புதன், 16 ஜூன், 2010

வீரப் போராளிகளே! வாழ்த்துகிறோம் -கண்மணி

பலமுறை நாம் கூறுகிறோம், மொழி என்பது நமது அடையாளம் என. மொழி குறித்த ஒரு பார்வை, அதன் உள்ளடக்கம், புறத்தன்மைகள் இவைகள் ஒரு இனத்தின் உயிர்நாடி என்பதை மறுக்கமுடியாது. செம்மொழி மாநாடு நடத்தும் இந்த காலத்தில் நாம் இதை அழுத்தமாக பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். அடக்குமுறைகள், அநியாயங்கள், அட்டூழியங்கள் அனைத்தையும் தாண்டி, மொழி வாழ வேண்டும் என்று யார் மனதில் அக்கறையும் ஆவேசமும் நிலைக்கொண்டிருக்கிறதோ,
அவர்கள் இன அடையாளத்தின் கண்களாக இருப்பார்கள். மொழி என்பது தேசிய இனங்களை நிலை நிறுத்தும் ஒரு பண்பு. தேசிய இனங்கள் குறித்த பார்வை மார்க்சியத்தின் அடிப்படை தன்மையாகும்.
தேசிய இனங்களின் மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத, அதற்காக போராடாத எவரும் எல்லாவிதமான தேசிய இன ஒடுக்குமுறையையும், சமத்துவமின்மையையும் எதிர்த்துப் போராட எவரும் மார்க்சியவாதி அல்ல, சனநாயகவாதியும் அல்ல, அது சந்தேகத்துக்கு இடமில்லாதது. (தேசிய இனப் பிரச்சனைப் பற்றிய விமர்சன குறிப்புகள் என்னும் நூலிலிருந்து...). ஆக, தேசிய அடையாளத்தின் அடிப்படைத் தன்மைகளை நாம் உளமாற நேசிக்க வேண்டும். தாய் மொழிக் குறித்த பற்றும், தாய் மொழி அதன் தேவை குறித்த தொலைநோக்கும் நம்மிடம் தொலைந்து போன காரணத்தால் நாம், நமது இன அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்றுவரை இன்னமும் ஊன்றி, செழித்து வளர்வதற்கு மொழி குறித்த பார்வை, அதன் உள்வெளி தோற்றம் ஆகியவைப் பற்றிய தெளிவான சிந்தனை மேதகு தேசிய தலைவர் அவர்களிடம் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. எந்த நிலையிலும் தமது மொழியை விட்டுக் கொடுக்க முடியாத அளவிற்கு நாம் தாய்மொழியை நேசிக்க வேண்டும். இப்படி கூறுவது சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது. இது மொழி வெறி என்று கூப்பாடு போடுவார்கள்.
தமிழ்நாட்டில், தமிழர் என்று கூறிக்கொள்பவர்கள், தமிழ் மொழி பேசுவதை கேவலமாகக் கருதக்கூடிய போக்கு வளர்ந்து வருவது கவலைத் தருவதாக இருக்கிறது. இளைஞர்கள் முழுக்க முழுக்க ஆங்கிலம் கலந்த உரையாடலை நாகரீகம் என கருதக்கூடிய கீழ்த்தரமான சிந்தனை செழித்தோங்கி வளர்கிறது. மூலைக்கு மூலை ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்கள், அதிலே தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் எண்ணத்தோடு வரிசையில் நிற்கும் பெற்றோர்கள் பெருகி விட்டார்கள். இந்த ஆங்கில மோகம் வளர்வதற்கு தி.மு.க.அரசே பெரும் துணை புரிந்தது என்பதை அவர்கள் மறுத்தாலும் உண்மை என்பது மாற்ற முடியாதது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த 1967ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இரண்டு கழகங்கள்தான் தமிழ்நாட்டின் ஆட்சியை மாறி மாறி அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை தமிழை ஆட்சி மொழியாக்கக்கூடிய துணிவு, திறன், இரண்டு கழகங்களுக்கும் இல்லாதது நமது இயலாமையையே எடுத்தியம்புகிறது. முத்தமிழ் வித்தகர், முத்தமிழ் அறிஞர் என்றெல்லாம் பெயர் சூட்டிக்கொள்ளும் ஒரு தலைவரை அரசத் தலைவராக கொண்டுள்ள ஒரு நாட்டில், தமிழ் குடிசை மொழியாகத்தான் இருக்கிறதே தவிர, அது ஆளும் திறன் வாய்ந்த மொழியாக இன்றுவரை வளர்த்தெடுக்கப்படவில்லை. ஆனால் மொழி குறித்துப் பேசி தம்மை வளர்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. இதற்கு அடையாளமாக உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக மாற்றக்கோரி, கடந்த ஏழு நாட்களாக மதுரை வழக்கறிஞர்கள் உண்ணாநிலை அறப்போராட்டத்திலே தம்மை அர்ப்பணித்துக் கொண்டு களமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டு களமாடிக் கொண்டிருக்கும் இந்த போராளிகள் உடல்நிலை நாளுக்குநாள் வாடிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு நாட்டில் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக குழுமியிருக்கும் தமிழ்நாட்டில் வழக்காடுவதற்குக்கூட தமது தாய்மொழியில் வாய்ப்பு இல்லாத கேடு நிலை இருக்கின்ற இந்த சூழலில்தான் செம்மொழிக்கு ஒரு மாநாடு தேவைப்படுகிறது. கடந்த 2006 டிசம்பர் 6ந்தேதி தமிழக சட்டப்பேரவையிலே உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடும் மொழியாக இருக்க வேண்டும் என்கின்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும்கூட கேணியில் போட்ட கல்லாக அந்த தீர்மானம் கிடக்கிறது. இன்றுவரை நடுவண் அரசு இதைக் குறித்து அக்கறை கொண்டதாகவோ, அல்லது அது தேவை என்பது குறித்தோ ஒரு சிறு சலசலப்புக்கூட இல்லாத நிலையில்தான் இருக்கிறது. முத்தமிழ் அறிஞரின் ஆட்சியிலே தீர்மானத்தை அனுப்பியதோடு, தீர்மானத்தின் நகல்களை தலைக்கு தலையணையாக வைத்து உறங்கிக் கொண்டிருக்கிற காரணத்தினால்தான் இதுவரை இந்த தீர்மானம் உயிர்பெறாமல் கொஞ்சம் கொஞ்சமாய் சாவு நிலைக்குச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதை மாற்ற வேண்டும் என்பதற்காக சாவு நிலைக்கு சென்றுக்கொண்டிருக்கும் இந்த வழக்கறிஞர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை தமிழ்நாடு அரசு அமைதி காக்கும் நிலை ஏன் என்பது புரியவில்லை. தமது தமிழ் மேல் கொண்ட பற்றால் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் தம்மையே வருத்திக் கொண்டு, தமிழீழ விடுதலைப் போராட்ட போராளி திலீபன் வகுத்தப் பாதையிலே தமது பாதத்தை பதிவு செய்திருக்கும் வழக்கறிஞர்கள் பகத்சிங், நடராசன், ராசேந்திரன், எழில் அரசு, பாரதி மற்றும் ராசா ஆகியோர் இறுதிவரை தமது நிலையிலிருந்து தம்மை மாற்றிக் கொள்ளாமல் களத்திலே உறுதியாக நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் கேட்பது அநீதியானதோ, சட்டத்திற்கு புறம்பானதோ, அல்லது அரசுக்கு எதிரானதோ இல்லை. அடிப்படையில் தமிழராக இருப்பவர்கள், தமிழில் வழக்காட வேண்டும் என்ற நிலை இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? இதை ஏன் தமிழ்நாடு அரசு கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது? என்கிற கேள்வி இயல்பாக எல்லோருக்கும் எழக் கூடியதுதான். மாவட்ட நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக இருக்கும் தமிழ், அதன் தொடர்ச்சியாய் உயர்நீதி மன்றத்திலும் நீடிக்க வேண்டும் என்பதே மேற்கண்ட போராளிகளின் நிலையாக இருக்கிறது. இது அரசால் கண்டுக்கொள்ளாமல் இருப்பது நமக்கு பெரும் வெறுப்பையும், மொழி குறித்த அக்கறை இல்லாத அரசின்மீது எரிச்சலையுமே உண்டாக்குகிறது. மொழியைப் பொறுத்தமட்டில் நம் இனம் காக்கப்படுவதற்கான அடையாளம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
சோவியத் கவிஞன் ரசூல் கம்சோடா தமது கவி வரிகளிலே மொழி குறித்த தமது பார்வையை மிக சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். அவர் அவார் என்கின்ற மொழியை தாய் மொழியாகக் கொண்டவர். இந்த மொழி சற்றேறக்குறைய 4 லட்சம் மக்கள் மட்டுமே பேசக் கூடிய மொழி. ஆனால் தமிழ் அப்படியல்ல. 10 கோடி மக்களுக்கு மேல் பேசக்கூடிய ஒரு மொழியாக தமிழ் இருக்கிறது. மொழி குறித்து எழுச்சி ஏற்படும்போதெல்லாம் அது இனவாத அடையாளம், குறுகிய மனப்போக்கு என்றெல்லாம் விமர்சனங்களை வைக்கும் சில அதிமேதாவிகளுக்கு ரசூலின் கவிதை பதில் தருகிறது.
மலை நீரோடையும்
அதன் எதிரொலிகளும்
கடந்து செல்லும்
குன்றுகளில்
நான் வளர்ந்தேன்.


என் தொட்டிலில்
குனிந்தபடி
என் தாய் எனக்கு
அவார் மொழியில்தான்
தாலாட்டு இசைத்தாள்.
அந்த தாலாட்டுகளையும்
குழந்தைப் பருவத்தில்
அறிந்த கதைகளையும்
நான் நேசிக்கிறேன்.


ஆயினும்
புதிய காட்சிகளுக்காகவும்
புதிய நண்பர்களுக்காகவும்
மற்றோர் மொழிக்கு
நான் முழுமையாக
கடன் பட்டுள்ளேன்.
இம்மாபெரும் கொடையுடன்
சோவியத் முழுக்க
நான் உலா வருவேன்.


இது விளாதிமிர் லெனின்
எழுதிய, பேசிய
வல்லமை வாய்ந்த மொழி.
இம்மொழியை
மலைகளிலிருந்து வந்த நான்
என் தாய் மொழியை
நேசிப்பது போலவே
நேசிக்கிறேன்.


இந்த வரிகள் நம்மை உலுக்கி எடுக்கிறது. தாய் மொழி குறித்த ஒரு விசாலப் பார்வை நம்மை நகர்த்திச் செல்கிறது. தேசிய இனங்களுக்கான மொழி அங்கீகாரத்தை ரசூல் உரிமையோடு கோருவதை நாம் மகிழ்வோடு அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறோம். தோழர் லெனினும்கூட தேசிய இன அடையாளத்திற்காக, தேசிய இனங்களின் உரிமைகளுக்காக இறுதிவரை போரிட்டார். அதுதான் லெனின் என்னும் மாபெரும் ஆற்றல்வாய்ந்த தலைவனாய் இன்றுவரை அவரால் நீடிக்க முடிகிறது. ஆனால் மொழி குறித்த பார்வை சிறிதும் இல்லாமல், மொழி குறித்த அடையாளம் தம்மேல் பதிவு செய்யாமல், தம்மை வேற்று மனிதராய் பாவித்துக் கொள்ளும் கொடுமைக்கார தமிழர்கள் வாழ்ந்து கொண்டுத்தான் இருக்கிறார்கள். மொழி தேசியத்தை வைத்து ஆட்சியை பிடித்த கழகங்கள் இந்த மொழியை காப்பதற்கான எவ்வித செயலையும் இதுவரை செய்யவில்லை.
நடக்க இருக்கும் செம்மொழி மாநாட்டின் களத்திற்காக, வர்த்த நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்கின்ற சட்டம் போட்டு, தமிழை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கேடுநிலை தமிழுக்கு நேர்ந்ததே, இதற்குக் காரணம் தமிழகத்தின் ஆட்சியாளர்கள்தான் என்பதை நேரிடையாக குற்றம் சுமத்துகிறோம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய இந்த 43 ஆண்டுகளில் இந்த அரசு முயற்சித்திருந்திருக்குமேயானால், கீழ் மட்டத்திலிருந்து உச்சிவரை தமிழ் செழித்து வரலாறு படைத்திருக்கும். ஆனால் திரைப்படங்களுக்குக்கூட மானியம் கொடுத்து தமிழ் பெயர் வைக்கச் சொல்லக்கூடிய கேவலம்தான் இந்த நாட்டிலே நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.
தமது தாய் மொழியைக் காப்பாற்ற களம் கண்டிருக்கும் வழக்கறிஞர்களின் வீர போராட்டத்திற்கு நாம் வாழ்த்து தெரிவிக்கிறோம். இந்தப் போராட்டம் தமிழ்நாடெங்கும் பற்றி எரிய வேண்டும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும். இது நம் தாய் மொழிக்கு உயிர் வளி தரும் ஒரு உன்னதப் போராட்டம். இதை அங்கீகரிப்பதின் மூலம் நமது செயல்பாடு எழுச்சி பெறும். மொழி ஆளுமை செழித்து எழும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எமது தேசியத் தலைவர் மொழி குறித்த தமது எண்ணங்களை மிக உயர்வாக பதிவு செய்தார். மொழி ஆளுமையை அவர் உயர்த்திப் பிடித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு நாம் வாழ்த்து சொல்லும்விதமாக மீண்டும் தோழர் ரசூலின் கவிதையை பதிவு செய்கிறோம். இந்தக் கவிதை அவருடைய கனவு போல் விரிகிறது.
தாம் செத்துப் போவதுபோல அவர் கனவு காண்கிறார். அதன் பிறகு அவர் உயிர் பிழைப்பதற்கு அவரின் தாய் மொழியே துணை புரிந்ததாக சொல்லும் வரிகள் நமது ரத்த ஓட்டங்களை விரைவடையச் செய்கிறது. உயிரணுக்களின் எண்ணிக்கை உயர்ந்து நிற்கிறது. கவிதையை நீங்களே வாசித்துப் பாருங்கள். அந்த கவிஞன் தமது உறவினர் அற்ற ஒரு மலைஅடிவாரத்தில் மயக்கமுற்று விழுந்து கிடக்கிறான். எவரும் அவனை காப்பாற்ற முடியாத ஒரு நிலை. செத்துப்போவோமோ என்று கண்ணயர்ந்துக் கொண்டிருக்கும்போது என்ன நிகழ்கிறது என்பதே கவிதையின் உள்ளடக்கம். இது கவிதை என்று சொல்வதை விட, மொழியின் உயிர் வரிகளாக நமக்குத் தெரிகிறது.
கவனிப்பாறற்று,
புலம்புவாறற்று
சாகவும் நான்
தயாரானேன்.
அந்நேரத்தில்
இரண்டு மனிதர்கள்
என் தாய்மொழியில்
பேசிய படி சென்றார்கள்.


அவர்களின் அவாச்
சொற்களைக் கேட்டபோது
எனது வலிமை மீண்டும்
எம்மிடம் பாய்ந்தது.
இது மருத்துவர்கள்
அறிந்திராத சிகிச்சை.


மற்ற மொழிகள்
மற்றவர்களை
குணப்படுத்தட்டும்
அவற்றுக்கே
உரிய வழிகளில்.
நாளை அவார்மொழி
மடியுமானால்,
இன்றே நான்
மடிந்துப் போவேன்.


ஆட்சி மொழியாக
இது வழங்கப்படாதிருக்கலாம்.
ஆயினும்,
இது நான் தேர்ந்துக்
கொள்ளும் மொழி.
எனக்கு அவார் தான்
மாபெரும் மொழி.


இந்த வாழ்க்கையை
நேசிக்கிறேன்.
இப்பேருலகை
அன்புடன் நோக்குகிறேன்.
அனைத்திலும் மேலாக
சோவியத்தை நேசிக்கிறேன்.
அதை அவார் மொழியில்
பாடுவேன்.


கிழக்கிலிருந்து
மேற்குவரை விரியும்
உழைக்கும் மக்களின்
விடுதலை நாட்டுக்காக
நான் செத்துப்போவேன்.
ஆயினும், அவார் மண் தான்
நான் அமைதி கொள்ளும் கல்லறை.


அவார் சொற்களில்
அவார் மொழி கவிஞனும்
கவிஞன் வாரிசுமாகிய
ரசூலைப் பற்றி பேசட்டும்.
இந்த கவிதை வரிகளை ஆழ்ந்து படித்தால் நமது மொழிப் போராட்டத்திற்கான உள்மனதை புரிந்து கொள்ள முடியும். மொழிக்காக போராடும் வீரப்போராளிகளுக்கு மீண்டுமாய் நமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக