புதன், 16 ஜூன், 2010

அமெரிக்கா எண்ணெய்க் கசிவு....?!!!!!

 எல்லாரும் கேள்விப் பட்டிருப்போம். வளைகுடா மெக்சிகோ கடலில் கச்சா எண்ணெய்க் கிணறு வெடித்து ஒரு நாளைக்கு சராசரியாய் 20,000 பீப்பாய்கள் அளவிலான கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்து வருகிறதென.

நம்மூர்ச் செய்தித் தாள்கள் பெரிய அளவில் இதனைப் பற்றி எழுதியாக எங்கும் தெரியவில்லை. அவர்களுக்கு ஜோடனையில் திரித்து செய்திகள் கொடுப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் பொழுது, உண்மையான விசயங்கள் குறித்து ஆராய்ந்து மக்களுக்கு செய்தி கொடுப்பதற்கு ஏது நேரம்.


அது ஒரு பக்கம் இருக்கட்டும். கடைசியாக பெரிய அளவில் இது போன்ற கடல் நீர் மாசுபாடு 1989ல் எக்‌ஷான் வால்டெஷ் என்ற கப்பல் சுமாருக்கு 11 மில்லியன் அளவிலான கச்சா எண்ணெய்யை கடலில் கொட்ட நேர்ந்ததாம், அதுவும் சூழலியல் முக்கியத்துவமுற்ற பகுதியில். அதற்கு பிறகான மிகப் பெரிய சுற்றுச் சூழல் சீரழிவு என்றால் அது கடந்த இரண்டு மாதங்களாக நடந்தேறும் இந்த BP (British Petroleum) கம்பெனிக்கு சொந்தமான எண்ணெய் கிணறு விபத்துதான்.


இது ஒரு ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்கும், மற்றுமொரு மனிதப் பேராசைத் திட்டம். இந்த விபத்தினையொட்டி இன்னமும் வெடித்த குழாய் அடைக்க முடியாமல் போக, இன்றைய அமெரிக்கப் அதிபர் பல் வேறுபட்ட அரசியல், அறிவியல் விற்பன்னர்களாலும் விமர்சிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், எனக்கு என்ன புரியவில்லையென்றால் இந்தக் கிணறு யாருடைய ஆட்சிக் காலத்தின் போது ‘ஒகே’வென’ கையெழுத்தானது, அந்த சமயத்தில எது போன்ற திட்ட விவர்னகைகள் இது போன்றதொரு விபத்து நிகழ்ந்தால், அதனை சமாளிக்கும் விதமாக திட்டம் இருப்பதாக விளக்கியிருப்பார்கள் போன்ற கேள்விகள் எல்லாம் எழும்பாமல், என்னமோ இன்றைய அதிபர் அந்த குழாய் வெடிப்பை அவரே மூச்சடைச்சு, ஆழ்கடல் சென்று அடைத்து விட வேண்டுமென்ற பிம்பத்தை வழங்கி தினமும் தொலைகாட்சிகளில் பேசிவருவது செமையா எரிச்சலூட்டுகிறது.


எது எப்படி இருப்பினும், இந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்து வரும் வேகம் உண்மையிலேயே மிகவும் கவலை அளிக்கக் கூடியது. இது உலகம் தழுவிய முறையில் அதன் பலன்களை அனுபவிக்கக் கூடிய ஒரு மாபெரும் சீரழிவை பெருக்கித் தரும் நிகழ்வு. இந்தக் கழிவு பல்வேறு வகையில் கடல் வாழ் மற்றும் அதனையொட்டிய கரையோர சுற்றுச் சூழலில் பெரிய மாற்றங்களை சங்கிலித் தொடர் போல ஏற்படுத்தும் வல்லமை பெற்றது.


மேலும், இந்தக் கழிவு ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு காற்றின் திசையினைக் கொண்டு கடல் நீர் பயணிக்க இருப்பதால் உலகின் மற்ற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் ஆபாயமிருக்கிறது. சரி, இந்த விபத்தினால் எது போன்ற மாற்றங்களை, பேரழிவுகளை உயிரினங்களும் நாமும் இன்று அனுபவித்திக் கொண்டிருக்கிறோம்; சிலவைகளை மட்டும் பார்ப்போமா...


- எண்ணெய், நீருடன் கலக்கும் பொழுது அது வேதிய மாற்றத்திற்கு உட்பட்டு "mousse" என்ற பிசு பிசுப்பான நிலையைடைந்து விடுகிறதாம். அந்த நிலையில் எது போன்ற ஜீவராசிகள் அதன் அருகாமைக்கு தள்ளப்பட்டாலும் யோசிச்சுப் பார்த்துக்கோங்க... கதை இப்படித்தான் ஆயிப் போகும்.


- பறவைகளில் ஹைபோதெர்மியா வந்து சிறகுகளின் வெப்பச் சுழலேற்றத்தை தடுப்பதின் மூலம் அவைகள் நீரில் மூழ்கும் வாய்ப்பும், பறக்கும் திறனை இழந்து விடுகிறது; சிறகுகளில் எண்ணெய் ஏறி ஹெவியாகி விடுவதால்.


-மற்ற கடல் வாழ் பாலூட்டிகளின் (seal) குட்டிகளுக்கு கூட ஹைபோதெர்மியாவைக் கொண்டுவருகிறதாம்.


- எண்ணெய், உணவுடன் உட்கொள்ளப் படும் பொழுது நேரடியாக நச்சு உணவாகிப் போய்விடுகிறதாம்; அப்படியே இல்லை என்றாலும் நோய் வாய் பட்டு இறக்க நேரிடுகிறது. மேலும் உணவுச் சங்கிலியில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு சென்று விடுவதாகவும் அறிகிறோம். பவளப் பாறைகளும், shelfishகளும் நேரடியாக தப்பிப் பிழைப்பதற்கு வேறு வழியின்றி பேரழிவை சந்தித்து விடுகிறது.


- பறவைகள் மற்றும் விலங்குகளின் சுவாச மண்டலத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதித்து விடுகிறது.


- இனப்பெருக்கம் செய்வதில் தடை ஏற்படுத்துவதுடன், இனப் பெருக்கம் செய்யும் சுற்றுச் சூழல் பகுதிகளையும் கெடுத்து விடுகிறது நீண்ட நெடிய காலத்திற்கு.


- பறவைகள் மற்றும் கடல் ஆமைகளின் முட்டை ஓடுகள் மெலிவடைய வைத்து விடுகிறது. மீன்களின் லார்வாக்களில் குறைபாடுகளையும் உருவாக்கக் காரணமாகிவிடுகிறது.


- கடற் புற்கள், மற்ற உணவளிக்கும்/பாதுகாப்பு பகுதியாக விளங்கும் கடற் தாவரங்களின் மீதாகவும் இதன் விளைவுகளை விட்டுச் செல்வதுடன், பூஞ்சைக் காளன்களின் மீதும் கை வைத்து விடுவதால், நீரின் மொத்த (பிராணவாயு இழப்பின் மூலமாக) சூழலியத்தையே மாற்றியமைத்ததாகி விடுகிறது.


இத்தனைக்கிடையிலும், என்னைச் சுற்றிலும் இன்னும் மக்கள் நம்பிக் ொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தே வருகிறது, இது ஒன்றும் புதிதல்ல என்று; பெரிதாக கவலைப் படுவதற்கில்லை என்று வாதிடுகிறார்கள். அது போன்று ஒரு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மேலே சொன்னவாரு தன்னுடைய ஜால்ஜாபினை முன் வைத்தார் ஒருவர். அவரிடத்தில் நான் சொன்ன ஒரு விசயம், ஆய்வுக் கூடங்களில் நாம் ஒரு வேதியப் பொருளை மற்றொரு வேதியப் பொருளுடன் குறிப்பிட்டளவு கலக்கும் பொழுது அதன் மூலமாக நாம் விரும்பிய மாற்றத்தை அடைய வைக்கிறோம் அல்லது தானகாவே அது வேறு ஒரு விளைவாக நிறமூட்டிக் காமித்துக் கொள்கிறது - அது போன்றே நாம் இழைக்கும் அத்துனை அநீதிகளுக்கும் இந்த பூமி என்ற பெரிய ஆய்வுக் குடுவை ‘போதும்’ என்ற நிலையை அடைய எந்தக் கடைசி குத்து மல்யுத்த வீரனைச் சாய்ப்பதற்கு இணையாக சாய்க்க வல்லதாக இருக்கப் போகிறதோ அன்று உணர்ந்து கொள்வோம், நம்முடைய தத்துப்பித்து காரணங்களுக்கான உண்மையான விளைவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக