ஞாயிறு, 16 மே, 2010

ஆரியமும் காந்தியமும் ஆளுக்கொரு கையை பின்னால் நின்று பிடித்துக் கொள்ள சீனத்தின் சதிக்கண்கள் சீரிளைமையில் குறிவைக்க சிங்களத்தின் கத்தி பல குத்திக் குத்திக் கிழிக்கின்றது அவளை திராவிடத்தின் உச்சிப் பொழுது உமிழ்கின்ற ஒளியில். காப்பியமாம் மணிமுடியும் கலைந்து சரியச் சரிய காலணிந்த சிலம்போடு சங்கிலிகள் தளையத் தளைய வளையாத வளையின்று நெரிய நெரிய நெற்றிச் சூடுமணி எற்றி அலைய அலைய சிந்தாமணிகள் சிதறச் சிதற சிந்துகின்ற குடர்க்கீழே மேகலையோ மறைய மறைய ஓலமிட்டுக் கதறுகிறாள் ஓடிவரக் கூவுகிறாள் நாதியில்லை நானிலத்தில் பாரெங்கும் விண்ணெங்கும் பார்த்து நிற்கும் ஊரெங்கும் பார்த்துப் பார்த்து அலறுகிறாள் பேதையவள் தேம்பித் தேம்பி அழுகின்றாள் சுற்றிச் சுற்றிச் சுழல்கின்றாள் சுட்டுவிழி கொட்டக் கொட்டப் பெற்றுவிட்ட பிள்ளைகளை உற்று உற்றுப் பார்க்கின்றாள். ஓட்டைத் துலாவோடு ஊத்தை பேசும் பிள்ளைகள் சாட்டையொன்றும் தருகின்ற தறிதலைப் பிள்ளைகள் எந்தச் சாதிக்காரியோ ஏனிங்கு எனுங்கூட்டம் எந்தன் மதம் இவளோவென்று எட்டிப் பார்க்க வருங்கூட்டம் வெந்ததெல்லாம் தின்றலையும் வேடிக்கைப் பெருங்கூட்டம் சிந்தையிலே மந்தி வளர் செந்தமிழர் இவரிங்கு சந்தமொடு பேசிப் பேசி சாகசங்கள் செய்கின்றார் பந்தமென படுபாவி இன்னுமவள் நினைக்கின்றாள்! சொந்தப்பிள்ளை மந்தங்கண்டு அவளை மேலும் சிந்தச் சிந்தக் குத்துதடி சிங்களமும் கத்தி தீட்டித் தீட்டிக் கொடுக்குதடி காந்தியமும் நித்தஞ் செத்துச் செத்துக் குறைகின்றாள் - மைந்தர்மேல் பித்தம் மிகை வைத்துவிட்டப் பாவிமகள்; பித்தர்களைப் பெற்றுவிட்டப் பெண்பாவி; எத்தர்களை வார்த்ததனால் ஏங்கி ஏங்கி நித்தமிவள் சாகின்றாள் பெயர் தமிழன்னை! மொத்தமாகச் சாநாளும் ஆமாவோ? அம்மவோ கருப்பு நாள் இல்லையடி சொல்வார்போல் - அந்த இருண்ட காலமே மீண்டதடி! அண்டத்து இருட்டையெல்லாம் திரட்டி வந்து சூழ்ந்ததடி! இருள் சூழ்ந்ததடி! பேரிருள் சூழ்ந்ததடி! கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட என் குலத்திற்குக் கண்ணீர் அஞ்சலிகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக