வியாழன், 13 மே, 2010

சிங்கள தேசம் ஒரு முள்ளிவாய்க்காலைச் சந்திக்காது என்று நிச்சயமாகக் கூற முடியாது!


முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் போராயுதங்கள் மவுனமாக்கப்பட்டுவிட்ட பின்னர், இன்றுவரை தொடர்ந்தும் தமிழ் மக்கள் அவமானப்படுத்தப்பட்டே வருகின்றார்கள். அவர்களது தன்மானத்தின் மீதான சிங்களத் தாக்குதல் தொடர்ந்தே வருகின்றது. அதன் உச்ச வெளிப்பாடே மாவீரர் துயிலும் இல்லங்களின் சிதைப்பும், தியாகி திலீபன் அவர்களது நினைவுத் தூபி அழிப்பும் ஆகும். மனித நாகரிகத்தின் நிழல் கொஞ்சமும் படியாத வக்கிர மனங்களுடன் சிங்கள தேசம் மேற்கொள்ளும் இத்தகைய ஈனத் தனங்கள் நிச்சயம் எதிர் விளைவுகளைப் பிரதிபலிக்கக் கூடியவை. தமிழ் மக்கள் மீதான இன வன்முறைத் தாக்குதல் காரணமாக உருவான ஆயுதப் போராட்டம் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டதுடன், இலங்கைத் தீவின் பொருளாதாரக் கட்டமைப்பையும் சிதைத்துவிட்டுள்ளது. அந்த ஆயுதப் போராட்டம், பல்வேறு நாடுகளினதும் அரசியல் வியூகங்களுக்குள் சிக்கிச் சிதை பட்டுவிட்ட போதும் சிங்கள தேசம் அதிலிருந்து பாடங்களைப் பெற்று, தமிழ் மக்களை அரவணைத்துச் செல்வதைத் தவிர்த்து வெற்றிப் போதையுடன் தமிழ் மக்களது உணர்வுகள் மீது தொடர்ந்தும் தாக்குதல்களைத்த் தொடுத்து வருகின்றது. இலங்கைத் தீவில் ஆயுத வன்முறையை அறிமுகப்படுத்திய ஜே.வி.பி. சிங்கள அரசுகளால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு ஜனநாயக அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் சிங்களவர் என்ற காரணத்தால் தொடர் துன்புறுத்தல்களோ, அவ மரியாதைகளோ இன்றிப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டார்கள். போதிய எந்தக் காரணங்களும் இல்லாமல், சிங்கள படித்த இளைய தலைமுறையின் விரக்தி காரணமாகவே இந்த ஆயுதப் புரட்சி தென்னிலங்கையில் வெடித்தது. மாறாக, ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் பல பத்து ஆண்டுகளாக சிங்கள இனவெறித் தாக்குதல்களுக்கும், திட்டமிட்ட இன ஒடுக்குதல்களுக்கும், திட்டமிட்ட பொருளாதார, கல்விச் சீரழிப்புகளுக்கும் ஆளான காரணத்தினாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும், ஈழத் தமிழர்களுக்கான நியாயங்களை வழங்குவதற்கு சிங்கள தேசம் முனையாத நிலையில் இந்தத் தொடர் தாக்குதல்கள் ஈழத் தமிழர்களின் மனங்கள் மீது தொடுக்கப்பட்டு வருகின்றது. உலகில் நடைபெற்ற போர்களில் வென்றவர்கள் எல்லோரும், அதில் தோற்றவர்களை அணைத்து ஆசுவாசப்படுத்தி, அவர்களை சமாதான வாழ்வுக்கு அழைத்துச் செல்வதையே குறியாகக் கொண்டு செயற்பட்டு வந்த வரலாறு சிங்கள தேசத்தால் மறுதலிக்கப்பட்டு, தமிழர்கள் தொடர்ந்தும் அவமானப்படுத்தப்பட்டு வருவது ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நியாயப்பாட்டையே உணர்த்துகின்றது. இத்தனைக்கும், தியாகதீபம் திலீபன் அவர்கள் இந்தியாவின் இராணுவ ஆக்கிரமிப்பிற்கெதிராகவே உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அதன் தொடர் வினையாகவே, விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அமைதிப் படைக்கும் இடையே யுத்தம் மூண்டது. விடுதலைப் புலிகள் அப்படி ஒரு முடிவினை எடுக்கத் தவறியிருந்தால், இந்திய அமைதிப்படை இன்றும் இலங்கைத் தீவிலிருந்து வெளியேறியிருக்காது. சிங்கள தேசமும் இந்திய மேலாதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபட நீண்ட போராட்டம் நடாத்த வேண்டிய கட்டாயத்தினுள் இருந்திருக்கும். இன வெறி மேலாதிக்க சிந்தனையைத் தவிர எதுவும் மேலானது அல்ல என்று கருதும் சிங்களம் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை சிங்கள மயப்படுத்துவதில் மட்டுமே முனைப்புக் காட்டுகின்றது. தமிழீழ மக்களது பாரம்பரிய நிலப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் சிங்கள தேசத்தின் ஒவ்வொரு நகர்வும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் மனக் கொந்தளிப்பை உருவாக்கும். சிங்கள அரசின் ஒவ்வொரு இனவாத தாக்குதல்களும் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும். அது மீண்டும் சிங்கள தேசத்தின்மீது புலியாகப் பாயும். ஈழத் தமிழர்களுக்கான நியாயங்கள் உலக நாடுகளை அவர்கள் பக்கம் திரும்ப வைக்கும். அப்போது சிங்கள தேசம் ஒரு முள்ளிவாய்க்காலைச் சந்திக்காது என்று நிச்சயமாகக் கூற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக