புதன், 16 ஜூன், 2010

யுத்தம் முடிவுற்ற கையோடு சமாதானம் மலர்ந்து விட்டது என்பது ?????!!!!!!!!..........

பிரதானமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து இராணுவ ரீதியிலும் வேறு வழிகளிலும் தாராளமாகப் பெற்றுக்கொண்ட உதவிகளுடனே சென்ற வருடம் மே மாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டும் என்பதற்கில்லை.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதோடு, நாட்டுக்குச் சமாதானம் கொண்டு வரப்பட்டுள்ளதெனவும் அரச தரப்பினரால் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரசாரம் செய்யப்பட்டு வருவதையும் காணலாம். அதேநேரத்தில், நாட்டில் ‘புலிப்பயங்கரவாதம்’ ஒழிக்கப்பட்டு விட்டாலும் கூட சர்வதேச ரீதியிலும் அதனை ஒழித்துக்கட்ட வேண்டிய அவசியம் உண்டு எனவும் அரச தரப்பிலிருந்து அல்லும் பகலும் அலட்டிக்கொள்ளப்பட்டு வருவதைக் காணலாம்.


வெளிநாடுகளில் இயங்கி வருவதாகக் கூறப்படும் ‘தமிழ்ப்பிரிவினைக் குழுக்கள்’ தொடர்பாக எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அறிக்கை விடுத்திருந்தார். அதாவது அரசாங்கம் ஒவ்வொரு அங்குலத்தையும் மீளக் கைப்பற்றியதோடு, சமாதானத்தையும் மீட்டுள்ளதாயினும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தொடர்புபட்டுள்ளதாகிய 30 வருட நீண்ட நெடுங்காலப் பிரச்சினை ஒன்றினையே கடந்து வருகிறோம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.


நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE ), உலகளாவிய தமிழ் மன்றம் (GTF) மற்றும் பல தமிழ் அமைப்புகள் ஜனநாயக ரீதியில் இயங்கிவருகின்றன என்று காரணம் கற்பிக்கப்பட்டாலும் அவையாவும் முன்னாள் விடுதலைப்புலிகள் தரப்பினராலேயே வழிநடத்தப்பட்டு வருகின்றன என்றே கோதாபய கூறியுள்ளார்.


எனவேதான் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இராணுவ ரீதியான கட்டம் முற்றுப்பெற்றுவிட்டதாயினும் வேறானதொரு அடுத்த கட்டம் வேறானதொரு கோணத்தில் தொடரப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இயல்பு நிலையை மீட்டு சமாதானத்தின் முழுமையான பலாபலன்களையும் மக்களுக்கு அளிப்பதற்கான பற்றுறுதியினை அரசாங்கம் கொண்டிருந்தபோதும் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினர், பொலிஸ் தரப்பினர் மற்றும் புலனாய்வுத் துறையினர் மூலம் சில நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்றெல்லாம் கோதாபய குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். இதுவொரு அரசியல் நோக்கற்றதும் அரசியல் தீர்வுதான் பயங்கரவாதத்திற்கு விடைகொடுக்கவல்லது என்னும் கண்ணோட்டம் அற்றதுமான போக்கு என்பதைச் சொல்லத் தேவையில்லை.


யுத்தம் முடிவுற்ற கையோடு சமாதானம் மலர்ந்து விட்டது என்பது வேடிக்கையானது


மேலும், யுத்தம் முடிவுற்ற கையோடு சமாதானம் வந்துவிட்டதென அரசாங்க முக்கியஸ்தர்கள் மட்டுமல்லாமல், பல சிங்கள புத்திஜீவிகள் மற்றும் அநேகமான சிங்கள, ஆங்கில ஊடகத்துறையினரும் பறைசாற்றி வருவதைக் காணலாம். இதுதான் மிக மிக வேடிக்கையானதும் கவலைக்குரியதுமாகும். அதாவது அடிப்படைப் பிரச்சினையாகிய தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ளதும் ஏற்புடையதுமான அரசியல் தீர்வுதான் உண்மையான சமாதானத்திற்கான திறவுகோல் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதைவிடப் புரிந்துகொள்ள மறுத்து வருகிறார்கள் என்று ஆணித்தரமாகக் கூறலாம்.


‘தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தோற்றுவித்ததற்குக் காரணமாயிருந்ததும் தொடர்ச்சியாகக் கையாளப்பட்டு வந்ததுமாகிய அரச பயங்கரவாதம் தொடர்பாக இவர்கள் வாய் திறப்பதில்லை. சிங்களப் பேரினவாதமும் அரச பயங்கரவாதத்தின் மறுவடிவம் என்பதை யாரும் மறுதலித்துவிட முடியாது’.
 வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களின் வழிகாட்டலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) அமைப்பது தொடர்பாகப் பாதுகாப்புச் செயலாளர் கூறும்போது அது மிகவும் பாரதூரமான விடயம் என்பதால் அதற்கெதிராக அடுத்த கட்ட யுத்தம் நடத்தப்பட வேண்டுமெனக் கூறியுள்ளதைப் பார்ப்போமாயின், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குக் கிஞ்சித்தும் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பது நன்கு புலனாகின்றது.


அதனை மூடி மறைப்பதற்கு ஏமாற்று வித்தை கற்பித்து, காலம் கடத்தும் நோக்கிலேயே அரசாங்கம் காய்கள்நகர்த்தி வருகின்றது. 
இலங்கையில் விசம் போல் உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவு போன்ற பாரதூரமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் அல்லலுறும் பெருந்தொகையான குறிப்பாக ஏழை எளிய சிங்கள மக்களைத் திசை திருப்பும் நடவடிக்கையாகவே இலங்கை அரசாங்க உயர்மட்டத்தினர் சூழ்ச்சியான பிரசாரத்தினை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்பது கண்கூடு.


வெளிநாட்டுத் தூதுவர்கள் மத்தியில் ஜனாதிபதி உரை


அண்மையில் குறிப்பாக இது விடயமாக வெளிநாட்டுத் தூதுவர்களை ஜனாதிபதி ராஜபக்ஷ அழைத்து உரையாற்றினாரல்லவா? 9/11 தாக்குதலைத் தொடர்ந்து அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் முடுக்கி விட்டதாகிய « பயங்கரவாதத்தைத் துடைக்கும் யுத்தம்’ (war on Terror) என்னும் நிலைப்பாட்டினை அடியொற்றியதாகவே இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தம் நடத்தப்படுவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ ஏலவே கூறிவைத்ததை யாரும் அறிவர்.


இன்று இலங்கையில் விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டுள்ளராயினும் சர்வதேச மட்டத்தில் அவர்கள் தலைதூக்கக்கூடாது என அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதைக் காணலாம். தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு வேண்டிய காத்திரமானதொரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அரசியல் உறுதியற்ற நிலையில் மனதார விரும்பவில்லை என்பதை உலகம் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. சென்ற ஏப்ரல் மாதம் இலங்கை பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற பின்பு கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவராகிய பிரித்தானிய ‘காடியன்’ பத்திரிகை நிருபர் பேர்க் ஜேசன் (Buke Jonson) அனுப்பி வைத்த முதலாவது அறிக்கையில் பின்வருமாறு கூறி வைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.


« சிங்களப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவராகிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கைத் தமிழருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவதற்கான அரசியல் நடவடிக்கை மேற்கொள்வதற்கு விருப்பமற்றவர் என்பது ஒன்றும் இரகசியமானதல்ல என்பதை அவர் பிரதிபலித்து வந்துள்ளார்’


ஆம், சிங்கள பௌத்த பெரும்பான்மை மேலாதிக்கத்தினை உரமூட்டிப் பேணுவதற்காக ஒற்றையாட்சி முறைமையில் மாற்றம் எதுவும் இல்லை என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகவுள்ளது. அதாவது இலங்கை ஒரு பல்லின மற்றும் பன்முகத்தன்மையான நாடு என்பதை அவர் அப்பட்டமாக நிராகரிக்கும் போக்கில் நடந்து கொள்வதை சர்வதேச சமூகம் கண்டு கொள்ளாமலிருக்க முடியாது. அண்மையில் தெஹ்ரானில் நடைபெற்ற ஜி15 நாடுகள் மாநாட்டில் பங்குபற்றியதோடு அதன் தலைமைப் பதவியையும் சுழற்சி முறையில் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி ராஜபக்ஷ ஆற்றிய உரையில் உள்ளடக்கியிருந்த 2 பிரதான அம்சங்களை மேற்கோள் காட்டுவது பொருத்தமாயிருக்கும்.


அவையாவன:


(அ) « சர்வதேச நிதிக் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமென்பதை ஜீ15 வலியுறுத்துகிறது. அவ்வாறாகவே வினைத்திறனுடன் கண்காணித்து நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்ள முடியும். இக் குறிக்கோளினை அடைவதற்காக திறந்த மனதுடன் சம்பந்தப்பட்டவர்களை உள்வாங்கி வெளிப்படைத்தன்மையாகக் கலந்துரையாடுவது அவசியமாகும்%27.


(ஆ) « ஜீ15 குழுவானது எப்போதுமே வெளிப்படுத்தி வந்த பலம் வாய்ந்த ஒற்றுமை மற்றும் அதன் நிறைந்த பன்முகத்தன்மை அதன் குறிக்கோள்களை அடைவதற்குப் பெரிதும் வழிசமைக்கும். ஜீ 15 குழுவின் மைல்கல் ஆகிய 20 ஆவது ஆண்டு நிறைவு நினைவு கூரப்படும் இவ்வேளையில் அதன் தலைமைப்பதவியை ஏற்றுக் கொள்வது ஒரு தனிச்சிறப்பாகவும் இலங்கைக்கு அளிக்கும் கௌரவம் எனவும் நான் கருதுகின்றேன்’


தெஹ்ரானில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் உள்வாங்க வேண்டுமென்றும் ஒற்றுமை மற்றும் செழுமையான பன்முகத்தன்மை அவசியமானவை என்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ அடித்துக் கூற முடியுமாயின் இலங்கையில் அதற்கு எதிர்மறையான திசைவழியில் ஏன் அவர் பயணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.


அதாவது உலகிற்கு உபதேசம் செய்யும் போது அதேவேளை உள்நாட்டில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் அணுகுமுறையில் ஏன் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்? உலகிலேயே மிகக்கொடூரமான பயங்கரவாத இயக்கமென வர்ணிக்கப்பட்டு வந்த விடுதலைப்புலிகளை தோற்கடித்து பயங்கரவாதத்தை இலங்கையில் கூண்டோடு அழித்து விட்டதாக பிரகடனப்படுத்தி உள்ள ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றதற்கு இரு தசாப்தங்களுக்கு மேலாக பங்களிப்பு செய்தது என்பதை கிஞ்சித்தும் அசைபோடுவதாக இல்லை.


ஆட்சிபீடத்தின் பல உயர்பதவிகளில் ஜனாதிபதியின் சொந்தக்காரர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள் தானே என்று அண்மையில் அல்ஜசீரா தொலைக்காட்சி நிருபர் ஃபவுசியா இப்ராஹீம் எழுப்பிய கேள்விக்கு நாட்டு மக்கள் எல்லோரும் தனது சொந்தக்காரர்கள் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியது மிக விநோதமாய் உள்ளது.


மறுபுறத்தில் 1956 இல் அதே சுதந்திரக்கட்சி இட்ட « சிங்களம் மட்டும்’ தீயே தமிழரை அந்நியப்படுத்துவதற்கும் தனிநாட்டுக் கோரிக்கைக்கும் வித்திட்டது என்பதையும் இரு தசாப்த காலத்தின் பின்புதான் தமிழர் தரப்பில் தனி நாட்டுக் கோரிக்கையும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் இலங்கை அரசியல் வானில் தோன்றின என்பதை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு புரிந்து கொள்ள முடியாது என்பதற்கில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக