ஞாயிறு, 13 ஜூன், 2010

தோல்விகளாக பதிவு செய்யப்படும் எந்த தோல்வியும் நிரந்தரமானது கிடையாது................

ஜூலை 26, 1983. வெளிக்கடைச் சிறை நம்மை அதிரவைத்தக் காலக்கட்டம். சிங்கள பேரினவாதத்தின் அடையாளம் தொடர்ந்து இதுவரை வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு நிலை வருமா? என்று எல்லோரும் அன்னார்ந்து பார்த்தார்கள். இதயம் பிழியப்பட்டது. மனம் சல்லடையாய் துளைக்கப்பட்டது. வரலாறு ஏனோ மீண்டும் மீண்டும் சுற்றி ஒரே இடத்திற்கு வருகிறது. விடுதலைக்கான போராட்டங்கள்
ஒடுக்கப்படுவதற்கு ஆதிக்க வர்க்கம் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம், போராளிகள் பயங்கரவாதிகள், இல்லையென்றால் தீவிரவாதிகள் என்பதுதான். அடங்கி ஒடுங்கி வாழ்வதைத்தான் வாழ்வென்று நினைப்பவர்களுக்கு வேண்டுமாயின் இது பொருத்தமாக இருக்கலாம். இயேசுவும் கூட தீவிரவாதி என்றுதான் வர்ணிக்கப்பட்டார்.


ஆக, வரலாற்றின் பக்கங்கள் நம்மை இன்னமும் பிழிந்து கொண்டுதான் இருக்கின்றன. 1983க்கு பிறகு, 2009 மே நம்மை உறங்க விடாமல் செய்தது. இந்த 1983க்கும் 2009க்கும் இடையே நாம் சந்தித்த வரலாற்று நிகழ்வுகள் உள்ளபடியே நம்மை மேலும் மேலும் விடுதலைக்கான களத்திற்கு உந்தித் தள்ளுகிறது. அது இயற்கையானதும்கூட. நிகழ்காலத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு கடந்தகால போராட்டத்தின் வலி, அதன் துயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் அதன் தன்மையை அறிந்து கொள்வதற்கும், கொடுமை நிறைந்த அந்த வாழ்வை புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது. புலம்பெயர் இளைஞர் ஒருவர் எம்முடன் உறையாடிக் கொண்டிருந்தபோது 28 வயது பெண் ஒருவர் தமிழீழம் குறித்து தமக்கென்ன கவலை. நான் ஜெர்மனியிலே பிறந்தேன் என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அந்த இளைஞன் அதிர்ந்து போனானாம். எமக்கும்கூட அதிர்ச்சித்தான்.


தமது தாய்நாடு, எமது எதிரியின் கையால் சூறையாடப்படுகிறது. நாம் அன்னிய நாட்டில் வசிக்கிறோம். அந்த வாழ்வியல் என்பது நமக்கு கிடைத்த இரவல். நிலையனதல்ல. நமது தாய் நாட்டின் மடியில் நாம் உறங்கும் சுகம், அளவிடமுடியாதது. ஏதிலி வாழ்க்கை நிரந்தரமற்றது. நம்முடைய கௌரவத்தை சுயமரியாதையை இழக்கச் செய்யும் நிகழ்வுகளின் படிமானங்கள். ஆகவே, நம்மால் எந்த நிலையிலும் தாய்நாட்டின் தேவையை நிராகரிக்க முடியாது. 26.5.1987ல் இருந்து சிங்கள பேரினவாத ராணுவம் யாழ்ப்பான மக்கள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. வரலாற்றை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள் இளைஞர்களே. 26.5.1987ல் இருந்து 30.5.1987வரை மட்டும் சற்றேறக்குறைய ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். ஐந்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.


கையிலே கடும் கருவிகளை வைத்துக் கொண்டிருக்கும் சிங்கள பேரினவாத அரசு, தம்மிடம் பிடிபடும் அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொல்லவில்லை. அவர்களின் அங்கங்களை அணுஅணுவாய் வெட்டி, தமது இனவெறி பகை தீர்த்துக் கொண்டது. அந்த ஒரு குறுகிய காலக்கட்டத்தில் மட்டுமே 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சான்றுகள் இருக்கின்றன. கொடுமையான கொலை வெறிக் கொண்ட சிங்கள பேரினவாத அரசு, நமது தமிழ் இளைஞர்களைப் பிடித்து அவர்களின் ஆள்காட்டி விரல்களை துண்டிக்க தொடங்கியது. தமிழீழத்தில் பிறந்த அத்தனை தமிழ் இளைஞர்களும் தமக்கெதிராக கருவி ஏந்துவார்கள் என்கிற கலக்கம் சிங்கள அரசிற்கு தொடர்ந்து இன்றுவரை இருந்து கொண்டு இருக்கிறது.


மாந்தநேயம், அதன் நெறி அனைத்தையும் தமது காலில்போட்டு மிதித்து, கசக்கிப் பிழிந்த சிங்கள பேரினவாத அரசு, தமிழர்களுக்கு உரிமை என்கின்ற பொய் பரப்புரைகளை செய்து, கொஞ்சம் கொஞ்சமாக இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் இன்னமும்கூட இந்தியாவிலிருந்து தமிழர்கள் சிங்களனோடு இணக்கமாக வாழ வழி இருப்பதாக சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இது நடக்குமா? நடக்காதா? என்பதைக் குறித்தெல்லாம் இவர்களுக்கு அக்கறை இல்லை. இனவிடுதலைக்கான சமர் என்பது, தமது உரிமையை காப்பாற்றிக் கொள்வதற்கான சமராக இருந்த நிலை மாறி, தம் மக்களின் உயிரைக் காப்பாற்றும் சமராக மாறியிருக்கிறது.


ஆனால், கம்யூனிசம் பேசும் சிலர், அங்கு பிளவுப்படாத தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று வாய்க்கு வந்தப்படி பேசித் திரிகிறார்கள். அவர்களுக்குப் புரியுமா, தமிழ் தேசியத்தின் மீது, தமிழ் தேசிய இறையாண்மையின் மீது, சிங்கள தேசியம் தமது அடக்குமுறையை திணிப்பதை அவர்கள் தெரிந்தே தெரியாததுபோல் நடிக்கிறார்களா? என்பதை நாம் மீண்டும் மீண்டுமாய் அவர்களிடம் விசாரித்து அறிவதற்கு முயற்சிக்கவில்லை. அன்று நடைபெற்ற போராட்டங்களின் வடிவங்களை பல்வேறு கவிஞர்களின் பதிவுகளிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஈழத்துக் கவிஞர் அவ்வை என்பவர் ஒரு அற்புதமான கவிதை வரியை அன்று பாடி வைத்தார். இன்று இளைஞர்கள் இதை ஒருமுறை அல்ல, பலமுறை படியுங்கள். நமது விடுதலையின் தேவை உங்களுக்குப் புரியும்.


புறநானூற்றில் வரும் ஒரு தாயைப் போல, இங்கு ஒரு தாய் உருவகப்படுத்தப்படுகிறாள். களத்திற்குச் சென்ற தன் மகன் திரும்பவில்லை என்பதை அறிந்தபோது, அவள் அதிர்ந்து போகாமல் பாடுகிறாள்.


ஆனால் இன்று
அறிந்தேன்.
வேறொரு கதை
உனது நண்பன்
சொன்னான்.
மீசை அரும்பும்
இந்த வயதில்
நாட்டுப்பற்று
வந்ததா உனக்கு?
அப்படியானால்
கடமைகள் இருக்கும்.
வீரனாய் இருந்து
வீடு திரும்பு
என்று அந்த கவிதை வரிகள் நிறைவுபெறுகிறது. வீரனாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு, விடுதலைப் போரின் தொடக்கக் காலங்களில் வலியுறுத்தப்பட்டதை நாம் வாசித்தறிய வேண்டும். நமக்கான விடுதலைத் தேவையை நாம் சுவாசிக்க பழக வேண்டும். நமது விடுதலை என்பது யாசித்துப் பெறும் தானமல்ல என்பதை நாம் இறுதியாக, உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும். போரின் மூலமும், காயங்களின் மூலமும் நமது கடமையை, நமது தேசத்திற்காக ஆற்ற வேண்டும் என்கின்ற மனப்பக்குவம் இன்றைய இளைஞர்களுக்குள் மங்கிப் போய்விட்டதா என்ற தயக்கம் நிறைந்த கேள்வி எம் மனங்களை அழுத்திப் பார்க்கிறது.


வரலாற்றை தோற்கடிக்க முடியாது. அதில் சில நிகழ்வுகள் தோல்விகளாக பதிவு செய்யப்படும். எந்த தோல்வியும் நிரந்தரமானது கிடையாது. அந்த அடிப்படையில் நாம் தொடக்கக் காலத்தில் இருந்து சமராடியக் களம், இப்பொழுது ஒரு சிறு ஓய்வை சந்தித்திருக்கிறது. அல்லது போருக்கும் வாழ்வுக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. இன்று, பி.பி.சி. தொலைக்காட்சியில் ஒரு நேர்க்காணலை ஒளிபரப்பி இருக்கிறார்கள். தெள்ளத்தெளிவாக இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மீண்டுமாய் நமது விடுதலைப் போர் உயிர்த்தெழும் என்பதே அந்த நேர்க்காணலின் நடுப்பொருளாக இருக்கிறது.


இந்த விடுதலைப் போரை தமிழ் தேசிய தலைவர் நடத்துவார் என்பதுதான் அடிப்படையில் உண்மையாக இருக்கிறது. இதை திரிபு செய்வதற்காக துரோகிகள் தொடர்ந்து பணியாற்றலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. நமது கடமை, விடுதலைக்கான பாதைகளை செப்பனிடுவது. துரோகிகளின் கடமை அந்த பாதைகளை சிதைப்பது. இது இழுபறியாய் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். இதைக் கடந்தே நாம் வெற்றியை பறிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். நம்மை வீழ்த்தியவர்கள் வெற்றிவிழா கொண்டாடி மகிழலாம். ஆனால் நாம் விழவில்லை என்பதை நம் பகைவனுக்கு புரிய வைக்க வேண்டும். விடுதலையின் வலிமை பெரியது. அதைப் பெறுவதற்கான வலி அதைவிட பெரியது. வலிகளைச் சுமந்துத்தான் நாம் விடுதலையை பறிக்க வேண்டும்.


துரோகிகளின் கூட்டங்கள் நமது விடுதலையை நிராகரிக்கலாம். அல்லது அது நிகழ்த்தமுடியாத செயல் என வர்ணிக்கலாம். நிகழ்த்த முடியாது என முட்டாள்களின் வேதாந்தங்களை நாம் முட்புதருக்குள் போட்டு எரிக்க வேண்டும். கடலில் மிதப்பது முடியாது. வானில் பறப்பது முடியாது. மலையில் ஏறுவது முடியாது. நிலவில் நடப்பது முடியாது என்று தொடர்ந்து முட்டாள்கள் கூறிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் மாந்த ஆற்றல் அதை முறியடித்துத்தான் அந்த செயல்களை முன்னெடுத்தது. வெற்றிக் கண்டது. ஆகவே, நமது விடுதலையும் முடியாத ஒன்றல்ல. நமது எந்த தொடக்கமும் தடைகளால் சிதைவடையலாம். எந்த ஆற்றலும் தொடக்கக் காலங்களில் தாமதமாகலாம். ஆனால், நமக்குள் புதைந்துக் கொண்டிருக்கும் லட்சியம், நமக்குள் எரிந்து கொண்டிருக்கும் தமிழீழ தாகம் எவராலும் அணைக்க முடியாத ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நமது போராட்டத்தை யாரெல்லாம் நிராகரித்தார்களோ, அவர்களை எல்லாம் நாம் நிராகரிக்கத் தொடங்க வேண்டும். 1983ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற களவரத்தைக் கண்டித்து மக்கள் கவிஞர் இன்குலாப் கீழ்க்கண்டவாறு எழுதினார்.


விடுதலை
யாசித்துப் பெறும்
தானமல்ல.
நமது அவசரத்தில்
அட்டைகளிடம்போய்
ரத்ததானம் கேட்க வேண்டாம்.
கம்சனின் பிடியில்
ஈழக்குழந்தை
கதறி அழுகிறது.
உண்மைத்தான்.
அதற்காக
பூதகியைப்போய்
பாலூட்டச்
சொல்லாதீர்கள் என.


இந்த வரிகள் இப்போது பொருத்தமாக இருக்கிறது. நாம் பொருத்தமற்ற தலைவர்களிடம் நமது விடுதலைக் குறித்து மன்றாடினோம். நம்மை நாமே போராடுவதற்கு தகுதிப் படைத்தவர்களாக மாற்றிக் கொள்வதற்கு கடந்த நிகழ்வுகளே நம்மை பக்குவப்படுத்தியது. ஆகவே, நமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாம் வெற்றி பெறுவோம். எந்தநிலையிலும் தோல்வி என்பது நமக்கு இல்லை என்பதை புரிந்து கொள்வோம். அதற்கு நம்பிக்கையாய் வால்ட் விட்மனின் கவிதைகளை நினைவுப்படுத்துகிறோம்.


இந்த விதைகள் எல்லாம்
மீண்டும் விதைகளை
உருவாக்கும்.
காற்றுகள் எல்லாம்
தொலைதூரம்
சுமந்துபோய்
மீண்டும் விதைக்கும்.
மழையும் பனியும்
ஊட்டி வளர்க்கும்.
கொடுங்கோலரின்
கருவிகளால்
கொல்லப்பட்டவரின்
ஆவிகள் அனைத்தும்
பூமி முழுவதும்
கண்ணறியாமல்
சுற்றி நடக்கும்.
மெல்லிய குரலில்
எச்சரிக்கும்.
புதிய புரட்சி நாளுக்கு
யோசனை சொல்லும்.
ஓ! விடுதலையே
மற்றவர்கள் உன்னிடம்
நம்பிக்கை இழந்தாலும்
நான் மட்டும்
நம்பிக்கை இழக்கப்
போவதில்லை.


கண்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக