திங்கள், 6 டிசம்பர், 2010

மன்னாரில் வௌ்ளம் மீள்குடியேறிய மக்கள் அவதி...!

நாட்டில் பரவலாக ஏற்பட்டிருக்கும் சீரற்ற கால நிலையின் காரணமாக மன்னார் மாவட்டத்திலும் அதன் தாக்கம் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெள்ள நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில்..



முசலிப்பிரதேசத்தில் உள்ள குளங்களில் அகத்திமுறிப்பபுக் குளம் மேட்டு நிலத்தில் அமைந்திருக்கும் குளமாக இருக்கும் நிலையில் நேற்று அதிகாலையளவில் இது உடைப்பெடுத்திருக்கின்றது. இந்நிலையில் முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேறியவர்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்திருக்கின்ற நிலையில் சுமார் 2460 குடும்பங்களைச்சேர்ந்த 11480ற்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்திருக்கின்றனர்.


முசலிப் பகுதியில் ஏறத்தாழ 52 சிறிய குளங்கள் இருக்கும் நிலையில் தற்போது முதற்தடவையாக மேற்படி குளம் உடைப்பெடுத்திருக்கின்றது எனவும் ஏனைய குளங்கள் அனைத்தினதும் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாகவும் அவை எந்த நேரத்திலும் உடைப்பெடுக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவருகின்றது. இந்நிலையில் தற்போது உடைப்பெடுத்திருக்கும் அகத்தி முறிப்புக்குளத்தின் நீர் வெளியேறியிருக்கும் நிலையில் காலபோகச் செய்கைக்கு தயாராக இருந்த சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலப்பகுதிகளும் நெல் விதைக்கப்பட்ட நிலப்பகுதிகளும் நீரில் மூழ்கியிருக்கின்றது.


இதனை அடுத்து அப்பகுதிக்கு முசலிப் பிரதேச செயலாளர் கேதீஸ்வரன், விஜயம் மேற்கொண்டு நிலமையை பார்வையிட்டிருப்பதோடு அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி, பாதிப்பிற்குள்ளான மக்களிற்கான சமைத்த உணவினை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையினையும் மேற்கொண்டிருக்கின்றார்.


இதேவேளை நீர்ப்பாசனப் பொறியியலாளர், மற்றும் மன்னார் மாவட்ட இடர் முகாமைத்துவ அதிகாரிகள் ஆகியோரும் குறித்த பகுதிக்குச்சென்று நிலமையை அவதானித்திருக்கின்றனர். இதுதவிர பாலியாறு பெருக்கெடுத்திருப்பதன் காரணமாக மன்னார் – பூநகரி ஏ32 பிரதான வீதியை மேவி வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் மீள்குடியேற்றப்பகுதி மக்களின் போக்கு வரத்துக்களும் ஸ்தம்பிதம் அடைந்து வருகின்றது.


அதேவேளை கடும் மழை காரணமாக தேத்தாவாடி குளம் பெருக்கெடுத்து உடைப்பெடுத்திருப்பதனால் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் இருந்து வரும் தேத்தாவாடி வீதியை மேவி வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் குறித்த வீதியினூடான போக்குவரத்தும் தடைப்பட்டிருக்கின்றது.


அதேசமயம் கொடிகட்டியாறு பெருக்கெடுத்திருப்பதன் காரணமாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் இருந்து வரும் பள்ளமடு – பெரியமடு வீதியும் வெள்ள நீரில் மூழ்கியிருக்கின்றது. இதன் காரணமாக மேற்படி பகுதிகளுக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.


மன்னார் மாவட்டத்தில் தொடதுச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கான நிவாரணப்பணிகளும் முடக்கிவிடப்பட்டிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக