புதன், 12 மே, 2010

மட்டக்களப்பு வாழ் தழிழ் மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

கடந்த வருடம் வன்னியில் நடந்துகொண்டிருந்த இன அழிப்பு யுத்தத்தின்போது நாளாந்தம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இனவெறிகொண்ட சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தபோது மட்டக்களப்பில் பல பாகங்களிலும் களியாட்ட நிகழ்ச்சிகளும் விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதை யாவரும் அறிவோம்.
 எமது தாயக பிரதேசத்தின் ஒரு பகுதியில் எமது இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது நாம் சிறப்பான முறையில் விழாக்களை நடாத்துவதும் சந்தோசமாக ஆடல் பாடல்களுடன் பொழுதைக் களிப்பதும் அன்புள்ளம் கொண்ட சீரிய பண்புடைய எந்தவொரு தமிழனுக்கும் ஏற்புடையதாகாது பொதுவாக மனித நேயமற்றதும் மனித குலத்திற்கே இது இழுக்கான விடயமும் கூட. ஆனால் எமது மட்டக்களப்பில் கடந்த வருடம் தை மாதம் தொடக்கம் ஆனி மாதம் வரை பல விழாக்களும் கொண்டாட்டங்களும் வெகு சிறப்பாக நடந்தேறியதை காணலாம் அந்த நேரத்தில் விழாக்களை ஏற்பாடுசெய்தவர்களில் ஒரு சிலர் அரசாங்க சார்புடையவர்களாக இருந்தபோதும் இவ்விழாக்களை பெருமளவான தமிழ் மக்கள் கண்டுகளித்தனர் என்பதே கசப்பான விடயமாகும் மேலும் விழாக்கள் நடந்த இடங்களில் பெருமளவான சிங்கள வியாபாரிகள் கடைகளை நிறுவி தங்களின் வியாபாரங்களை நடாத்தியதையும் நாம் காணக்கூடியதாக இருந்தது. இவற்றை விட இங்குள்ள பல இந்துக் கோயில்களில் குறிப்பாக வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறும் கண்ணகை அம்மன் கோயில்களில் திருவிழா ஒருபுறம் இருக்க இவற்றைவிட வெகுசிறப்பான முறையில் களியாட்ட நிகழ்சிசிகள் நடைபெற்றதைக் காணலாம். இவற்றையெல்லாம் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் கோயில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறத்தான் வேண்டும். மக்கள் சென்று வழிபடுவதும் சிறந்ததே. ஆனால் திருவிழாக்களின் போது நடைபெறுகின்ற களியாட்ட நிகழ்ச்சிகள் எமது பண்பாட்டுக்கும் சைவசமய மரபிற்கும் அப்பாற்பட்டவை என்பதோடு அதுவும் கடந்த வருடம் நடைபெற்றதென்பது மிகவும் மனக்கசப்பான ஒரு விடயமாகும். இப்படிப்பட்ட விழாக்கள் நடைபெறும்போது இங்குள்ள ஒரு சில தமிழ் ஆர்வலர்கள் விழாக்களை ஏற்பாடுசெய்த அமைப்புக்களுக்கும் நபர்களுக்கும் இதற்கு எதிரான தங்களின் கண்டனங்களை தங்களின் மனதுக்குள்ளேயே வைத்திருந்துவிட்டு பொறுக்கமுடியாமல் தங்களின் நண்பர்களிடம் சொல்லி மனம் வருந்தியதை காணக்கூடியதாக இருந்தது. மேலும் இறுதி யுத்த நாட்களில் இங்குள்ள சிலபேர் உணவின்றி உறக்கமின்றி தங்களின் சோகத்தை வெளியிலும் சொல்லமுடியாமல் தவிர்த்ததையும் நாம் காண்கின்றோம். எனவே எமது இனம் எமது உறவுகள் எமது தாயகத்திலே கொல்லப்பட்டும் அங்கவீனமாகியும் சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கும்போது அவர்களுக்கு நாம் உதவிசெய்யாவிட்டாலும் அவர்களின் துக்கத்திலாவது பங்குகொண்டு மனம் இரங்கி பரிவு காட்டுவோம். கடந்த வருடம் தொடங்கி இன்றுவரை நாம் விழாக்களையும் களியாட்ட நிகழ்ச்சிகளையும் நடாத்தி இருந்தாலும் இந்த மாதத்தில் அதாவது வைகாசி மாதத்தில் எஞ்சியுள்ள உள்ள அனைத்து நாட்களிலும் விழாக்கள் கொண்டாட்டங்கள் களியாட்ட நிகழ்ச்சிகளை நடாத்தாமல் தவிர்த்து எமது உறவுகளின் துக்கத்திலும் அவர்களின் துயரங்களிலும் பங்குகொள்வோம். இங்ஙனம் மட்டுநகர் வாழ் தமிழ் உணர்வாளன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக