ஞாயிறு, 16 மே, 2010

இன்று முள்ளிவாய்க்காலின் மூச்சு அடங்க தொடங்கிய நாள்

இன்று முள்ளிவாய்க்காலின் இறுதி மூச்சு அடங்கி கொண்டு இருந்தது.முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் மரணக்குரல் , காப்பாற்றுமாறு உரத்து சத்தம் இட்ட அந்த அவலக்குரல் கூட மெல்ல மெல்ல அமைதியாக்கிக்கொண்டிருந்தது. கூடவே எம் இனத்தின் உரிமைகளும் தான் சிங்கள வெறியர்களால் புதைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. எஞ்சியவர்களுடன் முடிந்தால் தப்பி கொள்ளுங்கள் என காயப்பட்ட போராளிகளும், மக்களும் தமது சொந்தங்களுக்கு கூறி விடைபெற்றனர்.
 அனைவரும் இயன்றவர்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் இன்றுதான் பயணமாகி கொண்டிருந்தனர். இன்று காலை வெள்ளைக்கொடியுடன் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறார்கள், வலது குறைந்தோர்கள், முதியோர்களை மற்றும் கணிசமான மக்களுடன் உள்ளூர் நிறுவன தொண்டர்கள் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நகரத்தொடங்கினர். காயப்பட்ட போராளிகள், மக்கள் ஆகியோரை முடிந்தவர்கள் தூக்கி சென்றார்கள் , முடியாதவர்கள் விட்டு சென்றார்கள். விட்டு சென்றவர்கள் எல்லோரும் எங்களையும் கூட்டி செல்லுங்கள், இல்லாவிட்டால் ஏதாவது தந்து கொன்றுவிட்டு செல்லுங்கள் என கெஞ்சி மண்டாடிஅழு தனர்.மக்கள் மூன்று வழிகளால் சென்று கொண்டிருந்தனர். இதன் போது காவலரண்களிலும் ஆங்காங்கேயும் நின்ற போராளிகள் அமைதியாக நின்றனர். எதுவுமே பேசமுடியாத நிலையில்தான் அவர்கள் நின்றார்கள். சில பெற்றோர்கள் தங்ளுடள் பிள்ளைகளை வருமாறு வற்புறுத்தி தமது சிவில் உடைகளை கொடுத்து மாத்திக்கொண்டு போயினர். சில போராளிகள் வேண்டாம் நாங்கள் வந்தால் உங்களுக்கும் ஆபத்து நீங்கள் போங்கள் என்று வழி அனுப்பி வைத்தனர். இதே நேரம் காயப்பட்ட போராளிகளை அனுப்புவதற்காக வட்டுவாகல் நோக்கி நூற்றுக்கணக்கான மக்களை சில போராளிகள் மறித்து வைத்து அவர்களையும் கூட்டி ( காயப்பட்ட, ஊனமுற்ற போராளிகள், போராளிகுடும்பங்கள்) செல்லுங்கள் என கேட்டு அந்த மக்களுடன் அனுப்ப முயற்சி செய்த வண்ணம் இருந்தனர். மன ஆறுதலிற்காக மக்களுக்கும் போராளிகளுக்கும் சிலர் அங்க யூ.என். மற்றும் செஞ்சிலுவை சங்கம் எல்லாரும் நிற்பினம் பயப்படாதையுங்கோ என்று கூறி அனுப்பினர். வட்டுவாகல்.ஓமந்தை, இரணைப்பாலை ஆகிய மூன்று முக்கிய பகுதிகளூடாக சென்றுகொண்டிருந்த மக்களையும் போராளிகளையும் இராணுவத்தினர் தரம் பிரித்து சிறைப்படுத்தினர். இது இவ்வாறு இருக்க மதியத்திற்கு பின்னராக வட்டுவாகல் மற்றும் பொக்கணை பகுதியூடாக நகர்ந்த சிங்களப் படையினர் மக்களையும் காயமுற்ற போராளிகளையும் தேடித்தேடி வேட்டையாடத்தொடங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக