செவ்வாய், 8 ஜூன், 2010

முற்றாக கைவிடப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள்!



பல ஆயிரம் தமிழ் மக்கள் தற்போதும் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்வதாகவும், தம்மை தமது கிராமங்களுக்கு அனுப்புமாறு அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் தெரியவருவதாவது:



போர் நிறைவுபெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்து வருகின்றது. அனைத்துலகத்தின் ஆதரவுகளை பெறுவதற்காக அரசு இவ்வாறு தெரிவித்து வருகின்றது. ஆனால் வவுனியா முகாம்களில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மக்களில் பெரும்பாலனவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்வதாக தெரிவித்து வருகின்றனர். அவர்கள் பாடசலைகளிலும், அரச கட்டிடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமது கிராமங்களுக்கு திரும்பவேண்டும் என விரும்புகின்றனர்.


பெரும்பாலான மக்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள், உலக உணவுத்திட்ட அமைப்பு போன்ற ஐ.நா அமைப்புக்களிலேயே உணவுக்காக தங்கியிருக்கின்றனர். ஏனினும் தமது கிராமங்களுக்குச் சென்று விவசாயம் செய்ய அவர்கள் விரும்பகின்றனர்.


பூநகரி மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரன் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை இந்த பகுதிகளுக்கு சென்றிருந்தார்.


மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மக்கள் ஒரு முகாமில் இருந்து வேறு ஒரு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வவனியா முகாமில் இருந்த மக்கள் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திலும், பூநகரி சிறீ விக்கினேஸ்வரா கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அரசு சில கூரைத்தகடுகளையும், சில மரத்தடிகளையுமே வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலைகள் சேதமடைந்தும், சிலவற்றில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியும் உள்ளதால் தமது பிள்ளைகள் பாடசாலைக்கும் செல்ல முடியாது உள்ளதாக இடம்பெயர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.


எனினும் வவுனியா முகாம்களில் 60,000 மக்களே வாழ்வதாகவும், அவர்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் சிறீலங்காவின் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தமிழ் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் பல உதவுவதற்கு முன்வந்துள்ளதாகவும், எனினும் தாம் அவற்றை சந்தேகத்துடன் தான் பார்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக