புதன், 12 மே, 2010

இளைஞர் மற்றும் யுவதிகளைக் வெள்ளை மற்றும் கருப்பு வான்களில் கடத்தி சிறுநீரகம் மற்றும் கண்களைத் தோண்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சிங்கள அரசு - அதிர்ச்சித் தகவல் - நிராஜ் டேவிட்

வெள்ளை வான், கறுப்பு வான் கடத்தல்கள் தமிழர் வாழும் பிரதேசங்களில் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன. யுத்தம் முடிவுக்கு வந்து, இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும், தமிழ் இளைஞர்கள், யுவதிகள் இதுபோன்ற வான்களில் வருபவர்களால் கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் இடம்பெற்றபடிதான் இருக்கின்றன. அண்மையில்
 மட்டக்களப்பின் களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் இதுபோன்ற ஒரு கறுப்பு வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் தப்பி வந்த ஒரு மாணவி வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருந்தது. அந்த மாணவியை கடத்திய வானில் கைகள், வாய் கட்டப்பட்ட நிலையில் மேலும் ஆறு சிறுமிகள் இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார். யாழ். குடாவிலும், இதுபோன்று வெள்ளை வான் கடத்தலில் இருந்து தப்பி வந்த ஒரு சிறுமி, தம்மைக் கடத்தியவர்கள் வசம் மேலும் பல சிறுமிகள் அகப்பட்டிருந்ததாகத் தெரிவித்திருந்தார். வடக்கு கிழக்கில் இதுபோன்ற வெள்ளை வான் கறுத்த வான் கடத்தல் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருவதாகவே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில சம்பவங்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன. பல சம்பவங்கள் வெளிவராமலேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. தமிழ் சிறுமிகள், மாணவிகள், பெண்கள் எதற்காக கடத்தப்படுகின்றார்கள்? கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடக்கின்றது? யாரால் இந்த கடத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன? வடக்கு கிழக்கில் இலட்சத்திற்கும் அதிகமான இலங்கைப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், அவர்களது பாதுகாப்பையும் மீறி இந்த தொடர் கடத்தல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன? இந்தக் கடத்தல்களின் பின்னணியில் இலங்கை அரச படைகள் இருப்பதாக எழுப்பப்படும் சந்தேகத்தில் உண்மை இருக்கின்றதா? விடை தெரியாத இதுபோன்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, வெள்ளைவான் கடத்தல்கள் பற்றி முன்னர் வெளிவந்த சில உண்மைகளை இச்சந்தர்பத்தில் நாம் மீட்டுப் பார்ப்பது அவசியம் என்று நினைக்கின்றேன். இலங்கை வாழ் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த வெள்ளை வான் பீதி இன்று நேற்று ஏற்பட்ட ஒரு விடயம் அல்ல. கடந்த இரண்டு தசாப்த காலமாக வெள்ளை வான் கடத்தல்கள் வடக்கு, கிழக்கு, கொழும்பு போன்ற பிரதேசங்களில் மிக அதிகமாக இடம்பெற்று வருகின்றன. வெள்ளைவான் கடத்தல்கள் முதன் முதலில் மட்டக்களப்பில்தான் ஆரம்பமாகியிருந்தது. 1990ம் ஆண்டு மட்டக்களப்பு நகரம் இலங்கை இராணுவத்தின் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக இருந்த காலம் முதற்கொண்டு அவ்வப்பொழுது இந்த வெள்ளை வான் தொடர்பான அச்சம் மட்டக்களப்பு மக்களை கடந்து சென்றிருக்கின்றது. 1990ம் ஆண்டு 2வது ஈழ யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகரும், புறநகர் பகுதிகளும் வெள்ளை வான் பீதியால் நடுநடுங்க ஆரம்பித்தன. கறுப்பு நிற கண்ணாடியுடன் பவனி வந்த வெள்ளை வானில் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் மீண்டு வந்ததாக வரலாறே கிடையாது. தெருக்களில் செல்லும் இளைஞர், யுவதிகளைப் பிடித்திழுத்து வாகனத்தினுள் ஏற்றிக்கொண்டு சென்றுவிடுவார்கள். பின்னர் அவர்களுக்கு என்ன நடந்து என்று இன்றுவரை எவருக்குமே தெரியவில்லை. இதேபோன்று அக்காலத்தில் ஒவ்வொரு தெருமுனையிலும் அமைக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவச் சோதனைச் சாவடிகளிலும் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திவைக்கப்படும் இளைஞர்களும், இந்த வெள்ளை வானில் ஏற்றப்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டால் அவர்கள் திரும்பமுடியாத இடத்திற்கு அனுப்பப்பட்டு விடுவார்கள். அதேவேளை மட்டக்களப்பில் ஒவ்வொரு முக்கிய சந்திகளிலும் இளைஞர்களின் உடல்கள் டயரில் போட்டு எரியூட்டப்பட்டன. அவ்வாறு எரியூட்டப்பட்ட உடல்களின் சொந்தக்காரர்கள் யார், எவர் என்று அடையாளம் காணமுடியாத அளவிற்கு அந்த பிணங்கள் சாம்பலாகும் வரை எரியூட்டப்பட்டன. மட்டக்களப்பில் பல பகுதிகளிலும் ஆங்காங்கு டயரில் போட்டு எரியூட்டப்படும் பிணங்கள், வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட தங்களுடைய பிள்ளைகளாகத்தான் இருக்கும் என்று தமக்குத்தாமே நினைத்துக்கொண்டு பெற்றோர் வாழாதிருந்துவிடுவார்கள். ஏனெனில் அப்பொழுது மட்டக்களப்பில் நடமாடித் திரிந்த அந்த வெள்ளை வானுக்கு இலங்கைப் பொலிசாரோ, அல்லது இலங்கை இராணுவத்தினரோ உரிமை கோருவது கிடையாது. அந்த காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசா கண்கள் தானம் செய்வதில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தார். ஜப்பான் உட்பட பல நாடுகளுக்கும் ஆயிரக்;கணக்கான கண்களைத் தானம் செய்து அக்காலத்தில் பிரேமதாசா சர்வதேச ரீதியில் பெரும் புகழ் சம்பாதித்திருந்தார். அக்காலகட்டத்தில் மட்டக்களப்பில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட இளைஞர்களின் கண்களைத் தோண்டியெடுத்தே பிரேமதாசா கண் தானம் செய்து வந்ததாக அந்நாட்களில் மக்கள் மத்தியில் பரவலாகப் பேச்சடிபட்டது. மட்டக்களப்பில் நடமாடித் திரிந்த வெள்ளை வானின் பின் புறத்தில் ஒரு பரிசோதனைக் கூடம் இருப்பதாகவும், கடத்தப்படும் இளைஞர்களின் கண்களை உடனடியாகவே பிடுங்கிப் பாதுகாத்துவிட்டு, பின்னர் அவர்களைக் கொலை செய்து டயர்களில் போட்டு எரித்து சாம்பலாக்கி சாட்சியமில்லாமல் மறைத்துவிடுவதாகவும் அக்காலத்தில் மக்கள் அச்சத்துடன்; பேசிக்கொண்டார்கள். இலங்கை பொலிஸில் அக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டிருந்த சீ.எஸ்.யூ. (C.S.U. –Counter Subversive Unit) என்ற விஷேட படைப்பிரிவினரே இந்த வெள்ளை வானில் நடமாடித்திரிந்ததாக பின்நாட்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. மட்டக்களப்பு பைனியர் வீதியிலுள்ள வன இலாகா அலுவலகம் (காட்டுக் கந்தோர்), அரசடி பொது நூலகம் போன்ற இடங்களில் முகாமிட்டுச் செயற்பட்ட இந்தப் சீ.எஸ்.யு. பிரிவினர் மக்களைத் துன்புறத்தவதிலும், சித்திரவதை செய்வதிலும் மிகவும் பிரசித்திபெற்று இருந்தார்கள். கெரில்லாக்களை ஒடுக்குவதற்கென்று விஷேட பயிற்சி பெற்று, ஒரு தனிப்பிரிவாக இயங்கிவந்த இந்தப் பிரிவனரே அக்காலத்தில் வெள்ளை வானைப் பயன்படுத்தி வந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. கால ஓட்டத்தில் இந்த விடயம் மறக்கப்பட்டு விட்டது. எமது அரசியல்வாதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்த விடயம் சுய நலத்திற்கும், சுய விளம்பரங்களுக்கும் உதவாத ஒரு விடயம் என்பதால், இதனைத் தூக்கி; கிடப்பில் போட்டுவிட்டு வேறு சுவாரசியமான, இலாபம் தரும் விடயங்களைக் கவனிக்கச் சென்றுவிட்டார்கள். ஆனால் இந்த வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் பரவியிருந்த வதந்திகளில் உண்மை இருக்கத்தான் செய்தது என்கின்ற விடயம் பின்நாட்களிலேயே வெளித்தெரிய வந்தது. ஒரு சந்தர்ப்பத்தில், வெளிநாட்டு புலனாய்வு நிருபர் (Investigative Journalist) ஒருவரால் இந்த விடயம் நிரூபிக்கப்பட்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை பாதுகாப்பு படையினர் தமிழ் கைதிகளிடம் இருந்து மனித உறுப்புக்களைத் சூறையாடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாக வெளியான செய்திகள் பற்றி ஆராய்வதற்காக ஜப்பானின் மிகவும் பிரபல்யமான புலனாய்வு நிருபர் (Investigative Journalist) அக்கியோ நகஜிமா கொழும்பு வந்திருந்தார். (அக்காலத்தில் இலங்கையில் இருந்து கண்கள், சிறுநீரகம் போன்றன ஜப்பானுக்கே அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஜப்பானுக்கு பெருமளவில் கண்தானம் செய்து அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா ஜப்பானிய அரசிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே இலங்கையில் பலவந்தமாக் களவாடப்பட்ட உறுப்புக்களே ஜப்பானுக்கு கொண்டுவரப்படுகின்றது என்ற செய்தி ஜப்பானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.) இலங்கை வந்த ஜப்பானிய நிருபர் அக்கியோ நகஜிமா தனது ஜப்பானிய நண்பரான ஷிமாமோட்டா என்பவருடன் இணைந்து மனித உறுப்புக்கள் சூறையாடல் தொடர்பான நீண்ட புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல தகவல்களைத் திரட்டினார்கள். இலங்கைப் படைகள் ஜே.வி.பி.யினருடன் சண்டைகளில் ஈடுபட்ட காலத்திலிருந்து இந்த மனித உறுப்பு கொள்ளை இலங்கையில் நடைபெற்று வருவது பற்றி அவர்கள் கண்டறிந்தார்கள். ஆயிரக்கணக்கான ஜே.வி.பி. இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு டயரில் போட்டு எரிக்கப்பட்டபோது, அவர்களின் உடலின் உறுப்புக்கள் ஏற்கனவே அகற்றப்பட்டிருந்ததாக அவர்கள் சந்தேகித்தார்கள். 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் போயிருந்த 168 இளைஞர் யுவதிகள் உட்பட அக்காலப் பகுதியில் இலங்கை படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போன ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் கண்கள், சிறுநீரகம் போன்ற மனித உறுப்புக்கள், பத்திரமாக அகற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டதாக, அந்த ஜப்பானிய புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கண்டறிந்தார்கள். 1991ம் ஆண்டு காலப்பகுதியில் ஒவ்வெரு மனித உறுப்பின் விலையும் சுமார் மூவாயிரம் அமெரிக்க டொலர்கள். 1991ம் ஆண்டில் ஜப்பானில் மாத்திரம் 30 ஆயிரம் பேர் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். மனித உறுப்பு பற்றாக்குறை காரணமாக வருடமொன்றிற்கு 600 முதல் 700 உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைகள் மத்திரமே ஜப்பானில் அப்பொழுது நடைபெறுவதாக தகவல் வெளிடயிட்ட பத்திரிகையாளர் அக்கியோ நகஜிமா, இதுபோன்ற உறுப்புக்களுக்கு ஜப்பானில் அதிக கிராக்கி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். உறுப்புக்களைத் திருடி பெரும் பணத்திற்கு விற்கும் நோக்கத்துடன்தான் இலங்கையின் கிழக்கில் பெருமளவானோர் இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். கிழக்கில் கைதானோரின் உறுப்புக்களைச் இலங்கைப் படையினர் சூறையாடியதால்தான் அவர்களின் உடல்கள் உடனடியாகவே புதைக்கப்பட்டன அல்லது எரிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்திருந்தார். (கிழக்கில் அக்காலகட்டத்தில் 5000 ற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயிருந்த போதிலும் இன்று வரை எவரது உடலும் உருப்படியாகக் கண்டெடுக்கப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.) ஜப்பானியப் புலனாய்வு நிருபர் அக்கியோ நகஜிமா மனித உறுப்பு சூறையாடல்கள் தொடர்பாக தான் இலங்கையில் கண்டறிந்த உண்மைகளை மைனிச்சி சிம்புன் (MAINICHI SHIMBUN) என்ற ஜப்பானியப் பத்திரிகையில் விபரமாக வெளியிட்டிருந்தார். ஜப்பானில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்தத் தொடர் கட்டுரைகளின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ASIA FOUNDATION வெளியிட்டிருந்தது. இந்த விடயம் அமெரிக்கப் பத்திரிகையான சான் பிரன்சிஸ்கோ எக்சாமினர் (SAN FRANCISCO EXAMINER) இலும் பின்னர் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சர்வதேச நாடுகளின் கவனம் அப்பொழுது குவைத் -ஈராக் விவகாரத்திலும், இந்தியாவின் கவனம் ராஜீவ் காந்தியின் படுகொலையிலும் இருந்ததால் இதுபோன்ற அப்பட்டமான ஒரு மனித உரிமை மீறல் விவகாரம் கவனிப்பாரற்று விடப்பட்டது. பின்னர் 1994ம் ஆண்டு, மூன்றாம்; கட்ட ஈழப் போர் ஆரம்பமான போது, மறுபடியும் இந்த வெள்ளை வான் பீதி மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது. ஆனால் இம்முறை கொழும்பிலேயே இந்தப் பயம் ஏற்பட்டிருந்தது. அக்காலத்தில் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் நடமாடிய தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு அவர்கள் உடல்கள் பொல்கொடை வாவியில் வீசப்பட்டன. இவ்வாறு காணாமல் போனவர்கள் அனைவருமே வெள்ளை நிற வான் ஒன்றிலேயே கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து கொழும்பு வாழ் தமிழர்களிடையேயும், இந்த வெள்ளை வான் அச்சத்துடன் பிரஸ்தாபிக்கபடலாயிற்று. இதுபோன்ற ஒரு வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் ஒரு தனிமையான இடத்தில் அடைத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டபோது, தெய்வாதீனமாகத் தப்பிவந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்து, அக்காலத்தில் நிலவிவந்த வெள்ளை வான் பீதியை மேலும் அதிகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொழும்பில் நடமாடித் திரிந்த வெள்ளை வானின் பின்னணியில், மட்டக்களைப் சேர்ந்தவரும், முன்னாள் புளொட் உறுப்பினரும், பின்னர் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவில் ஒரு அதிகாரி தரத்தில் செயற்பட்டவருமான புளொட் மோகன் என்பவரின் பெயர் அடிபட்டது. (சமாதான காலத்தில் 31.07.2004 அன்று புளொட் மோகன் (கந்தையா யோகராசா) விடுதலைப் புலிகளால் கொழும்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்) 2006ம் ஆண்டு நான்காம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து, இந்த வெள்ளைவான் கடத்தல்கள் யாழ்குடாவில் ஆரம்பமாகியிருந்தன. யாழ் குடா முழுவதும் சகட்டுமேனிக்கு இடம்பெற்ற இந்த வெள்ளை வான் கடத்தல்களினால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் போயிருந்தார்கள். ஈழ யுத்தங்கள் முடிவடைந்து சமாதானம் உருவாகும் என்று அனைவரும் ஆசுவாசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் கூட, வெள்ளை வான் கடத்தல்களுடன் இணைந்து கறுப்பு வான் கடத்தல்கள் என்கின்ற ஒரு பயங்கரம் ஆரம்பமாகி, தமிழ் மக்களை அச்சத்திற்குள் ஆழ்த்தி வருகின்றது. இந்த வான்களில் கடத்தப்படுபவர்களுக்கு என்ன நடக்கின்றது என்கின்ற விடயம் ஒரு பெரிய மர்மமாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக