வியாழன், 29 ஏப்ரல், 2010

கடத்தும் முயற்சி முறியடிப்பு!

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நேற்று வியாழக்கிழமையும் நேற்று முன்நாள் புதன்கிழமையும் பாடசாலைச் சிறுவர்களைக் கடத்திச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கைகூடவில்லை. மாணவர்களை இலக்குவைத்து கடத்தல்களை மேற்கொள்ள முயல்வோரால் குடாநாட்டில் பெற்றோரும் மாணவர்களும் கல்விச் சமூகமும் பெரும் பீதியடைந்துள்ளது. கடந்த வாரமும் இதுபோன்ற ஓரிரு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் தென்மராட்சியில் மீசாலை மற்றும் மட்டுவில் பகுதியில் நேற்று முன்நாளும் சுன்னாகத்தில் நேற்றுக் காலையும் பாடசாலை சிறுவர்களைக் கடத்தும் முயற்சிகள் இடம்பெற்றும் அவை கைகூடவில்லை. சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தரம் 7 ல் கல்விகற்கும் மீசாலை மேற்கைச் சேர்ந்த இரு மாணவிகள் பாடசாலைக்குப் புதன்கிழமை காலை நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளொன்றில் வேகமாக வந்த இருவர் மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் நிறுத்திவிட்டு அவ்விரு மாணவிகளையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்ல முற்பட்டபோது அவர்களிருவரும் அவர்களிடமிருந்து தப்பி அருகிலுள்ள வீட்டிற்குள் புகுந்து விட்டனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவ்விடத்திலிருந்து வேகமாகச் சென்று மறைந்து விட்டனர். அன்று மாலை 4.30 மணியளவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மட்டுவிலைச் சேர்ந்த மாணவர்கள், பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் மட்டுவில் மத்தியில் வைத்து இவர்களை வெள்ளை வானொன்றில் வந்தவர்கள் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். கடத்தல்காரர்களுடன் மல்லுக்கட்டிய மாணவர்கள் அவலக்குரலெழுப்பவே அயலவர்கள் அவ்விடத்திற்கு வந்துள்ளனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களைக் கடத்த முயன்ற வானின் இலக்கத் தகடுகள் துணியொன்றால் மறைக்கப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதேநேரம், நேற்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் சுன்னாகத்தில் தனியார் வகுப்பொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனொருவனை வானொன்றில் வந்தவர்கள் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். மாணவனின் அருகில் வான் வந்து நின்ற போது அவனின் கழுத்தைப்பிடித்து வானுக்குள் தள்ள முயற்சித்துள்ளனர். எனினும் அந்த மாணவச் சிறுவன் அவர்களை உதறித் தள்ளிவிட்டு தப்பியோடவே கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பெருந்தொகை பணத்தைக் கோரி ஆட்களைக் கடத்தும் சம்பவங்கள் சில இடம்பெற்ற அதேநேரம், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி வதந்திகளும் காட்டுத் தீ போலப் பரவுவதால் குடாநாட்டு மக்கள் கலங்கிப் போயுள்ளனர். கடந்த காலங்களில் யுத்தம் தீவிரமாக நடைபெற்ற நேரத்தில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவங்கள் மக்கள் மனங்களில் நிழலாடுவதால் குடாநாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள அதேநேரம், இவ்வாறான சம்பவங்கள் குறித்து தாங்கள் மிகவும் விழிப்புடனிருப்பதாக படைத்தரப்பும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக