திங்கள், 6 டிசம்பர், 2010

கொல்லப்பட்டவர்கள் புலிகளே-ராஜபக்சே- தற்ஸ்தமிழ்

மிகக் கொடூரமான முறையில் தங்களிடம் பிடிபட்டவர்களை சிங்கள ராணுவத்தினர் கொலை செய்த செயலை அந்த நாட்டு அதிபர் ராஜபக்சே நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
போரின்போது பிடிபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையாக நடத்தி விசாரணைக்குப் பின்னரே தண்டிக்க வேண்டும் என்பது சர்வதேச விதி, நியதி.




மனித உரிமைகளுக்கே இதில் முதலிடம் என்பதும் அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்கும் நியதியாகும்.
ஆனால் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல், தங்களிடம் சிக்கியவர்களை, நயவஞ்சமாக பிடிக்கப்பட்டவர்களை மிகக் கொடூரமான முறையில் கொன்று குவித்தும், பாலியல் பலாத்காரம் செய்தும், உடல் உறுப்புகளை மோசமான காட்டு விலங்குகளைப் போல கதறிக் குதறி துண்டுபடுத்தியும் வெறியாட்டம் போட்டுள்ளது சிங்கள ராணுவம்.
ஹிட்லர் கூட இவர்களைப் பார்த்து பயந்துநடுங்கிப் போயிருப்பான் உயிருடன் இரு்நதிருந்தால். யூதர்கள் கூட இவ்வளவு மோசமான, அவலமான மரணத்தையும், சித்திரவதையையும் நிச்சயம் சந்தித்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ஈழத்துத் தமிழர்களும், அவர்களுக்காக போராடி விடுதலைப் புலிகளும் மிக மோசமான சித்திரவதைகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் ஆளாகியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. உலக மக்களை இது உலுக்கி எடுத்து வரும் போதிலும், இலங்கை அரசையோ அல்லது அந்த அரசுக்கு சப்பைக் கட்டு கட்டி, கண்மூடித்தனமான ஆதரவு தெரிவித்தவர்களையோ எந்த வகையிலும் சலனப்படுத்தவில்லை. மாறாக இந்த செயலைநியாயப்படுத்தியுள்ளார் ராஜபக்சே.
லண்டனுக்குப் போய் உயிர் பிழைத்தால் போதும் என்ற ரீதியில் தப்பி ஓடி வந்த ராஜபக்சே லண்டன்டைம்ஸ் இதழுக்கு இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில்,
இலங்கை படையினர் பயங்கரவாதிகளை மாத்திரம் கொலை செய்தார்கள். எந்த ஒரு குடிமகனையும் இலங்கை ஒருபோதும் கொலை செய்யவில்லை.
எமது அறிவுறுத்தல் எந்த ஒரு பொதுமகனையும் தாக்கக்கூடாது. இது ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்பதாகவே இருந்தது.
எதிரெதிர் தாக்குதலின் போது ஒன்று அல்லது இரண்டு பொதுமக்கள் தாக்குதலில் சிக்கியிருக்கவும் கூடும். இது குறித்து நான் கவனம் செலுத்துவேன்.
எனது ஆக்ஸ்போர்ட் யூனியன் பேச்சை ரத்து செய்ததில், அந்த யூனியன் தலைவர் தமிழ் குழுக்களால் அச்சுறுத்தப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன் என்று பேசியுள்ளார் ராஜபக்சே.
இலங்கை ராணுவம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மேற்கொண்ட 20 000 பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பெரும்பாலான பொதுமக்கள் புலிகளாலேயே கொல்லப்பட்டனர். அவர்களைப் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். அரசு கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு அவர்கள் தப்பி வர முயற்சித்தபோது புலிகள் அவர்களைக் கொலை செய்தார்கள்.
எந்த நாடும் செய்ய இயலாத சாதனையாக நாங்கள் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டுள்ளோம். இப்போது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டியுள்ளதால், இப்போதோ எதிர்காலத்திலோ இலங்கையின் எந்தத் துறைமுகமும் சீனாவின் கடற்படைத் தளமாக இருக்காது. இந்தியா அல்லது வேறு நாடாகவும் இது இருக்கலாம்.
தற்போது வெளியாகியுள்ள அனைத்து வீடியோக்களையும் நான் நிராகரிக்கிறேன். இது போன்றதொரு வீடியோவும் முன்னர் ஒளிபரப்பாகியுள்ளது. எல்லாம் போலியானவை.
சரத் பொன்சேகா தொடர்பான அனைத்தும் சட்டமுறைகளுக்கு உட்பட்டது. அதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. அதேபோல கருணாவுக்கு மன்னிப்பு தரப்பட்டது பெரிதாக்கப்படுகிறது. கருணா மட்டுமல்ல, எவரையும் மன்னிக்க நாம் தயாராக உள்ளோம். ஜனநாயகப் பாதைக்கு வர முடியுமானால் அவர்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.
போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணையை முன்பே செய்துள்ளோம். ஆணையத்தையும் ஏற்படுத்தியுள்ளோம்.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 3 லட்சம் மக்களில் மீள் குடியேற்றத்தை எதிர்பார்த்து 10,000 பேரே உள்ளனர். சிறுவர் போராளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார் ராஜபக்சே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக