ஞாயிறு, 16 மே, 2010

சிறிலங்காவினது 'நிபந்தனையற்ற' கூட்டாளி

சிறிலங்காவில் சீனச் செல்வாக்கு அண்மைய ஆண்டுகளில் பெரிதும் அதிகரித்துக் காணப்படுகிறது. சிறிலங்காவிற்கான வர்த்தகப் பங்குதாரராகவும் இராணுவ உதவிகளை வழங்கும் கூட்டாளியாகவும் மாத்திரம் தென்னாசிய நாடாகிய சீன விளங்கவில்லை. மாறாக, தென்கிழக்காசியாவில் அமைந்திருக்கும் சிறிலங்காவின் மீது மனித உரிமை போன்ற விடயங்களில் மேற்கு நாடுகளின் பிரயோகிக்கும் காத்திரமான அழுத்தங்களை எதிர்கொள்வதற்கும் சீனா உதவுகிறது. விடுதலைப் புலிகளைச் சிறிலங்கா அரச படையினர் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க, பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. தென்னாசியாவின் பல நாடுகளும் கருதுவதைப் போல, சீனாவின் ஒத்துழைப்பின்றிச் சிறிலங்கா இந்த வெற்றியினைத் தனதாக்கியிருக்க முடியாது. 'விடுதலைப் புலிகளுடனான போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுக்கான தேவை எழுந்த போதெல்லாம் சீனா பெரும் உதவிகளைச் செய்திருக்கிறது' என கொழும்பு பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரான கீதபொன்கலன் கூறுகிறார். இராசதந்திர ரீதியிலும் சீன மக்கள் குடியரசு சிறிலங்காவிற்கான தனது ஆதரவினை வழங்கி நிற்கிறது. சிறிலங்காவினது இன மோதல்களை அரசாங்கம் கையாண்ட விதம் தொடர்பாக, குறிப்பாக போரின் இறுதி நாட்களின் போது அரச படையினர் நடந்துகொண்ட முறை தொடர்பாக மேற்கு நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தின. நாட்டினது மனித உரிமை நிலைமைகள் மேம்படவில்லை எனக்கூறி சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளை ஐக்கிய அமெரிக்கா இடைநிறுத்தியது. ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் கொண்டுவர முற்பட்டபொழுது கொழும்புக்கு ஆதரவாகச் செயற்பட்ட பீஜிங் அந்தத் தீர்மானத்தைத் தடைசெய்தது. இதன் பின்னர் இந்த இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவு என்றுமில்லாதவாறு வலுவடைந்து காணப்பட்டது. சிறிலங்காவிற்கான தனது உதவிகளை எந்தவிதமான நிபந்தனைகளுமற்ற ரீதியில் வழங்குவதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவின் அடிப்படை என வல்லுநர்கள் கூறுகிறார்கள். 'உதவிகளை வழங்குவதற்கு நிபந்தனைகளை விதிக்கும் மேற்கு நாடுகள் மற்றும் உலகவங்கி, அனைத்துலக நாயண நிதியம் போன்ற நிறுவனங்களைப் போலல்லாமல், கேள்விகள் எதனையும் கேட்காமலேயே சீனா சிறிலங்காவிற்கான தனது உதவிகளை வழங்கிவருகிறது' என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் கல்யானந்த கொடகே கூறுகிறார். சிறிலங்காவின் நெடுநாள் கூட்டு நாடாகிய இந்தியா சிறிலங்காவில் முன்னெடுக்கும் செயற்பாடுகளைச் சமப்படுத்துவம் வகையில் சீனா செயலாற்றுவதாலேயே சிறிலங்கா தனக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவினை மேம்படுத்த முனைகிறது என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா குறிப்பிடுகிறார். 'இந்தியாவினைப் பொறுத்தவரையில் கடந்தகாலத்தில் அதனது செயற்பாடுகள் சிறிலங்காவில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக இந்தியச் செல்வாக்கினைச் சமப்படுத்துவதற்காக, இந்தியாவின் பலத்திற்கு நிகரான இன்னொரு சக்தியினைச் சிறிலங்கா கொண்டிருக்க விரும்புகிறது' என்கிறார் அவர். சிறிலங்காவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காகச் சீனா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தினைக் கொடையாக வழங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கொழும்புக்கான அளவில் பெரிய வெளிநாட்டுக் கொடையாளர் எனத் தான் கொண்டிருந்த பெயரினை டோக்கியோ இழந்திருப்பதோடு பீஜிங் அதனைத் தனதாக்கியிருக்கிறது. 'சீனாவிடம் மிகப்பெரும் கடற்படை இருக்கிறது. புதிய வல்லரசாக மாறிவரும் சீனா மேற்கு நாடுகளிலும் தனது வர்த்தகச் செயற்படுகளை விரிவுபடுத்தியுள்ளது. நாங்கள் இந்துமா சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இருப்பதனால் சீனாவினது மேற்குக்கான ஏற்றுமதிகள் அனைத்தும் எங்களது நாட்டினைக் கடந்தே செல்கிறது. இது முதன்மையானதொரு அம்சம்' என முன்னாள் இராசதந்திரி கொடகே கூறுகிறார். சிறிலங்காவினைச் சேர்ந்தவர்களின் முக்கியமான வர்த்தகப் பங்காளியாக, வல்லரசாக வளர்ந்துவரும் சீனா இருந்துவருகிறது. முத்துக்கள், தங்க ஆபரணங்கள், தேயிலை மற்றும் இயற்கை இறப்பர் போன்ற அம்சங்களே இரண்டு நாடுகளது இருதரப்பு உறவுகள் மேலும் மேம்படுவதற்கு உதவுகிறது. 'முத்து வியாபாரம் முதிர்ச்சியடையக் கூடியதொரு வர்த்தகம். அதிக பணப் புழக்கமுள்ள செழிப்பான வர்த்தகம் இது. புதிய பல வாய்ப்புக்கள் வந்து சேருவதற்கு இது வழிவகுக்கும்' என கொழும்பிலுள்ள முன்னணி முத்து வியாபாரியான செசாட் கரீம் கூறுகிறார். சீனாவினது மனித உரிமை நிலைமைகள் தொடர்வில் அதன் மேற்குப் பங்குதாரர்கள் வேறுபட்ட கருத்தினைக் கொண்டிருக்கின்ற போதும், அது சீனாவின் உள்ளகப் பிணக்கு என சிறிலங்கா கருதுகிறது. 'சீனாவில் நிலவும் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக நாங்கள் கருத்திலெடுக்கப் போவதில்லை, அதனை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்' என்கிறார் கொடகே. 'எங்களது பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நலன்களுக்கு அனுகூலமாக அமையக்கூடிய இருதரப்பு உறவினை மேம்படுத்துவதற்கே நாம் விரும்புகிறோம். ஆதலினால் சீனாவுடனான எங்களது உறவுநிலை தொடர்பில் மகிழ்வடைகிறோம்' என்றார் அவர். இந்தப் புறநிலையில் பௌத்த நாடுகளான சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான 'பெறுமதிமிக்க' இந்த உறவினை குழப்புவதற்கோ அல்லது இழப்பதற்கோ சிறிலங்கா தயாராக இல்லை. அண்டையில் சிறிலங்காவினது இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் இந்தியாவில் தலாய்லாமைவினைச் சந்திப்பதற்கு முனைந்தபோது சிறிலங்கா அதனைத் தடுத்து நிறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக