வியாழன், 13 மே, 2010

சிங்கள மயமாகும் தமிழர் தாயகப் பிரதேசம்

தமிழர் தாயகப் பகுதிகளை மிக கச்சிதமாகத் திட்டமிட்டு சிங்கள மயமாக்கும் நடவடிக்கையை இலங்கையில் ஆளும் மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற போதிலும், அதனைத் தடுக்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழ் மக்கள் தவித்து வருகின்றனர். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தவித பலமுமின்றி தமிழ் மக்கள் திணறி வருவதுடன், மீண்டும் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளின் தலைமைக் காரியாலயங்கள் இயங்கிய
கிளிநொச்சியிலுள்ள உருத்திரபுரம் தற்பொழுது உருத்திரபுர என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று உதயநகர் தற்பொழுது உதயநகர் மாவத்தை என படையிரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பை படையினர் முற்றாக ஆக்கிரமித்த பின்னர் விகாரைகளை நிறுவுவதும், வீதிகளுக்கு சிங்கப்பெயர் சூட்டுவதும் மிக வேகமாக நடத்தேறியது போன்று, தற்பொழுது யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் பெயர் மாற்றம், பெயர் பலகைகளில் சிங்களத்திற்கு முக்கியத்துவம், பௌத்த விகாரைகளை நிறுவுதல் போன்ற செயற்பாடுகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றன. மன்னார் மடு சந்தியில் புதிதாகத் தோன்றியுள்ள பௌத்த விகாரை பற்றியும், மடு தேவாலயப் பிரதேசத்தில் மீள் குடியேற்றம் என்ற கோதாவில் குடியேற்றப்படவுள்ள 80 சிங்களக் குடும்பங்கள் பற்றியும் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தெரிய வந்தபோதிலும், இதுவரை அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததாகவோ, இந்தக் குடியேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக