சனி, 12 ஜூன், 2010

ஆயுதக் குழுக்களிடம் இருந்து சகல ஆயுதங்களையும் களைய வேண்டும்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும் சட்ட விரோத ஆயுதக் குழுக்களிடம் இருந்து சகல ஆயுதங்களையும் களைய வேண்டும் என யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான விஜயகலா மகேஸ்வரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளினால் யாழ். மாவட்டத்தில் படுகொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் அதிகரித்துச் செல்கின்றன.ஆயுத குழுக்களினால் அப்பாவி மக்களிடமிருந்து வரிகளும் கப்பங்களும் அறவிடப்படுகின்றன.

உயிர்வாழ்வதற்கா இந்த ஆயுதக் குழுக்கள் இவ்வாறான குற்றச்செயல்களை மேற்கொண்டு வருகின்றன என்பதுடன் எனது கணவர் குறித்து பேசுவதற்கு ஆயுதக்குழுவைச் சேர்ந்த எவருக்கும் அருகதை இல்லை என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆயுதங்களை பதிவு செய்தல் தொடர்பான தனிநபர் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விஜயகலா எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எனது கணவர் மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டு இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் குற்றவாளியை நீதியின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கத்தினால் முடியவில்லை.

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்கு படுகொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன.

இவற்றுக்கு சட்டவிரோத ஆயுதக் குழுக்களே காரணம். அந்த குழுக்களின் சட்டமே அங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான குழுக்களைச் சேர்ந்தவர்கள் எனது கணவரைப் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக