு முந்திய காலத்திலேயே வரையறுக்கப்பட்ட ஒன்று. எமக்கான அரசு என்பது இந்த பூமி பந்தில் பொறிக்கப்பட்ட இன, மொழி அடையாளத்தின் பிரதிபலிப்பாய், உலகையே தன் பக்கம் திருப்பும் பெரும் நெருப்பாய் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் நாம் தொய்வாக இருப்பதோ, நமது இறப்பை கண்டு இறங்கி நிற்பதோ, ஐயோ... அனைத்தையும் இழந்துவிட்டோம் என்று எதிரியிடம் கைகட்டி நிற்பதோ எந்த விதத்திலும் சரியானதல்ல. மரணம் என்பது ஏதோ ஒரு வியப்புக்குரியதல்ல. இன்றில்லாவிட்டால் நாளை மரணம் நிகழத்தான் போகிறது. மரணத்தை மாபெரும் மருத்துவத்தைக் கொண்டு தள்ளிதான் வைக்க முடியுமே தவிர, நிறுத்தி வைக்க முடியுமா என்பதை நினைத்துப் பாருங்கள். ஆகவே உயிர் கொடைக்கு அஞ்ச வேண்டாம். குருதி சிந்த அச்சுற வேண்டாம். நமது ஒவ்வொரு அசைவும் இச்சகத்தை ஆட்டிப்படைக்க வேண்டும். அளவிடமுடியாத ஆற்றல் வாய்ந்த ஒரு இனம் இந்த பூமியில் சிறப்பு வாய்ந்த அரசை கட்டி அமைத்திருக்கிறது. இது சொல்லாற்றல் கொண்ட அரசல்ல. இந்த உலகில் எங்கெல்லாம் மாந்தம் இருக்கிறதோ, அங்கெல்லாம் மாந்தத்தை பூவாய் பார்க்கும் மெல்லிய மனது கொண்டவர்கள் தமிழர்கள். அவர்கள் எந்த நிலையிலும் குருதியை கண்டு மகிழ்பவர்கள் அல்ல. மாந்தத்தை மாண்புடன் பார்க்கும் மகத்தான மாவீரர்கள். யாரெல்லாம் மாந்தத்தை எதிர்க்கிறார்களோ, அந்த மாந்தகுல எதிரிகளை வீழ்த்த இந்த புவி பந்தின் காவலர்களாய் அவர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு காலத்தில் வரலாறு நம்மை குறித்து பேசும். அதை நோக்கித்தான் நமது பயணம். அதைதாண்டி தான் நமது சிந்தனை. ஆகவே, சொல், செயல், சிந்தனை அனைத்தும் ஒருமுகப்படுத்தப்படட்டும். அவை நமது லட்சிய கனவான தமிழீழத்தை அடைய நடைபயிலட்டும். நமது தேசிய தலைவரின் தலைமை தமிழீழத்தை அல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களின் தலைமையாகட்டும். தேசிய ஒடுக்குமுறை என்பது இந்த மண்ணின் வேறோடு அழிக்கப்படட்டும். உலகெங்கும் வாழும் தேசிய இனங்கள் தமது மொழி, அடையாளத்தை காத்துக் கொள்ள நமது போராட்டம்தான் அவர்களுக்கு உத்வேகத்தையும், மனநிறைவையும், அடங்கமறுக்கும் மனதிடத்தையும் தரவேண்டும். அதை செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. தேசிய தலைவரின் வழிகாட்டுதல், அவரின் ஆற்றல் வாய்ந்த சிந்தனை, மாந்த நேயம் மிக்க செயல்பாடுகள் இவையெல்லாம் ஒன்றிணைந்து நம்மை மாபெரும் இனமாக இந்த மண்ணை காக்கும் இனமாக அடையாளப்படுத்தும். அது தமிழீழத்தில் இருந்துதான் தொடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக