வியாழன், 29 ஏப்ரல், 2010

பதவியும் ஆபத்தும்!!

மகாவம்சம் கூறுவது போல், காசியப்ப மன்னன் பாரிய அச்சத்திலேயே இருந்தார். எப்போதாவது எதிரிகள் வந்து தனது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சத்தில், அவரது மாளிகையை கல்மலையின் உச்சிக்கு கொண்டு சென்றார். சீகிரி ராஜ்ஜியத்தை ஏற்படுத்திய அவர், தனது மாளிகையை எவரும் நெருங்க முடியாதவாறு பாரிய சுவர்களை எழுப்பினார். அகழிகளை அமைத்து அதில் மனித மாமிசம் உண்ணும் முதலைகளை இட்டார். எதிரிகள் தனது ராஜ்ஜியத்திற்குள் நுழைய முடியாதவாறு நாலபுறமும் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தார். காசியப்பன் தனது ராஜ்ஜியத்தை பாதுகாத்து கொள்வதற்காக ஏற்படுத்தி கொண்ட ஏற்பாடுகளை போலவே மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் பாதுகாப்பு அரண்களை அமைத்து கொண்டுள்ளதை காணமுடிகிறது. தனது பதவி காலம் முடிவதற்கு முன்னர், மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மேலும் 7 வருடங்களுக்கு பதவிகாலத்தை நீடித்து கொண்டார். அதேபோல் நாடாளுமன்றத்தில் தனது அதிகாரத்தை பாதுகாத்து கொள்வதற்காகவே தனது சகோதர்களில் ஒருவரான ஷமல் ராஜபக்ஷவை சபாநாயகராக நியமித்துள்ளார். ஓய்வுப் பெறும் வயதில் டி.எம்.ஜயரத்ன பிரதமராக நியமிக்கப்பட்ட போதிலும் எதிர்வரும் நவம்பர் மாதத்தின் பின்னர், பசில் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ஜனாதிபதியும் ராஜபக்ஷ, பிரதமரும் ராஜபக்ஷ குடும்பத்தினாராக இருப்பர். இராணுவம், காவற்துறை உள்ளிட்ட பாதுகாப்புக்கு பொறுப்பாக ராஜபக்ஷ ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு நாலாப்புறமும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதால், எதிரிகள் நுழைய மாட்டார்கள் என மகிந்த நினைக்ககூடும். வெளியில் இருந்து மாத்திரமல்ல, அரசாங்கத்திற்குள்ளும் எதிரிகள் தலையெடுக்க முடியாது என அவர் எண்ணக்கூடும். இந்தியாவில் இருந்து படையை கொண்டு வந்து தனது ராஜ்ஜியத்தை சகோதரர் கைப்பற்றி விடுவார் என்ற அச்சம் காசியப்ப மன்னளுக்கு இருந்தது. எனினும் மகிந்தவுக்கு இருக்கும் அச்சம் என்ன?. ஷமல் ராஸபக்ஷவை சபாநாயகராக நியமித்தன் மூலம் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தனக்கு அச்சம் இருப்பதை மகிந்த முழு நாட்டுக்கும் வெளிப்படுத்தினார். மகிந்தவுக்கு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த அச்சம் வெறுமனே வந்துவிடவில்லை. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச கலைத்தது போல், அமைச்சரவை என்ற சீட்டு கட்டை கலைக்க சென்றதால், மகிந்தவுக்கு இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. பிரேமதாச, ஜே.ஆரின் அரசாங்கத்தில் நீண்டகாலமாக அமைச்சு பதவிகளை வகித்தவர்களின் அமைச்சுக்களை மாற்றம் செய்ததால், பெரும் எதிரிகளை சம்பாதித்துக் கொண்டார்.ஜே.ஆரின் காலம் முதல் வர்த்தக அமைச்சராக பணியாற்றிய லலித் அத்துலத்முதலியை பிரேமதாச அந்த பதவியில் இருந்து நீக்கினார். விவசாய அமைச்சர் பதவியில் இருந்து காமினி திஸாநாயக்கவை நீக்கி விட்டு, அவருக்கு பெருந்தோட்டத்துறையை கையளித்தார். இவ்வாறு ஜே.ஆர் காலத்தில் அமைச்சர்களாக இந்த பலரின் அமைச்சுக்களை மாற்றிவிட்டு, பிரேமதாச, அவர்களுக்கு புதிய அமைச்சுக்களை வழங்கினார். இந்த அமைச்சுப் பொறுப்பு மாற்றங்களே ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வழிகோலியது. அது மாத்திரமல்ல, பிரதமர் பதவியை கோரிய லலித், காமினி ஆகியோருக்கு அதனை வழங்காது, ஓய்வுப் பெறும் வயதில் கண்டி மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட டி.பி.விஜேதுங்கவுக்கு அந்த பதவியை வழங்கினார். பிரதமர் பதவியை கண்டிக்கு வழங்கியதன் மூலம் பிரேமதாச பலரை பகைத்துக் கொண்டார். பகைத்து கொண்டவர்களே இந்த நம்பிக்கையில்;லாப் பிரேரணையை கொண்டு வந்தனர். மகிந்த, பிரேமதாசவை போல், சீட்டு கட்டை கலைத்தது மாத்திரமல்ல, பிரதமர் பதவியை கோரிய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு அந்த பதவியை வழங்காது, பிரதமர் பதவியை கண்டிக்கு வழங்கினார். மைத்திரபால சிறிசேன என்பவர், சந்திரிக்காவிடம் போராடி மகிந்தவுக்கு பிரதமர் பதவியை பெற்றுக் கொடுத்தவர். சந்திரி;க்க, லக்ஷ்மன் கதிர்காமருக்கு பிரதமர் பதவியை வழங்க முயற்சித்த வேளையில், அரசாங்கத்தை ஜே.வீ.பீயிடம் இருந்து காப்பற்ற, அந்த கட்சியுடன் போராடிய மகிந்தவுக்கு பிரதமர் பதவியை கொடுக்க வேண்டும் என மைத்தரிபால கூறினார். யாரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனக் கூறி, ஜே.வீ.பீயின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, சந்திரிக்காவிடம் பட்டியல் ஒன்றையும் வழங்கியிருந்தார். அந்த பட்டியலில் முதல் பெயராக லக்ஷ்மன் கதிர்காமரின் பெயரே காணப்பட்டது. இரண்டாவதாக அனுர பண்டாரநாயக்கவின் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், மூன்றாவது பெயராக மைத்திரிபால சிறிசேனவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மகிந்தவை புறக்கணித்து விட்டு, ஜே.வீ.பீயினர் தனது பெயரை பரிந்துரைத்திருந்த வேளையில், ஜே.வீ.பீயின் தாளத்திற்கு ஆடாமல், மகிந்தவை பிரதமராக நியமிக்குமாறு மைத்திரிபால சந்திரிக்காவுக்கு யோசனை கூறினார். லக்ஷ்மன் கதிர்காமர் பிரதமர் பதவியை எதிர்பார்த்துள்ள நிலையில், மகிந்தவுக்கு அந்த பதவியை வழங்கினால், கதிர்காமர், அதிருப்தியடைவார் என சந்திரிக்கா கூறிய போது, கதிர்காமரை தேற்றும் பொறுப்பை மைத்திரிபால ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர், மகிந்தவை, ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது தொடர்பிலும் மைத்திரிபால சிறிசேனவே, சந்திரிக்காவின் மனதை மாற்றினார். மகிந்த ஜனாதிபதியானதும், தான் பிரதமராகலாம் என்ற எண்ணம் மைத்திரிபாவிடம் இருந்ததோ தெரியவில்லை. 2005 ஆம் ஆண்டு மகிந்த ஜனாதிபதியாக பெறுபேற்றதும், அரசாங்கத்தை பாதுகாத்து கொள்ள ரட்ணசிறி விக்ரமநாயக்கவை பிரதமராக்குவோம் மைத்திரிபால, மகிந்தவிடம் கூறினார். சந்திரிக்காவிற்கு ஆதரவுள்ள நாடாளுமன்றம் செயற்படும் நிலையில், மகிந்த ஜனாதிபதியாக பதவி வகிப்பதால், சந்திரிக்காவின் பிரதமரான ரட்ணசிறியை பிரதமராக நியமித்து, அரசாங்கத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணியிருக்கலாம். மகிந்த இரண்டாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டப் பின்னர், நடத்தப்படும் பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்;று பிரதமராகலாம் என மைத்திரிபால எண்ணியிருக்ககூடும். இதன் காரணமாவே மைத்திரி யுகத்தை ஆரம்பித்து வைப்போம் எனக் கூறி அவர் தனது பொதுத் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார். மைத்திரிபால, மகிந்தவிற்கு அடுத்தவர், என மைத்திரிபால சிறிசேனவின் புத்தம் ஒன்றை வெளியிடும் வைபவத்தில் உரையாற்றிய பேராசிரியர் காலோ பொன்சேக்கா குறிப்பிட்டிருந்தார். பொதுத் தேர்தல் முடிவடைந்து, மகிந்த, பிரதமர் பதவிக்கான நபரை தேடும் போது, தான் அந்த பதவிக்கு பொறுத்தமானவர் என மைத்திரிபால பகிரங்கமாக கூறியிருந்தார். மைத்திரிபாலவுக்கு பிரதமர் பதவியை வழங்காது மாத்திரமல்ல, அவர் சந்திரிக்கா காலத்தில் வகித்து வந்த அமைச்சு பதவியை அவரிடம் இருந்து பறித்து கொண்டார். அதேவேளை ஊவாவில் இருந்து பிரதமரை தெரிவுசெய்வோம் எனக்கூறிய நிமால் சிறிபாலவுக்கும், மைத்திரிபாலவுக்கு நேர்ந்த கதியே நேர்ந்தது. நிமால் சிறிபால டி சில்வா, பல காலமாக பிரதமராக பதவியேற்கும் கனவை கொண்டிருந்தார். அவருக்கு பிரதமர் பதவி மாத்திரமல்ல, அவர் சந்திரிக்கா காலத்தில் இருந்து வகித்து வந்த அமைச்சு பதவியும் இல்லாமல் போனது. டி.எம்.ஜயரத்ன பிரதமராக பதவியேற்கும் வைபவத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவில்லை. அமைச்சர்கள் பதவியேற்கும் வைபவத்தில் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலரை தவிர ஏனைய அனைவருமே அதிருப்தியான முகத்துடனேயே இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். சந்திரிக்காவுக்கு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ததன் காரணமாக எதிரிகளை உருவாக்கி கொண்டதாகவும் எதிர்காலத்தில் நாம் பார்த்துகொள்வேமே என பதவியேற்றப் பின்னர், நடைபெற்ற தேனீர் விருந்தின் போது, சிரேஷ்ட அமை;சசர் ஒருவர், அரச அதிகாரியொருவரிடம் தெரிவித்திருந்தார். அவர் கூறியது சரிதான், சந்திரி;க்கா திடீரென அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தினார். அப்போது மகிந்த தொழிலமைச்சராக இருந்தார். சந்திரிக்கா, மகிந்தவிடம் கலந்தாலோசிக்காமலேயே தொழில் அமைச்சர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, அவரை மீன்பிடி அமைச்சராக நியமித்தார். அப்போது முதலே மகிந்த, சந்திரிக்காவுக்கு எதிரான அரசியல் விளையாட்டை ஆரம்பித்தார். காரணம் தான் வகித்து வந்த பதவியில் மாற்றம் செய்தமை தொடர்பில், மகிந்த கடும் அதிருப்தியையும் ஆத்திரமும் வேதனையையும் கொண்டிருந்தார். இந்த நிலையில், மகிந்த ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போது, அமைச்சர்களுக்கு தெரியாமல், அவர்களின் பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது, அமைச்சர்களுக்கு ஏற்படும் வேதனையை மகிந்த அறிந்திருக்கவில்லையா?. முடியும். இதன் காரணமாவே சபாநாயகர் தெரிவுசெய்யப்பட்ட பின்னர், அவர் அமைச்சரவையை நியமித்தார். சபாநாயகர் தெரிவுக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி சந்திருந்தார். ரணில் தன்னுடன் இருப்பதாகவும், தனக்கு எதிராக சூழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என செய்தியை அமைச்சர்களுக்கு வழங்கவே, ஜனாதிபதி ரணிலை சந்தித்தார். அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர், சபாநாயகர் தெரிவு செய்யும் ரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றிருக்குமானால், தனது நியமனம் தொடர்பில் வேதனையடைந்த அமைச்சர்கள் எதிரணியின் சபாநாயகர் வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என்ற அச்சம் மகிந்தவிடம் காணப்பட்டது. இதன் காரணமாகவே சபாநாயகர் பதவிக்கு போட்டியாளரை நியமிக்க வேண்டாம் என்ற இணக்கத்தை, மகிந்த, ரணிலுடன் ஏற்படுத்தியிருக்ககூடும். ரணிலும் இந்த சந்தர்ப்பத்தை மகிந்தவிற்கு வழங்கி விட்டு, பிரச்சினைகள் முற்றும் போது, அரசியல் விளையாட்டை நடத்த எண்ணியிருக்கலாம். எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ஷ தனது ராஜ்ஜியத்தை பாதுகாத்து கொள்ள நாலாப்புறமும் ராஜபக்ஷ என்ற அதியுயர் பாதுகாப்பு வலையத்தை ஏற்படுத்தியிருந்தாலும், வெளியில் இருந்து வரும் எதிரியை விட, உள்ளிருந்து வரும் எதிர்ப்பை சமாளிப்பது இலகுவானதல்ல. காசியப்ப மன்னர், சீகிரிய குன்றில் ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி, நாலாப்புறமும் சுவர்களை எழுப்பி, அகழியை அமைத்து, மரண பொறியை வைத்த போதிலும் எதிரிகள் நுழைவதை அவரால் தடுக்க முடியாது போனது. தனது அரசாங்கம், சீகிரி குன்றை விட பலமானது எனவும் தனக்கு ஆறில் ஐந்து பெருபான்மை பலம் இருப்பதாக ஜே.ஆர்.ஜயவர்தன கூறியிருந்தார். அந்த குன்றை இந்திய டயனமைட்டை வைத்து தகர்க்கும் வரை ஜே.ஆர் அதனை அறிந்திருக்கவில்லை. இதனால் மகிந்த கவனமாக இருக்க வேண்டும். எனினும் அதிக கவனமும் ஆபத்தில் முடியக்கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக