செவ்வாய், 11 மே, 2010

உள்ளுர், சர்வதேச அரசியலுக்குள் சிக்கியுள்ள இலங்கை இராணுவம்


உள்ளுர், சர்வதேச அரசியலுக்குள் சிக்கியுள்ள இலங்கை இராணுவ போர்க்குற்ற விசாரணை. இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின்போது நிராயுதபாணிகளாகச் சரணடைய முற்பட்ட போராளிகளையும், பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களையும் சுட்டுக்கொன்ற போர்க்குற்றக் குற்றச்சாட்டினை இதுவரை முற்றாக மறுதலித்துவந்த இலங்கை அரசு இது தொடர்பின் விசாரணைகளை மேற்கொள்ள படிப்பினை, நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒன்றை அமைக்க முன்வந்திருப்பதன் பின்னணியில்
பல்வேறு உள்ளூர் மற்றும் அரசியல் காரணிகள் பொதிந்திருப்பதனை அவதானிக்கலாம். புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில், ஜனாதிபதி அலுவலகத்தின் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை வெளியாகியிருக்கிறது. இலங்கை அரசபடைகளிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அசமந்தப்போக்கான விசாரணை முயற்சிக்கு மேலாக, இந்தவிடயம் தொடர்பில் ஐ.நாவில் அங்கம்வகிக்கும் முக்கிய நாடுகளின் தலைமையில் டப்ளினில் இடம்பெற்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டத் தீர்மானங்கள், மற்றும் ஜனநாயகத்திற்கான ஊடகவியளாளர் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஒளிநாடா தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் சுயாதீன விசாரணைகளும் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் தொடர்ந்தும் தலையிடியைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றதென்றால், முன்னாள் இராணுவத்தளபதியும், தற்போது பாராளுமன்ற உறுப்பினராகியும் இராணுவ நீதிமன்ற விசாரணைகளுக்கு முகம் கொடுத்துவரும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துவரும் கருத்துக்கள் மஹிந்த ராஜபக்ஷ அரசிற்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் கூட்டுச் சேர்ந்துதான் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவும் அவரது சகோதரர் தமிழின விரோதி கோட்டாபய ராஜபக்ஷவும் தமிழினத்திற்கு மட்டுமல்ல, மனித சமுதாயத்திற்கே எதிரான இந்தக் கொடிய அரச பயங்கரவாத நடவடிக்கையினை கடந்த 2009 மே மாத இறுதிப்பகுதியில் அரங்கேற்றி அதற்கு புலிப்பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தவெற்றி என்றும் பெயரிட்டு ஆர்ப்பரித்தனர். இதற்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ரஷ்யா போன்ற நேசநாடுகள் பாராட்டுப் பத்திரத்திரங்களையும் வழங்கியிருந்தன. ஆகவே, இந்த விடயம் தொடர்பில் ஜெனரல் பொன்சேகாவினால் வழங்கப்படும் சாட்சியங்களின் உண்மைத்தன்மையில் சந்தேகப்படுவதற்கோ அல்லது கேள்வியெழுப்புதற்கோ இடமில்லை. இலங்கை அரசின் போர்க்குற்ற மற்றும் மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வீட்டோ அதிகாரமுள்ள சீனா, ரஷ்யா போன்ற ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை கொண்ட நாடுகளின் தலையீட்டினாலும், பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையினை பெறத்துடித்துவரும் இந்தியாவின் இராஜதந்திர நகர்வுகளினாலும் இதுவரை கைகூடாத நிலையில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்முயற்சிகளாக, ஏனைய நாடுகள் டப்ளினில் கூட்டாக நடாத்திய மாநாடு மற்றும், ஜெனரல் சரத் பொன்சேகா, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போன்றோர் அமெரிக்கா சென்றபோது அங்குவைத்து இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் விசாரணை செய்யப்பட்ட நிகழ்வுகள் காணப்படுகின்றன. இலங்கை அரசபடைகள் தமிழர்களிற்கு எதிராக இழைத்த உரிமைமீறல் சம்பவங்களிற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை சர்வதேச அரங்குகளில் தடுத்துவரும் இந்தியாவிலும், இலங்கையில் இடம்பெற்ற இந்தப் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான மாநாடொன்று இடம்பெறவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்கால பிரச்சாரங்களின்போது ஜெனரல் சரத் பொன்சேகா இறுதி யுத்தமுனையில் இடம்பெற்ற போர்க்குற்றச் செயல்களிற்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் ஏனைய சில இராணுவ அதிகாரிகளுமே காரணம் என்றும் அவற்றின் மீது மேற்கொள்ளப்படும் எந்த விசாரணைகளிற்கும் தான் உதவப்போவதாகத் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்துதான், ஜெனரல் பொன்சேகா தேர்தலில் தோல்வியடைய வைக்கப்பட்டார், அதன் பின்னர் விசாரணை என்ற போர்வையில் கடற்படை தலைமையகத்தில் இராணுவ நீதிமன்ற விசாரணை என்னும் போர்வையில் தடுத்துவைக்கப்பட்டார், தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுவருகிறார். ஆனாலும், அதன்பின்னர் இடம்பெற்ற பாரளுமன்றத்தேர்தலில் ஜே,வி.பியுடன் கூட்டுச்சேர்ந்து பாராளுமன்றம் புகுந்த ஜெனரல் பொன்சேகா, இந்தப் போர்க்குற்ற விசாரணகளுக்கு முற்றுமுழுதாகத் தான் உதவப்போவதாகவும், அதற்காகத் தான் எந்தக் கட்டுப்பாடுகளையும் தாண்டிச் செயற்படத்தயாராக இருப்பதாகவும் மீண்டும் தெரிவித்திருக்கிறார். வியாழக்கிழமை பாரளுமன்ற வளாகத்தில்வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துவெளியிட்டுள்ள அவர், போர்க்குற்றம் புரிந்தவர்களைத் தான் அடையாளம் காட்டிக்கொடுத்துவிடுவேன் என்று மஹிந்த ராஜபக்ஷ அரசு மிகவும் கலங்கிப்போயிருப்பதாகவும், அப்பாவித் தமிழ் இளைஞர்களிற்கு அநீதி இழைத்த எவரையும் காப்பாற்றுவது நாட்டுப்பற்று ஆகாது என்றும், இது தொடர்பில் அதிகாரபீடத்தின் உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம்வரையுள்ள எவரையும் பாதுகாக்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அவர் கருத்துவெளியிட்ட இதே தினத்தன்றே, ஜனாதிபதி அலுவலகமும் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெற்ற மற்றும் மோதல்கள் இடப்பெற்ற காலப்பகுதிகளில் உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதனைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவிருப்பதாகத் தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த ஆணைக்குழு, அண்மைய போர்பற்றிய ஆய்வுகளின்மூலம், போர்க்காலகட்டத்தில் கடைப்பிடிக்கப்படவேண்டிய சர்வதேச நியமங்கள் எவையும், எவராலும் மீறப்பட்டுள்ளனவா என்பதனைக் கண்டறிந்து, அவற்றிற்குக் காரணமான தனிநபர் அல்லது குழு எது என்பதனை அடையாளம் காணும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த “கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவில்” உள்நாட்டிலும், வெள்நாட்டிலும் இருக்கக்கூடிய பல்துறைசார் நிபுணத்துவம்மிக்க சுமார் ஏழு இலங்கையர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அந்த ஆணைக்குழுவிற்கான நியமங்கள், வரையறைகள் குறித்த வர்தமானி அறிவித்தலொன்று விரைவில் வெளியாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆக, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் உள்ளுர் மற்றும் சர்வதேச அரசியல் அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளில் ஒன்றாகவே இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் நியமன அறிவிப்பையும் கருதவேண்டும். இலங்கையில் காலத்திற்குக்காலம் இவ்வாறான ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் பல பல்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்டிருந்ததும், அவை வெறுமனே சர்வதேச சமூகத்தின் காதில் பூச்சுற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட காலம்கடத்தும் கண்துடைப்பு நடவடிக்கைகளேயன்றி வேறல்ல என ஐயம் திரிபற வெளிப்படுத்தப்பட்டிருப்பதற்கு வரலாற்றுப் பதிவுகளே சான்றாகும். இதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மூதூரில் அரச படைகளினால் கோரமாகக் கொல்லப்பட்ட 17 சர்வதேச தொண்டர் நிறுவன ஊழியர்களின் கொலை மற்றும் திருகோணமலையில் ஐந்து மாணவர்களின் கோரக்கொலை உட்பட பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய முன்னாள் இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி கே. என் பகவதி தலைமையில் உருவாக்கப்பட்ட பன்னாட்டு நிபுணர்கள் குழுவின் செயற்பாட்டினையே உதாரணமாகக் கொள்ளலாம். ஜனாதிபதியினாலேயே உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட அந்தப் பன்னாட்டு நிபுணர்கள் குழு தனது இறுதி அறிக்கையில், இலங்கை அரசும், சட்ட மா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அதனது நீதித்துறையும், காவல்துறையும் இந்த விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவிட்டது மட்டுமல்ல, விசாரணைகளில் எதேச்சையாக தலையிட்டு வருவதனையும் சுட்டிக்காட்டி தனது விசாரணைளை இடைநடுவில் கைவிட்டுச் சென்றிருந்ததனையும் நினைவு கூரலாம். ஆகவே இந்த விசாரணைக்குழு சுயாதீனமாக எந்த விசாரணைகளையும் மேற்கொள்ளும் என்பதில் நம்பிகை வைக்க எவ்வித ஆதாரங்களும் கிடையாது. அதுவும் அரச படைகளிற்கெதிரான போர்க்குற்ற குற்றச்சாட்டில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக விளங்கும் ஜனாதிபதி தொடக்கம், பாதுககப்புச் செயலாளராக விளங்கும் அவரது தம்பி கோட்டாபய ராஜபக்ஷ போன்றோர் சர்வதேச நீதிமன்றொன்றில் போர்க்குற்றமிழைத்த குற்றவாளிகளாக முன்னிறுத்தக் கூடிய ஒரு விசாரணையை சுயாதீனமாகவும், பக்கச்சார்பில்லாமலும் நடாத்தும் என்பதில் இலங்கையில் வரலாறு தெரிந்த எவருமே நம்பிக்கை வைக்க மாட்டார்கள். ஆனாலும் மூத்த தமிழ் அரசியல் தலைவரான இரா. சம்பந்தன் ஐயாவிற்கு இந்த விசாரணைக்குழுவில் கணிசமானளவு நம்பிக்கை இருப்பது போல் தெரிகிறது. இதனால்தானோ என்னவோ, அவர் சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியொன்றில் அரசின் கடந்தகால செயற்பாடுகள் நம்பிக்கை தரக்கூடியவை இல்லை என்றாலும், இவ்வாறான முயற்சிகளை ஆரம்பத்திலேயே புறக்கணிப்பது, விமர்சிப்பது விவேகமானது அல்ல என்று கருத்து வெளியிட்டிருக்கிறார். இதனை நாம் பிறிதொரு பத்தியில் விரிவாக ஆராய்வோம். இங்கு கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விடயமென்னவென்றால், ஜெனரல் பொன்சேகா பாரளுமன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துவெளியிடுவதற்கு சிலதினங்களிற்கு முன்னர் சிங்கள இனவாத ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிற்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அளித்துள்ள பேட்டியொன்றில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை விரைவாக முன்னெடுக்கும் நோக்கில் ஜெனரல் பொன்சேகா தனது பாராளுமன்ற ஆசனத்தையும், சிறப்புரிமையையும் பாவிக்க முற்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு இலங்கையின் இறைமைக்கும், உறுதிப்பாட்டிற்கும் எதிராகச் செயற்படும் எவரும் துரோகிகள் என்றும், துரோகிகளிற்கு எதிராக ஆகக்கூடிய தண்டனை வழங்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது யாரும் முதலைக்கண்ணீர் வடிக்கக்கூடாது என்றும் ஆவேசமாகத் தெரிவித்திருக்கிறார். இவரது இந்தக் கருத்தானது ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிர்காலத்தினை மட்டுமல்ல, ஜெனரல் பொன்சேகாவின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே கேள்விகுள்ளாக்கியிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில், உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச அரசியலிற்குள் அப்பாவித் தமிழ் மக்கள் மீதும், சரணடைய நிராயுதபாணிகளாக முன்வந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச போர்க்குற்றக் குற்றச்சாட்டு சிக்கியிருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

2 கருத்துகள்: