புதன், 2 ஜூன், 2010

மக்களையும் மண்ணையும் மீண்டும் அரவணைக்கும் பொறுப்பை நாமே ஏற்போம் வாருங்கள்!



நாங்கள் நாளையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது மாற்றின ஊடகங்கள் எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட நேற்றைய கொடூரத்தைப்பற்றிய தேடல்களில் இறங்கியுள்ளது. அனைத்துலக அமைப்புக்களும், சனல் 4 தொலைக்காட்சியும் சொல்லக்கூடிய அளவிற்கு எமது பிரச்சினைகளில் அக்கறை காட்டி அரசுக்கெதிரான ஆவணங்களை சேகரித்துக்கொண்டிருக்கையில் நாம் எமக்குள் முட்டி மோதிக்கொண்டிருப்பது எந்தவகையில் பொருந்தும் என்பதை சகல தமிழ் தேசிய வாதிகளும், தமிழின உணர்வாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்
.


தேசியம் பேசிய படியே தேசியத்திற்க்கு எதிராக நாமே எமது தலையில் இனியும் மண் அள்ளி்ப் போட முடியாது. தாயகப் போரில் நாம் அடைந்த பின்னடைவின் பின்னும் நாம் இன்னும் திருந்தவில்லை என்ற சோக செய்தியை ஓராண்டின் பின்னும் அழுத்தி ஆணித்தரமாக சொல்ல வேண்டிய தேவையுள்ளது வேதனையானது.


அண்மையில் வெளியிடப்பட்ட போராளி ஒருவரின் கோர கொலைக்காட்சி உலகத்தமிழ்ர்களின் உள்ளத்தில் ஏற்ப்படுத்திய வடுவை போல ஓராயிரம் காட்சிகள் திரைக்கு பின்னே இருக்கின்றது. சோகங்கள் வலிகள், சொல்லொண சித்திரவதைகள் என்று பல்லாயிரம் வதைகள் பட்டு எம் மக்களும் எமக்காக போராடிய போராளிகளும் இருக்கையில் நாம் தேசம் மறந்து வாழ்தல் இழுக்காகும்.


இன்னும் பல்லாயிரக்கணக்கில் எம் மக்கள் ஏதிலிகளாய் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். இன்று வரை அவர்களது அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை. ஏன் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற உண்மையை மறைத்து அல்லது மறந்த படி நாம் உலகெங்கும் அடுத்த தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றோம்.


உலகெங்கும் வாழும் வசதிபடைத்வர்கள் தங்களது அதி புத்திசாலித்தனத்தால் பல லட்சங்களை அள்ளிக்கொடுத்து தமது உறவினர்களை வெளியே கொண்டுவருகின்றனர். அது மட்டுமன்றி விரைவாக அவர்கள் நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்கின்றனர். பாவப்பட்ட அப்பாவி மக்கள் அங்கே போக வழிதெரியாது திசைகள் அற்று அழுத முகத்தோடு வாழ்கின்றனர். தமது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப கூட வழியின்றி அவர்கள் திண்டாடுகின்றனர்.


ஒரு பக்கம் போர்க்குற்றங்களை செய்த அரசு மேலும் மேலும் குற்றங்களை செய்து கொண்டிருக்கின்றது. மறு பக்கம் எமது மக்களின் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காத நிலையில் அவல வாழ்வு வாழ்கின்றனர். ஆனால் நாமோ அடுத்த தேர்தலுக்கு தயாராகி விட்டோம்.


ஆனால் எமக்கு சம்பந்தமே இல்லாத யாரோ எமக்கான கடமைகளை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களோடு நாம் இணைந்து அவர்களுக்கு உத்வேகத்தையும், ஆதரவையும் கொடுக்கவாவது முன்வருவோம்.


பிரிவினைகளை களைவோம் வாருங்கள்! அழுவதனால் ஆன பயன் எதுவுமில்லை தொழுது வாழ்த்தல் எமது நிலையுமல்ல. எனவே மக்களையும் மண்ணையும் மீண்டும் அரவணைக்கும் பொறுப்பை நாமே ஏற்போம்... ஏன் எனில் எமக்கு மட்டுமே அதற்கான உரிமையம் கடமையும் உண்டு!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக