சனி, 4 டிசம்பர், 2010

உலகின் ஊடகங்களை மாபெரும் அதிர்வுக்குள்ளாக்கிய நிகழ்வு.. வன்னிப்போர் மர்மங்கள் வெளிவரும் நாள் தொலைவில் இல்லை..வன்னிப்போர் உண்மைகளையும் அறியத்தருமா.???

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி ஊடகங்களில் முன்னணி இடம் பிடித்துள்ளது விக்கிலாக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள். உலகத்தில் உள்ள 38 நாடுகளின் சுதந்திரமான ஊடகவியலாளர்கள் சேகரித்த இரகசிய தகவல்கள் விக்கிலாக்ஸ் இணையம் மூலம் அமெரிக்காவிலிருந்து கசியவிடப்பட்டுள்ளன.
கடந்த 2006ம் ஆண்டிலிருந்து இலாபநோக்கற்ற முறையில் இயங்கிவரும் விக்கிலாக்ஸ் தனது பணியை மேலும் தொடர்ந்தால் சிறீலங்கா – இந்தியா போன்ற நாடுகள் வன்னிப்போரில் வகித்த உண்மைப் பாத்திரங்களையும் உலகால் அறிய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை தனக்குள் ஒரு நிஜமான கொள்கையை வகுத்துக் கொண்டு வெளிநாடுகளை எவ்வாறு கையாண்டது என்ற விபரங்கள் அடங்கிய 391.832 ஆவணங்கள் இப்போது வெளியாகியுள்ளன. இதில் 90.000 ஆவணங்கள் ஆப்கான் போர் தொடர்பான இரகசியங்களைத் தருகிறது. 250.000 தகவல்கள் ஈரான், ஈராக், வடகொரியா போன்ற நாடுகளில் நடைபெற்ற போர்கள், சதிகள் குறித்த தகவல்களை தருகிறது.


1. அமெரிக்கா நடாத்திய போர்கள் 2. உலகத் தலைவர்கள் பற்றிய அதனுடைய மதிப்பீடுகள் 3. நல்வர்போல நடித்து நஞ்சு வேலை செய்த நாடுகளின் உண்மை முகங்கள் 4. இதர கொசுறுத் தகவல்கள் என்று நான்கு தலைப்புக்களில் இதைப் பிரித்து நோக்கலாம். நான்கு இலட்சம் பக்கங்களையும் ஒரேயடியாக படித்து கருத்துரைக்க முன் உலக மக்கள் களைத்துப்போய் வேறு வேலைக்கு போய்விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பெருந்தொகையான பக்கங்கள் வெளியாகியுள்ளன. எனினும் அவற்றின் நான்கு முக்கிய கூறுகள் இவையாகும்.
இதில் சில பக்கங்கள் முன் அனுமதி இல்லாமல் எல்லோரும் பார்க்க முடியாததாக இருக்கிறது. பத்து முக்கிய ஆவணங்கள் ஐரோப்பாவில் புலம் பெயர்ந்துள்ள வெளிநாட்டவர் தொடர்பாக அமெரிக்கா வகுத்திருந்த மோசமான கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது என்று ஜேர்மனிய சஞ்சிகையான ஸீகல் தெரிவிக்கிறது. இவற்றை வெளிநாட்டவர் பார்க்கவே கூடாது என்றும் அது கூறுகிறது. இதில் 297 படிவங்கள் டென்மார்க் அமெரிக்க தூதரகம் சம்மந்தப்பட்ட விவகாரத்தைத் தருகிறது. உலக அறிஞர்கள் துருவித் துருவி படித்துக் கொண்டிருக்கும் இந்த அறிக்கைகளில் பல முக்கிய அதிர்ச்சி தரும் தகவல்கள் மெல்ல மெல்ல வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதவரை நமது காதுகளுக்கு எட்டிய முக்கிய தகவல்கள்.
01. ஈரான் மீது போரை ஆரம்பிக்கும்படி அமெரிக்கா மீது சவுதி அரேபியா மன்னர் அழுத்தம் கொடுத்திருக்கிறார். தமக்கு அருகில் ஓர் அணுசக்தி வல்லரசு வருவதை சவுதி விரும்பவில்லை. இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையீனத்திற்கும் மத்திய கிழக்கில் ஓர் அமைதி வரமுடியாமைக்குமான ஈகோ பிரச்சனைக்கு இது ஓர் உதாரணமாகத் தெரிகிறது.


02. ஈரானுக்கு மேல் போர் தொடுக்கும்படி கேட்ட சவுதி அரேபியா மறுபுறத்தால் அல் குவைடா பயங்கரவாத அமைப்பிற்கும் ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா கருதியது. மறுபுறம் சி.ஐ.ஏ உளவாளிகள் மீது ஜேர்மனி கண்காணிப்பு செலுத்தி கைது செய்தல் கூடாது என்றும் கூறியது அமெரிக்கா. அதேவேளை ஹிஸ்புல்லாவிற்கு சிரியாவே ஆயுதம் கொடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
03. பாகிஸ்தானின் அணு குண்டு தயாரிப்பிற்கான யுரேனியத்தை அப்புறப்படுத்த அமெரிக்கா விரும்பி அதற்கான முயற்சிகளில் கடந்த மூன்று வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.. பாகிஸ்தான் வழியாக வடகொரியாவிற்கு இது போவதை அமெரிக்கா தடுக்க ஏற்பாடுகளை முடுக்கிவிட்டது.
04. உலகளாவிய கணினி வலையாக்கத்தை உடைப்பதற்கான இரகசிய முயற்சிகளில் சீனா ஈடுபட்டிருந்தது. 2002ம் ஆண்டு கூகுளை உடைக்க சீனா உத்தரவிட்டது. தலாய்லாமா பற்றிய தகவல்கள் சீனாவிற்குள் வராது தடுக்கவும் ஏற்பாடு செய்தது.
05. மறுபுறம் வட – தென் கொரிய பிரச்சனையை தீர்க்க சீனா இடம் விட வேண்டுமானால் அதற்கு ஒரு தொகைப் பணத்தை கள்ளமாகக் கொடுக்க வேண்டும் என்று தென்கொரியா அமெரிக்காவை கேட்டது. வடகொரியாவை தகர்க்க வேண்டுமானால் அதற்கு சீனாவுக்கு ஒரு தொகை கொடுக்க வேண்டிய அவலம் உள்ளது..மேலும் சீனா ஈரானுடன் உறவு கொள்ளாமல் இருப்பதற்கு பரிசாக சவுதி அரேபியாவில் இருந்து எண்ணெயை சீனாவுக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா சவுதிக்கு விதந்துரைத்தது. மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக சீனா ஆபிரிக்கக் கண்டத்தில் அதிகளவு கால் பதித்துள்ளது. இதைத் தடுக்க வேண்டுமானால் ஆபிரிக்க தலைவர்களுடன் மென் போக்கை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும்.


06. நேட்டோ செயலர் பதவிக்கு முன்னாள் டேனிஸ் பிரதமர் ஆனஸ்போ ராஸ்முசன் தேர்வானபோது துருக்கியுடன் ஒரு இரகசிய உடன்பாடு காணப்பட்டதாக கருதப்படுகிறது. குர்டிஸ்தானிய றோய் டி.வியை பணயம் வைத்து துருக்கியை சம்மதிக்க வைத்தார். அதேவேளை நேட்டோவின் உதவி செயலர் பதவிக்கு ஒரு துருக்கியரை நியமிக்கவும் உடன்பட்டதாகக் கூறப்படுகிறது.
07. உலகத்தலைவர்கள் பற்றிய அமெரிக்காவின் உண்மையான மன வெளிப்பாடுகள் வெளியாகியுள்ளள. ரஸ்ய பிரதமர் புற்றினை அடங்காத நாய் என்று அமெரிக்க உள்ளம் கருதியுள்ளது. அதேபோல ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மார்க்கல் ஆபத்தான பாதையில் ஓடப்பயந்தவர் என்றும், பிரான்சிய ஸார்கோசியை ஆடையில்லாத சக்கரவர்த்தி என்றும் உக்ரேனிய மருத்துவத் தாதிகள் இல்லாது வெளியே போகப் பயப்படும் லிபிய கடாபி என்றும், பக்கவாதம் பிடித்த கர்மீட் கர்சாய் என்றும் தெரிவிக்கிறது. இதுபோல பட்டங்கள் பல உலகத் தலைவர்களுக்கு அமெரிக்காவால் சூட்டப்பட்டிருந்தது. ஒரு சிலருடையது தவிர மற்றவர்களுடைய பட்டங்கள் அதிகம் வெளிவரவில்லை. சில நாடுகளில் உள்ள உணர்ச்சி அரசியல் காரணமாக அவற்றை உடன் அறிய வசதிகள் இல்லாதிருக்கிறது.
08. ஈராக் போருக்கு ஐ.நா அனுமதி வழங்காத போது அமெரிக்காவுடன் இணைந்து டென்மார்க்கும் ஏன் போனது. அதற்குள் இருக்கும் மர்மங்கள் என்ன ? இது குறித்த தகவல்களையும் விக்கிலீக்ஸ் தரும் என்றும், கிடைக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் முழுமையான விசாரணைகள் நடக்கும் என்றும் முன்னாள் டேனிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் மோண்ஸ் லுக்க ரொப்ற் தெரிவித்தார். குவான்ரநோமோ கைதிகளை விடுவிக்க அமெரிக்கா முயன்ற செய்தியும் உள்ளது.


09. ஆப்கான் போர் பற்றி 90.000 தகவல்கள் உள்ளன. இதில் வலுது குறைந்த ஆப்கான் அதிபர் கர்மீட் கர்ஸாய் பற்றிய இரகசியங்களும் உள்ளன. ஆப்கான் உதவி அதிபர் 52 மில்லியன் டாலர்களை அரபு எமிரேட்சிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுள்ளார்.
10. இந்தியா – பாகிஸ்தான் பற்றிய செய்திகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பதட்டத்தை தணிக்க அமெரிக்கா முயன்றதாகக் கூறப்பட்டாலும் இது குறித்த அடிப்படை மர்மங்களும் வெளிவர மேலும் வாய்ப்புண்டு.
11. ஐ.நா செயலர் உட்பட முக்கிய தலைவர்களின் வங்கிக் கணக்குகள், தொலைபேசி இலக்கங்கள், கைத்தொலைபேசிகள், அவற்றின் செயற்பாடுகள் யாவும் அமெரிக்காவின் முழுமையான கண்காணிப்பிற்குள் வரவேண்டுமென கொண்டலிசா றைஸ் உத்தரவிட்டார். ஐ.நா செயலர் வன்னியில் நடந்த போரில் ஏன் பக்கச்சார்பாக நடந்தார் என்ற கவலைக்கான பதிலும் இதில் ஒழிந்துள்ளது. புவி வெப்பமடைதல் காலநிலை மாநாட்டை நடாத்துவதற்கான தகுதி டேனிஸ் அரசியல் தலைமைக்கு இருக்கிறதா என்ற விவகாரத்தில் கிளரி கிளின்டன் கவலை கொண்டிருந்தார்.
12. பாகிஸ்தான் அதிபர் ஸர்தாரி ஒரு மூளை குழம்பிய நபர் என்றும் மிஸ்டர் பத்து வீதம் என்ற பட்டப் பெயர் கொண்டவரென்றும் சவுதி மன்னர் அப்துல்லா கூறியுள்ளார். தலை குழம்பிய ஒருவர் ஊழல் பேர்வழி வேறு, 11 வருடங்கள் சிறையில் இருந்தவர், இலஞ்சம், படுகொலை போன்ற குற்றங்களுக்கு இதுவரை தண்டனை பெறாத ஒருவர் ஆட்சியில் இருந்தால் நாடு உருப்படுமா என்று சவுதி மன்னர் கேட்டுள்ளார். அதேவேளை வெளிப்படையாக பேசும்போது இஸ்லாமிய சகோதரர் என்று புகழ்வதும் மன்னரின் வழமையாக இருந்துள்ளது.
இப்படியான அறிக்கைகள் அமெரிக்காவில் இருந்து எதற்காக வெளியீடு செய்யப்பட்டன என்ற கேள்வி இங்கு முக்கியம். தற்போதய ஒபாமா ஆட்சி உலகம் முழுவதும் நிலவும் பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமையை இழந்துள்ள நிலையில் நடந்துவிட்ட மடைத்தனமான விடயங்களுக்கு தாம் காரணமல்ல என்று கூறாமல் தப்பித்துக்கொள்ள இந்த அறிக்கைகள் உதவியாக அமைய இடமிருக்கிறது. அமெரிக்க சரித்திரத்திலேயே இப்படியாக இரகசியங்கள் இலட்சக்கணக்கில் கசிந்ததாகக் கூற முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் வெளியான மேற்கண்ட உண்மைகள் அதற்கும் உலகின் மற்றய நாடுகளுக்குமான நல்லுறவைப் பாதிக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.


இது மட்டுமல்ல விக்கிலீக்ஸ் என்பது மேலும் பல உண்மைகளை வெளியிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தவகையில் வன்னியில் நடைபெற்ற போர், அதன் பின்னால் தொழிற்பட்ட கரங்கள், அதன் நிதர்சனங்களையும் அது முன் வைக்கலாம். அனைத்து தடயங்களையும் அழித்தாலும் முள்ளிவாய்க்காலில் 2009 மே 16, 17, 18 ஆகிய மூன்று தின இருள் நிகழ்வுகளும் அம்பலமாகாது என்று கருத முடியாது. விக்கிலீக்ஸ் குறித்த செய்திகளை வெளியிட்ட கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகளின் இன்றைய எழுத்தோட்டத்தில் மெல்லிய நடுக்கம் தெரிகிறது. ஆதிக்க சக்திகளுக்கு மட்டுமே புவியல் இடம் என்ற கடந்த நூறு வருட கருதுகோளில் ஒளிபோல ஒரு மாற்றத்தை நவீனதொழில் நுட்பம் ஏற்படுத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக