புதன், 12 மே, 2010

ஆசிய நாடுகளை நோக்கி திரும்பும் மேற்குலகத்தின் கவனத்தை ஈழத்தமிழ் மக்கள் தன்பக்கம் திருப்பவேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது

ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றும் பொறுப்பில் இருந்து விலகி ஐக்கிய நாடுகள் சபை தவறு இழைத்துள்ளதாகவும், சிறீலங்கா விவகாரங்களில் அரசியல் மற்றும் இராஜதந்திர வழிகளில் தலையீடுகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை ஐ.நா தவறவிட்டுள்ளதாகவும் பிரித்தானியாவின் புகழ்மிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ் பற்றன் தெரிவித்துள்ளார்.



கடந்த வாரம் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த பினான்ஸியல் ரைம்ஸ் ஏட்டுக்கு எழுதிய கட்டுரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களை பாதுகாக்கும் கடமை (The principle of Responsibility to Protect (R2P)) என்னும் சரத்தின் அடிப்படையில் சிறீலங்காவில் ஐ.நா தலையீடுகளை மேற்கொண்டிருக்க முடியும் என அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்கா விவகாரங்கள் தொடர்பில் அதிக கவனங்களை செலுத்திவரும் பற்றன் பிரித்தானியாவால் 1997 ஆம் ஆண்டு வரையிலும் நிர்வகிக்கப்பட்ட ஹொங்ஹொங் நாட்டின் இறுதி ஆளுநராகவும், படைகளின் பிரதம தளபதியாகவும் 1997 ஆம் ஆண்டு வரையிலும் பணியாற்றியதுடன், 2000 – 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கைகளுக்கான பிரதிநிதியாகவும் கடமையாற்றியிருந்தார்.

1992 ஆம் ஆண்டு கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய பற்றன் பிரித்தானியாவின் வெளிவிவகார கொள்கைகளை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கைகளுக்கான தலைவராக பற்றன் பணியாற்றிய காலத்தில் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்களை அவர் சந்தித்திருந்தார்.

சிறீலங்காவின் உள்விவகாரங்களில் பற்றன் தலையிடுவதாக சிங்கள கடும்போக்காளர்கள் அன்று பெரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதுடன், பற்றனின் உருவப்பொம்மையையும் தீயிட்டு கொழுத்தியிருந்தனர். வழமைபோல அவரையும் விடுதலைப்புலி என விபரித்த சிங்கள இனவாத கட்சிகளில் ஒன்றான சிகல உறுமயா கட்சி கடும் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டிருந்தது.

சிங்கள கடும்போக்காளர்கள் நோர்வேயின் அமைதி முயற்சிகளுக்கு ஏற்படுத்திய நெருக்கடிகளை தணிக்கும் நோக்கத்துடன் தான் பற்றன் அன்று கொழும்பு வந்திருந்தார்.

எனினும் தன்னிடம் விமான எதிர்ப்பு ஏவுகணை இருந்திருந்தால் பற்றன் கிளிநொச்சிக்கு சென்ற உலங்குவானூர்தியை தான் சுட்டு வீழ்த்தியிருப்பேன் என சிகல உறுமயா கட்சியை சேர்ந்த திலக் கருணாரட்னா தெரிவித்திருந்தும் நாம் நினைவில் கொள்ளத்தக்கது.

ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையில் சமஷ்ட்டி திட்டத்தின் ஊடாக ஒரு தீர்வுத்திட்டத்தை முன்னெடுப்பதை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விரும்பியதாக கிளிநொச்சியில் இருந்து திரும்பிய பின்னர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பற்றன் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஆசிய பிராந்திய வல்லரசுகள் இணைந்து மேற்குலகத்தின் இந்த அமைதிய முயற்சியை சீரழித்ததுடன், மிகப்பெரும் போரையும் கட்டவிழ்த்து விட்டு ஈழத்தமிழ் மக்களின் அரசியல் மற்றும் இராணுவ பேரம் பேசும் பலத்தையும் நசுக்கியுள்ளன.

இந்த நடவடிக்கைகளில் இந்தியா மிக முக்கிய பங்கை வகித்திருந்தது. வன்னியில் நடைபெற்ற போரின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் கொழும்பு வதிவிட பிரதிநிதி தெரிவித்திருந்தார். எனவே இந்தகைய பெரும் அழிவுகள் நடைபெற்ற வேளையில் கூட ஐக்கிய நாடுகள் சபை செயல்திறனற்று இருந்தது மிகவும் வேதனையானது.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையை அவ்வாறான ஒரு நிலையில் வைத்திருந்ததற்கு இந்தியா, சீனா போன்ற ஆசிய பிராந்திய வல்லாதிக்க நாடுகள் தான் முதன்மையான காரணம். எனினும் ஆசிய நாடுகளின் மீது ஒரு அழுத்தத்தை பிரயோகித்து ஐக்கிய நாடுகள் சபையின் மௌனத்தை கலைத்து ஒரு நடவடிக்கைக்கான அழுத்தத்தை மேற்கொள்ள மேற்குலகமும் தவறிவிட்டது என்றே கொள்ளமுடியும்.


Chris-patt இந்த நிலையில் தான் பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் ஒரு மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை பற்றன் வலியுறுத்தியுள்ளார். பற்றனின் பரிந்துரைகளுக்கு அப்பால் பிரித்தானியாவின் கொள்கைவகுப்பாளர்களும் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
அதாவது உலகின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வல்லமையை கொண்ட படை கட்டமைப்புக்களை தற்போது அமெரிக்கா மட்டுமே கொண்டுள்ளது. அதன் படை வலுவானது குறுகிய நேரத்தில் உலகின் எந்த மூலையிலும் போரிடும் ஆற்றலை கொண்டுள்ளது.
சீனா, ரஸ்யா, இந்தியா ஆகிய நாடுகள் மிகப்பெரும் படையினரை (எண்ணிக்கையில்) கொண்டுள்ளபோதும் அவர்களால் ஒரு நெருக்கடியான நிலமைகளை கையாளமுடியாது.

எனினும் ஆசிய நாடுகள் அவ்வாறான ஒரு நிலையை எட்டுவதற்கு முன்னர் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்கா போன்றதொரு படை ஆற்றலை ஏற்படுத்த வேண்டும் என பிரித்தானியாவின் கொள்கைவகுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் மூலம் தான் உலகில் தமது இராஜதந்திர வழிகளை நடைமுறைப்படுத்த முடியும் என அவர்கள் நம்புகின்றனர். அதாவது படைபலம் அற்ற இராஜதந்திர நகர்வு என்பது இசைக்கருவிகள் அற்ற இசை நிகழ்ச்சி போன்றது என்பது அவர்களின் வாதம்.

ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரையில் இராணுவ வலிமையை தக்கவைத்துள்ள நாடுகளாக பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியனவே திகழ்கின்றன. இந்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கணிசமான இராணுவ பலத்தை கொண்டுள்ள போதும், அவர்களின் நகர்வுத்திறனும், வளங்களும் மட்டுப்படுத்தப்பட்டவை.
மேலும் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுமே அணு ஆயுத வல்லமையையும் கொண்டுள்ளன. எனவே இரு நாடுகளினதும் இராணுவத்தையும், கடற்படையையும், வான்படையையும் ஒரே நடவடிக்கை கட்டளை பீடத்தின் கீழ் இணைப்பதன் மூலம் உலகின் எந்த மூலையிலும் தலையீடுகளை மேற்கொள்ளும் வல்லமை கொண்ட படை கட்டமைப்பை ஏற்படுத்த முடியும் என்பது ஆய்வாளர்களின் வாதம்.

இவ்வாறு ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தினால் அது அமெரிக்காவுக்கு இணையாகவும், அதற்கு ஆதரவாகவும், ஆசிய நாடுகளுக்கு சவாலானதாகவும் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை பிரித்தானியாவின் கொள்கைவகுப்பாளர்கள் முன்வைத்துள்ளனர்.

அதனை தான் தற்போது பற்றனும் முன்வைத்துள்ளார். அதாவது ஆசிய நாடுகளை நோக்கி ஒரு வலுவான முனைவாக்கம் மெல்ல மெல்ல வலுப்பட்டு வருகின்றது. ஆசிய நாடுகளை நோக்கி திரும்பும் மேற்குலகத்தின் கவனத்தை ஈழத்தமிழ் மக்கள் தன்பக்கம் திருப்பவேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது.

அதன் மூலம் ஏற்டுத்தப்படும் அழுத்தங்களின் ஊடாகவே சிறீலங்கா அரசை அரசியல் தீர்வு நோக்கி நகரவைக்க முடியும் அல்லது தமிழ் மக்கள் தமக்கு என ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தீர்வை அனைத்துலக சமூகத்தின் முன் முன்வைக்க முடியும்.


வேல்ஸ் அருஷ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக