புதன், 2 ஜூன், 2010

தேசிய தலைவர் நம் அருகில் இருக்கிறார்....!!!

விடுதலை பெருவெளியில் விரியும் மாந்த சிந்தனைகள் தமது மாறாத வடுக்களாக என்றென்றும் தம்மை ஆற்றல்வாய்ந்தவைகளாக பதிவு செய்கிறது. எந்தநிலையிலும் விடுதலையை அடக்கமுடியாது என்பதை நாம் கண்டிருக்கிறோம். கேட்டிருக்கிறோம். அதையும் தாண்டி சில நேரங்களில் ஒடுக்கிவிடலாம் என்கின்ற ஓங்கார சத்தம் கேட்கத்தான் செய்கிறது. அடக்குமுறையாளர்கள் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
. உலக வரலாற்றில் இந்த மண்ணை சிவப்பாக்கிய மாபெரும் மக்கள்நேய தலைவர்கள், மாந்தநேய சிந்தனையாளர்கள், விடுதலைக்கு தம்மை களபலியாய் கொடுக்க தயங்காத அர்ப்பணிப்பாளர்கள் இன்றுவரை மனித மனங்களில் ஆழமாக இருந்து ஆண்டுக் கொண்டு இருப்பவர்கள் நம்மை விடுதலையை நோக்கி உந்தித் தள்ளுகிறார்கள். தோழர் காரல்மார்ஸ், தோழர் எங்கெல்ஸ், தோழர் லெனின், தோழர் மா சே துங், தோழர் ஹோசிமின், தோழர் சேக்குவேரா, தோழர் பெடல்காஸ்ட்ரோ இப்படி நீளும் இவர்களின் வரிசையில் இன்றுவரை நாம் நீடிக்க வைத்து பார்க்கும் மாபெரும் ஆற்றல்வாய்ந்த தலைவராக எமது தேசிய தலைவர் இருக்கிறார்.


எதற்கும் அஞ்சாத துணிவு, மக்கள்மீது கொண்ட அளப்பறியா பற்று, தமது விடுதலையை குறித்த தொலைநோக்குப் பார்வை இவைகளே உலக மக்களுக்கு தேசிய தலைவரை அடையாளம் காட்டியது. வடமேற்கு சீனாவில் உள்ள ஒரு கிராமம். ஏனான் என்று பெயர். ஒருநாள் பெரும் முழக்கத்தோடு தமது வெற்றியை உச்சரித்துக் கொண்டு பெரும்படை ஒன்று அங்கு நடந்து வந்துக் கொண்டிருந்தது. களைப்படைந்து கால்கள் தடுமாறினாலும், உள்ளம் தடுமாறாத உறுதி அப்படையினரின் முகத்திலே எதிரொலித்தது. கிழிந்த ஆடைகள் அவர்களின் உழைப்பை அடையாளப்படுத்தியது. ஆனால் வெற்றியின் உற்சாகத்தில் இருந்த அவர்களுக்கு களைப்பு ஒன்றும் தெரியவில்லை. ஒன்றுசேர அவர்கள் அமர்ந்திருந்த காட்சி, வரலாற்றை வாசிக்கும் எல்லோருக்கும் விடுதலை என்பது எந்தவிதத்திலும் தள்ளிப்போகும் நிலைப்பாடல்ல, அதை வெல்வதற்கு மாந்தம் எப்போதுமே போராடிக் கொண்டிருக்கிறது என்பது புரிந்திருக்கும்.


அப்படி அமர்ந்திருந்த அந்த படையினர் மத்தியிலே தோழர்களே உங்களை நான் இரும்பு பூக்கள் என அழைக்கட்டுமா? வேதனையையோ, தோல்வியையோ நாம் அறிந்திருக்கவில்லை. எதற்கும் பயப்பட்டதில்லை. ஆயிரம் மலைகள், பத்தாயிரம் நதிகள் அனைத்தையும் நாம் எளிதாக கடந்துவிட்டோம். ஐந்து மலைகள் நமது பாதம்பட்டு நொருங்கி பாதைகளானது. உஃபென் மலை நம்முடைய விரல் நுனிகளிலேயே நொருங்கி துகள்களாய் மாறியது. நாம் வென்றுவிட்டோம் என்று நிறுத்தியபோது, அந்த வார்த்தை அமர்ந்திருந்த படைவீரர்கள் இதயங்களை உடைத்து உணர்ச்சிப் பிழம்பாய் மாறச் செய்தது. அவர்கள் ஓங்கிச் சொன்னார்கள், தோழர் மாவோ வாழ்க என.


உலக வரலாற்றில் நம்ப முடியாத ஒரு தொடர் பயணமாக, அந்த தொடர் பயணத்தின் வெற்றி அடையாளமாக, நெடும்பயணம் என்று உலக வரலாற்றால் சொல்லப்படும் அந்த போர்ப்படையின் அணிவகுப்பு ஓராண்டு இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து நிகழ்த்தப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான செம்படை வீரர்களின் அந்த மாபெரும் அணிவகுப்பு மிக இயல்பான ஒரு அரசியல் முழக்க அணிவகுப்பல்ல. போகும் பாதைகளெல்லாம் எதிர்ப்புகள். தடைகள். 18 மலைகளை அவர்கள் ஏறி இறங்கினார்கள். 24 நதிகளை கடந்து வந்தார்கள். 12 காடுகளை அவர்கள் பாதம் பட்டு அதிர்ந்தது. அந்த பரந்த சீன தேசத்தின் மூலைகள் எல்லாம் அவர்களின் நடைப்பயணத்தால் ஒருங்கிணைந்தது. எட்டாயிரம் மையில் தூரத்தை பின்னடையச் செய்த அந்த நடைப்பயணம், 1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் தொடங்கியது.


குயீசில் உள்ள செம்படை பனிமணையிலிருந்து புறப்பட்ட அந்த பயணத்தில், தொடக்கத்தில் 80 ஆயிரம் பேர் இருந்தார்கள். வழியெங்கும் தேச பக்த கூட்டம் அதில் இணைத்துக் கொள்ளப்பட்டது. இப்படி 1 லட்சத்தைத் தாண்டிய அந்த பெரும்படை, பயணம் நிறைவடையும்போது வெறும் 50 ஆயிரத்தில் மட்டுமே நிறைவடைந்தது. போராட்டங்களினால் மாண்ட மாவீரர்கள், பட்டினியால் இறந்துபோன தொண்டர்கள், பனிமலைகளை கடக்கும்போதும், சதுப்பு நிலங்களை தவழும் போதும், நதியிலே நீந்தும் போதும் இறந்துபோன போராளிகளின் எண்ணிக்கை அவர்களின் தொடர் பயண நிகழ்விலிருந்து பாதிப் பேரை குறைத்தது. வழியெங்கும் கிடைக்கும் பச்சை காய்கனிகளை உண்டும், பாதையிலே உருளும் நதி நீர்களை குடித்தும் அவர்கள் தமது நெடும் பயணத்தை தொடர்ந்தார்கள்.


இப்படி இந்த கடின நிலையிலும்கூட அவர்கள் வெற்றிப் பெற்றதற்கு ஒரேஒரு காரணம் இருந்தது. அது அவர்களை வழிநடத்திய மாபெரும் தலைவர் மா சே துங். சீனா என்றவுடன் நாம் இன்று எரிச்சலுடன் திரும்பிப்பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் அந்த மாபெரும் ஆற்றல் வாய்ந்த மனிதன் படைத்தது இன்று இருக்கும் திரிபுவாத முதலாளித்துவ சீனத்தை அல்ல. அது மக்கள் சீனாவாக இருந்தது. இன்று மருவி அடக்குமுறை சீனாவாக மாறிவிட்டது.


நாம் நமது விடுதலை குறித்த வரலாற்று நிகழ்வுகளை தொடர்ந்து வழிநடத்தி செல்வதற்கு உலகத்தில் நடைபெற்ற போராட்ட வரலாறுகள் நமக்கு தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதற்காகவும், நமது தேசிய தலைவர் உலக வரலாற்றின் மாபெரும் புரட்சியாளர்களுக்கு பக்கத்தில் இருக்கும் அளவிற்கு திறன்பெற்ற மாபெரும் படைத் தலைவர் என்பதையும் நாம் பொருத்திப் பார்ப்பதற்காகத்தான் இந்த சீனத்தில் இருந்து வரலாற்று நிகழ்வை பதிவு செய்தோம். நமது தேசிய இன விடுதலை போராட்டத்தை உலக வரலாற்றில் யாருமே நிகழ்த்தாத அளவிற்கு பெரும் ஆற்றல் வாய்ந்த போராக உலகமே வியந்துநிற்கும் அளவிற்கு அச்சம் அற்று, வீரம் செறிந்து நின்ற மகத்தான களமாக மாற்றிய வித்தகனாக எமது தேசிய தலைவன் களத்திலே இருந்தார். நமது தேசிய படையும் மிக எளிதாக தோற்றுப்போகக்கூடிய நிலையில் இல்லாத அளவிற்கு திட்டமிட்டு அணுஅணுவாக அப்படையை செதுக்கி, உலக வல்லாதிக்க சக்திகளுடன் எதிர்த்து நிற்கும் அளவிற்கு ஏற்றம் கொண்ட படையாக அவர் தமிழ் தேசிய ராணுவமான புலிப்படையை கட்டியமைத்தார்.


எமது வீரர்களின் வீரம் செறிந்த போர் நுணுக்கத்தை கண்ட உலகம் திகைத்து நின்றது. யாருமே எதிர்பாராத அளவிற்கு நாம் வாழும் காலத்திலேயே வளமான தமிழர்களுக்கான நாட்டை கட்டியமைக்க எமது தேசிய தலைவர் காட்டிய ஆர்வம், அவருக்குள் இருந்த ஆளுமை, யாராலும் மறுத்துரைக்க முடியாத மகத்தான பொருள் செறிந்ததாய் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு மகத்தான சமரை முடிவுக்குக் கொண்டுவர மாமனிதன் மாவோ கட்டியமைத்த செஞ்சீனம் களத்திற்கு வந்த கேவலம் நிகழ்த்தப்பட்டது. சீனாவும் இந்தியாவும் இணைந்த நமக்கெதிரான இந்த சமரில், ஐரோப்பிய நாடுகள் வாய்மூடி இருக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டது. லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டாலும், தமது சந்தைக்கு கேடு வந்துவிடக் கூடாது என்பதிலே பல்வேறு நாடுகள் மிக பாதுகாப்பாக பதுங்கிக் கொண்டன.


ஆனால் மக்கள் கொல்லப்பட்ட பின்னால் உற்பத்தி பொருட்களை இவர்கள் எங்கு கொண்டுப்போய் விற்பார்கள் என்பது குறித்து இவர்களால் சிந்திக்க முடியவில்லை. ஆனாலும் நம்முடைய விடுதலைப்போர் நாம் விரும்பாமலேயே நம்மேல் திணிக்கப்பட்டது என்கின்ற வரலாற்று உண்மையை திட்டமிட்டு சிங்கள பாசிச அரசும், இந்திய பார்ப்பனிய அரசும் பரப்புரையால் மூடிமறைக்க தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த விடுதலைப்போர் நாம் விரும்பாமலேயே நம்மீது திணிக்கப்பட்டது.


இன்றைய வரலாற்று புரட்சி அமைப்புகளிலிருந்து மாறுபட்ட ஆனால், வீரத்தில் ஒருங்கிணைந்த ஒரு மாபெரும் படையணியை கட்டியமைத்து, இன்று தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு களமாக தேசியத் தலைவரின் படை நமக்கு உற்சாகத்தையும், உண்மையான விடுதலை உணர்வையும் அள்ளித் தருகிறது. முள்ளிவாய்க்காலில் நமது உறவுகள் ஒரே இடத்தில் வைத்து லட்சக் கணக்கில் கொல்லப்பட்ட போது, நம்மால் ஏன் அவர்களை கொல்கிறீர்கள் என்று கேட்பதற்குக்கூட நாதியில்லாமல் போய்விட்டோம். உலகெங்கும் பத்துக் கோடிக்கு மேற்பட்ட தமிழ் உறவுகள் ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரே இடத்தில் 6 கோடிபேர் தமிழர்களாக இருந்து கொண்டும் இந்திய காலனியின் அடிமைகளாக இன்றுவரை இருக்கிறோம். தமிழனுக்கு ஏற்படும் கேட்டை தட்டிக் கேட்க தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லையே? இதுதான் நம் தமிழ் சமூகம் சிதறடிக்கப்படுவதற்கு பெரும் காரணமாய் இருக்கிறது.


அதனால் தமிழனுக்கான ஒரு நாட்டை கட்டியமைக்க எமது தமிழ் தேசிய விடுதலைப்படை களத்திற்கு வந்தது. படையிலே ஒப்பற்ற தளபதிகள் பாலினம் மறந்து, ஒரே படையாய் அது புலிப்படையாய் விழித்து, உறுமி, சீறி, பகைவனுக்கு பெரும் பகையாய் நின்றது. தமது சொந்த மக்கள் விடுதலையோடும் மகிழ்வோடும் வாழ்வதற்கு தமது உதட்டுக்கருகில் நஞ்சை வைத்துக் கொண்டு களத்திற்கு வந்தார்கள். இப்படிப்பட்ட மாபெரும் மக்கள் தலைவர்களை சிங்களமும், இந்தியாவும் சீனமும் சேர்ந்து அழித்தது. அமைதிப் பேச்சு பேசலாம் வாருங்கள் என்றபோது, இவர்களின் பொய்யை நம்பி கரங்களிலே வெள்ளைக் கொடி ஏந்தி சென்றபோது, அவர்களை சுட்டிக் கொன்ற கொடூரத்தை இந்த நயவஞ்சக அரசுகள் செய்து முடித்தன.


முள்ளிவாய்க்கால் என்பது நாம் மறந்துவிடுவதற்கு ஒரு இடத்தின் பெயரல்ல. அது நமது தமிழ் தேசிய வெற்றியின் அடையாளமாக இன்றுவரை இருக்கிறது. நாளை அமையப்போகும் தமிழ் தேசிய நாட்டிற்கு முள்ளிவாய்க்காலில் கொட்டப்பட்ட குருதி பெரும் காரணமாக கருதப்படும். அங்கே சிந்திய ரத்தத்துளிகள் மட்டுமல்ல, அங்கே போராடிய மாபெரும் வீரர்களின் வீரம் சொறிந்த களமாடல் வருங்காலத்தில் காவியங்களாய் படைக்கப்படும். தாயக விடுதலைக்கான சமரில் வன்னி பெரும் நிலப்பரப்பில் முடக்கப்பட்ட நமது உறவுகளுக்கு நாம் அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பதற்கான நேரம் இதுவல்ல. காரணம் நமது போர் இன்னும் முடிவடையவில்லை. நமக்கான பொழுது இன்னும் விடியவில்லை.


உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் ஒருங்கிணைந்து நமது வாழ்வை, நமது தேசிய அடையாளத்தை, நமக்கான உரிமையை இறுத்திக் கொள்ள களப்பணியாற்ற வரவேண்டும். அதுவே நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். தேசிய தலைவர் நம் அருகில் இருக்கிறார் தொடர்ந்து போராடுவோம். தமிழீழம் படைப்போம்.

1 கருத்து: