வியாழன், 13 மே, 2010

அந்தத் தாய் நம்புவதைப்போல அவனின் தந்தையும் சகோதரர்களும் நம்புவதைப்போல அவன் திரும்புவான் என்பதையே நாமும் நம்புவோம். அந்த வழிகள் இன்று எங்கிருக்கின்றன? அவன் பல குழந்தைகளுடன்தான், பல சிறுவர்களுடன்தான் காணமல் போயிருக்கிறான். தோழனே! பெரு நிலம் முழுக்க முழுக்க குழந்தைகளின் இரத்தம் படர்ந்த நிலையிலேதான் தோற்றிருக்கிறது. எதிர்பாராத விதமாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அஞ்சலிக்குறிப்புகளில் அவனுக்கும் ஒன்று எழுத நேர்ந்திருக்கிறது. குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் அஞ்சலிக்குறிப்புக்களை எழுதுவது மிகப்பெரும் சாபமாய் வலிக்கிறது. உனது சொற்கள் அவனுக்காக காத்திருந்ததை நானறிவேன். ஏதோ ஒரு தடுப்பு முகாமையும் ஏதோ ஒரு சிறைச்சாலையும் மாறிமாறி தேடிக்கொண்டிருந்தாய். யாரே பார்த்திருக்கிறார்கள் அவனின் கிழிந்த கால்சட்டையை. ஷெல் குழந்தைகளை தின்னும் என்பதையும் சிறுவர்களை கொன்றுபோடும் என்பதையும் அந்தச் சிறுவன் அறிந்திருந்தான். தனக்கு முன்னால் நிகழ்நத எல்லா மரணங்களையும் கண்டு அஞ்சியிருந்தான். எங்கள் சிறுவர்கள் இனி புன்னகைப்பார்களா? அவன் கரைக்கப்பட்ட நிலத்தில் இனி என்ன நிறத்தில் பூக்கள் மலருமா? தன் முகத்தையும் புன்னகையையும் அவன் எங்கு கொண்டுபோய் வைத்திருப்பான். தோழனே! நீங்கள் அவனுக்காக புத்தகங்களை எடுத்து வையுங்கள். அவன் தன் இரவுப்பாடப்பயிற்சிகள் நிறைவு செய்துகொண்டு வகுப்பறைக்கு திரும்புவான். ஒளித்து வைத்த எல்லாவற்றையும் அவன் மீட்டுக்கொண்டு திரும்புவான் என்பதை நாமும் நம்புவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக