செவ்வாய், 8 ஜூன், 2010

அழிந்துபோன புலிகள் ? உயிர் கொடுக்க முனைகிறதா அரசு?

கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரன் நந்திக்கடலில் கொல்லப்பட்டு விட்டதாகவும் அரசாங்கம் கூறியிருந்தது. பிரபாகரனின் மரணத்துடன் அவரது ஈழக் கனவும் செத்து விட்டதாக அரசாங்கம் பிரசாரம் செய்தது.
அதற்குப் பின்னரான
வெவ்வேறு காலகட்டங்களில், புலிகள் இயக்கம் முற்றாக அழிந்துபோய் விட்டதாகவும், இனிமேல் அது துளிர்விடுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறி வந்தது அரசாங்கம். விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகக்கூறி, பெரியளவிலான வெற்றி விழாக்கள் கடந்த வருடம் நடத்தப்பட்டன.


கடந்த மாதம் இதன் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பெருமெடுப்பிலான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், இயற்கையின் சீற்றம் காரணமாக அது நடக்காமல் போனது.


இப்போது என்னவென்றால் புலிகள் இயக்கம் இன்னம் செத்துப்போய்விடவில்லை, வெளிநாடுகளில் உயிரோடுதான் இருக்கிறது என்று கூறத்தொடங்கியிருக்கிறது அரசாங்கம். புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறி அதற்கு விழா எடுத்த அரசாங்கம், இப்போது அது இன்னம் உயிரோடு இருப்பதாகக் கூறுவது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகிறது.


முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழீழம் கோரி ஆயுதப்போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை அரசுக்குப் பெரும் தலைவலியாக இருந்து வந்தது. புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாக அழித்தது இலங்கை அரசின் மிகப்பெரிய சாதனை என்பதில் சந்தேகம் கொள்ள முடியாது. ஏனென்றால் அது சாத்தியமற்றது என்றே உலகளவில் நம்பப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட புலிகள் இயக்கத்தை தோற்கடித்த இலங்கை அரசு அது இன்னம் அச்சுறுத்தல் கொடுக்கும் நிலையில் வெளிநாடுகளில் உயிர் வாழ்வதாகக் கூறியிருக்கிறது.




இந்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் செய்யதுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக இந்திய தலைவர்களுடன் பேசப்போகிறார். இதை ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உறுதி செய்துள்ளார்.


இப்போது இந்தியாவுடன் பேச்சு நடத்தும் அளவுக்குப் புலிகளிடம் இராணுவப் பலம் ஒன்றும் கிடையாது. ஆனாலும் புலிகள் இயக்கத்தின் பின்புலத்தில் உருவாக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு குறித்து இலங்கை அரசு கலக்கத்துடன் இருக்கிறது போலத் தெரிகிறது. அதைவிட இலங்கை அரசுக்கு எதிராக, பல்வேறு பொது அமைப்புகளில் இருந்து சர்வதேச ரீதியாகக் கொடுக்கப்படும் குரல்களையும் இலங்கை அரசு புலிகளின் வேலையாகவே பார்க்கிறது.


குறிப்பாக சனல் 4 தொலைக்காட்சியில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் ஒளிபரப்பாவது, போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணக்குழுவை அமைக்கக் கோரி மனித உரிமைகளுக்கான ஐ.நா.வின் உயர் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வேண்டுகோள், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் போர்க்குற்ற விசாரணை அழைப்பு போன்ற மேற்குலகின் அத்தனை அழுத்தங்களையும் புலிகளின் தூண்டுதலாகவே அரசாங்கம் பார்க்கிறது.


நவநீதம்பிள்ளை போன்றோர் புலிகளின் விருப்பங்களுக்கேற்ப நடந்து கொள்வதாக அரசாங்கம் வெளிப்படையாகவே கூறியிருக்கிறது. மேற்குலகின் சுதந்திரமான கருத்துகளையும் செயற்பாடுகளையும் கூட புலிகளுடன் முடிச்சுப்போட்டுக் காரியம் சாதிக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளது.


உள்நாட்டில் முன்னர் அரசுக்கு எதிரான நெருக்கடிகள் எழுகின்றபோது அதற்கும் புலிகளுக்கும் முடிச்சுப்போட்டு அதை அமுக்கி விடுவது இலங்கை அரசின் கடந்த கால வரலாறு. அதே பாணியில்தான் இப்போது அரசாங்கம் புலிகள் இயக்கத்துக்கும் மேற்குலகினால் எழுப்பப்படும் மனித உரிமைமீறல், போர்க்குற்றசாட்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறிவருகிறது.


கடந்தவாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூட, புலிகள் இயக்கத்தின் அச்சுறுத்தல் இன்னமும் தீரவில்லை என்பது போல பேட்டி ஒன்றைக் கொடுத திருக்கிறார். கடல்வழியாக அவர்கள் ஆயுதங்களையோ, பயிற்சிபெற்ற போராளிகளையோ கொண்டுவரலாம் என்பது அவ ரது கருத்தாக இருக்கிறது.


இது உண்மையான அச்சுறுத்தலா அல்லது வெறும் ஊகத்தின் அடிப்படையிலானதா அல்லது உள்நோக்கம் கொண்டதா என்பது தான் கேள்வி.


மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச அளவில் இருந்து எழுந்து கொண்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, பெரும் போராட்டம் நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அரசாங்கம், அதை முறியடிக்க இப்போது எடுத்துள்ள ஆயுதம் தான் புலிகள் இயக்கம் பற்றியது.


இதனால் தான் கடந்த வருடம் செத்துப் போனதாகக் கூறிய புலிகள் இயக்கத்துக்கு இப்போது அதுவே உயிர் கொடுக்க ஆரம்பித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக