ஞாயிறு, 11 ஜூலை, 2010

ஒன்றரை இலட்சம் சிங்கள மக்களை ஐ நா கொன்றுபோட்டுதாம் ...........விமலின் நகைச்சுவை பாத்திரம்

கொழும்பில் ஐநா தலைமையகத்துக்கு முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் நிபுணர் குழுவை ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் கலைக்கும் வரை போராட போவதாக கூறி விமல் வீரவன்ச ஆரம்பித்த காலவரையறையற்ற உண்ணாவிரதம் மூன்றாவது நாளான சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வீரவன்சவுக்கு தண்ணீர் அருந்தக் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். முன்னதாகவே அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்துக்குச் சென்றிருந்தார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் நடைபெற்றனவா என்று ஆராய்ந்து ஐநா தலைமைச்செயலர் பான் கீ மூனிற்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் எனக்கூறி அமைச்சர் விமல் வீரவன்ச, மூன்று நாட்களாக உண்ணா விரத போராட்டத்தை மேற்கொண்டார்.

இராஜதந்திர ரீதியில் பலனளிக்காத, வெறும் விளம்பரத்தை தேடிக்கொள்ளும் நடவடிக்கையாகவே அமைச்சரின் இந்த போராட்டம் பலராலும் பார்க்கப்படுகிறது.

தமது படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மிகக்கடுமையாகவே மறுக்கும் அரசாங்கம் கடந்த கால யுத்தத்திலிருந்து பெற்ற படிப்பினைகளை ஆராயும் விதத்தில் தனது சொந்த நிபுணர் குழுவொன்றை அமைத்துள்ளதாக கூறுகிறது. இலங்கை அரசாங்கத்தின் கூட்டாளி நாடுகள் சிலவும் இந்த போக்கை ஆதரிக்கின்றன
ஐநாவின் கொழும்பு தலைமையக் கட்டத்துக்கு செல்லும் பாதையை மறித்து நடத்தப்பட்ட ஆரம்பநாள் போராட்டத்துடன் ஐந்து நாட்களாக இந்த கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாதை மறிப்பு போராட்டத்துக்கு பதில் கூறும் விதமாக ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் கொழும்பிலுள்ள தனது அலுவலகங்களில் ஒன்றை மூடியுள்ளார்.

ஐநா தலைமையகத்துக்கு செல்லும் பாதையை மறித்து நடத்தப்பட்ட போராட்டம் சர்வதேச சட்ட நியமங்களை மீறும் நடவடிக்கை என தெரிவித்த ஜேர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், இந்த செயல் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பாதகமாகவே அமையும் என சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை விமல் வீரவன்சவின் உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சுவாரஸ்யமான நாடகம் என வர்ணித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். இந்த போராட்டத்தை உலக நாடுகள் பொருட்டில் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக