சனி, 12 ஜூன், 2010

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை?????????

வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், போருக்குப் பின்னர் சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட அதிகரிப்பின் பயன்களை வடக்கிலுள்ள சிறிய வர்த்தகர்கள் அனுபவிக்க முடியாமலுள்ளது என யாழ் வர்த்தகர் ஒருவர் முறையிடுகிறார்.



இவ்வாறு கொழும்பு ஊடகமான சண்டே லீடர் தெரிவித்துள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


வடக்கிற்குப் பயணிக்கும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் பயண அனுமதியினைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என இராணுவம் தெரிவிக்கிறது.


பாதுகாப்பு அமைச்சின் பயண அனுமதியைப் பெறுவதிலுள்ள சிரமங்களை எதிர்கொள்வதற்குப் பதிலாக வடக்கிற்கான பயணத்தையே தாம் தவிர்த்துவிட்டதாக அநேகமான வெளிநாட்டுப் பயணிகள் சண்டே லீடரிற்குத் தெரிவித்தனர்.


ஓமந்தைக்கு அப்பால் பயணிக்கும் வெளிநாட்டுப் பயணிகளிடம் பாதுகாப்பு அமைச்சின் பயண அனுமதியைக் கோருகிறது ஓமந்தையிலுள்ள காவல் நிலையம்.


"சிறிலங்காவிற்கான எமது குறுகிய நாள் பயணத்தினுள் இவ்வாறான அனுமதிகளைப் பெறுவதில் எமது நேரத்தை வீணாக்க நாம் விரும்பவில்லை. நாம் சிறிலங்காவுக்கான நுழைவு அனுமதியைப் பெற்றுள்ளோம். வடக்கினுள் நுழைவதற்கு இன்னொரு அனுமதி பெறவேண்டும் என்று கூறுவது அர்த்தமற்றது", என கனேடியர் ஒருவர் சண்டே லீடரிடம் முறையிட்டார்.


"இது ஒருநாடு என்றே கருதப்படுகிறது. ஏன் அரசாங்கம் யாழ்ப்பாணத்தை இவ்வாறு நடாத்துகிறது? வெளிநாட்டுப் பயணிகள் வடக்கிற்குப் பயணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் பயண அனுமதியைக் கோரும் நீங்கள் எவ்வாறு நாங்கள் இலங்கைப் குடிமக்கள்போல நினைக்கவேண்டும் என எதிர்பார்க்கலாம்?", என்று கேட்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ராசையா.


இந்த நடவடிக்கையால் தாம் பாரபட்சமாக நடாத்தப்படுவதாக பெரும்பாலான தமிழ் மக்கள் நினைக்கின்றனர்.


"அனைத்து வெளிநாட்டு வருமானங்களும் தெற்கிற்கே கிடைக்கவேண்டும் என அரசாங்கம் இவ்வாறு செய்யக்கூடும்" என்று முறையிடுகிறார் யாழ்ப்பாணத்தின் விடுதிப் பணியாளர் ஒருவர்.


விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகள் வடக்கிற்கு ஊடுருவுவதிலிருந்து பாதுகாப்பதற்கானதே இந்த நடவடிக்கை என இராணுவ அதிகாரி ஒருவர் சண்டே லீடரிடம் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக