செவ்வாய், 8 ஜூன், 2010

ஜே.வி.பி. குற்றச்சாட்டு..!

அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அரசமைப்புத் திருத்தங்களை இன்று இந்தியா செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய அரசிடம் காண்பிக்கவுள்ளார் என்றும் இந்தியாவின் ஒரு மாநிலம்போல் இலங்கை செயற்படுகிறது என்றும் ஜே.வி.பி. நேற்றுக் குற்றம்சாட்டியுள்ளது. தனது மகன் அடுத்த ஜனாதிபதியாகும்வரை நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில்

அந்த அரசமைப்புத் திருத்தங்கள் அமைத்துள்ளன என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. நேற்று பத்தரமுல்லையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இவற்றைத் தெரிவித்துள்ளார். அரசமைப்புத் திருத்தம் தொடர்பாகப் பேசப்படுகின்றது. குறிப்பாக இந்தத் திருத்தத்தில் முக்கிய இடம்பிடிப்பது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நீக்கும் விடயம்தான். கடந்த தேர்தல்களில் இவ்விடயம் பரவலாகப் பேசப்பட்டது. எதிர்க்கட்சிகளும் அரசும் இந்த ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப்போகின்றன என்று தேர்தல் காலங்களில் மக்களிடம் கூறின. ஆனால், அதை ஒழிக்கும் திட்டம் எதுவும் அரசிடமில்லை. அரசமைப்பில் திருத்தம் செய்யும்போது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையில் உள்ள சில சரத்துக்களை மாத்திரம் நீக்கிவிட்டு நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டு தடவைகள் மாத்திரம் ஜனாதிபதியாக இருக்கமுடியும் என்ற சட்டத்தை மாற்றி இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் ஜனாதிபதியாக இருக்கக்கூடியவாறு அரசமைப்பில் மாற்றத்தைச் செய்யவுள்ளது. இந்த அரசமைப்புத் திருத்தங்களை இந்நாட்டு மக்களுக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ இதுவரை அரசு தெரிவிக்கவில்லை. ஆனால், இந்தியா செல்லும் ஜனாதிபதி இந்தியாவிடம் இதனைக் காண்பிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தியாவின் ஒரு மாநிலம் போல்தான் இலங்கை இப்போது செயற்படுகிறது. இதை வரவேற்க முடியாது. அரசமைப்புத் திருத்தங்களை உடனடியாக நாடளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்குமாறும் நாம் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றோம். நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை இல்லாது ஒழிக்கப்படாதுவிட்டால் அது இல்லாதொழிக்கப்படும்வரை நாம் போராடுவோம். ஜனநாயகவாதிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம். மஹிந்த ராஜபக்ஷ அவரது மகனை அடுத்த ஜனாதிபதியாக்கும் திட்டத்தில் உள்ளார். அவரது மகன் பூரண அரசியல் அனுபவத்தைப் பெற்று ஜனாதிபதியாவதற்கான தகுதியை அடையும்வரை நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையைத் தக்கவைத்துக் கொள்ளவே மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். அமைச்சுக்களின் நிகழ்வுகள் அனைத்துக்கும் அவரது மகனையும் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி அமைச்சுக்கள் அனைத்துக்கும் உத்தரவிட்டுள்ளார். அதனால், அனைத்து நிகழ்வுகளிலும் ஜனாதிபதியின் மகனைக் காணக்கூடியதாகவுள்ளது என்று ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக