ஞாயிறு, 16 மே, 2010

சிங்கள மக்களுக்கோர் அன்பான வேண்டுகோள்....!


தமிழ் மக்கள் தங்கள் சொந்த பந்தங்களை இழந்து, சொத்து சுகங்களை இழந்து அகதிகள் முகாம்களிலும் வதை முகாம்களிலும் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல. தமிழ் மக்களின் துன்பத்தை, துயரத்தை போக்க குறிப்பிட்டு சொல்லக்கூடிய எந்த ஒரு முயற்சியும் இலங்கை ஆட்சியாளர்களால் இதுவரை எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் இளம் யுவதிகளையும் இளைஞர்களையும் கடத்துதல், கற்பழித்தல் தடுத்து வைத்தல் படுகொலை செய்தல் போன்ற மனித குலம் ஜீரணிக்க முடியாத கொடுமைகளை மென்மேலும் ராஜபக்ஷே குடும்பத்தினர் தலைமயிலான இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. எம்மைப் போன்றே தமிழ் மக்களும்  இறைமை மிக்க தேசிய இனம். அவர்கள்  விரும்புவது சுய உரிமையுடன் கூடிய  வன்முறையற்ற அமைதியான வாழ்க்கை முறைமையே என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன்.

விடுதலைப் புலிகள்  உட்பட தமிழர்கள்  சிங்கள மக்களை என்றுமே எதிரியாக பார்த்ததில்லை. அப்படியிருக்க  இவ்வளவு அழிவையும் சந்தித்த தமிழ் மக்கள் மீது ராஜபக்ஷே அரசாங்கத்திற்கு ஏன் இந்த வன்மம். ராஜபக்ஷே குடும்பத்தினரின் இந்த அவல ஆட்சியானது உலகம் முழுவதிலும் எதிர்ப்பையும் கண்டனங்களையுமே சம்பாதித்து வருகிறது. தமிழ்நாட்டில் மு. கருணாநிதியைப் போன்று, இந்தியாவில் காந்தி குடும்பத்தைப் போன்று ராஜபக்ஷே குடும்பமே இத்தீவினை ஆட்சி செய்ய விரும்பி அதற்க்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளார்.   ராஜபக்ஷே அரசின் பிற்போக்கு சிந்தனையும் தமிழர்கள் மீதான வெறியாட்டமும், செழிப்பும் அழகும் வாய்ந்த இச்சிறு இலங்கை  தீவினை  மீண்டும் இருளுக்குள் தள்ளி மீள முடியாது, ஏகாதிபத்திய  வல்லரசு நாடுகளிடம் எம் எல்லோரையும் அடிமைகளாக வாழ வைக்கவே வழி செய்யும். தங்கள் சுயலாபத்திற்காக  நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கவும் அடிமைப்படுத்தவுமே இவ்வலரசு நாடுகள் ராஜபக்ஷே அரசகங்கத்தின் கொடூர ஆட்ச்சிக்கு முண்டு கொடுத்து நிற்கின்றன. காய்களை நகர்த்த தருணம் பார்த்து நிற்கின்றன. அப்பொழுது தமிழர்கள் மட்டுமல்ல இச்சிறு தீவின் அனைத்து மக்களுமே தங்களின் சுய நிர்ணயத்தை இழந்து அடிமைப் படுத்தப் படுவர். இதை வரலாறு எமக்கு காட்டி நிற்கிறது. 

நாம் செய்ய வேண்டியது...

சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் எம் நாட்டைக் காக்க நாம் செய்ய வேண்டியது; அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை ஏற்ப்படுத்திக் கொடுப்பது. அநியாயமாக பலிஎடுக்கப் பட்ட, வேட்டையாடப்பட்ட சூறையாடப்பட்ட   தமிழ் உயிர்களுக்கு அதன் உறவுகளுக்கு  சட்டத்தின் முன் நீதியைப் பெற்றுக் கொடுப்பது. வீட்டின் ஒரு மூலையில் பிணமும்  ஒப்பாரியும் மறு மூலையில் கொண்டாட்டங்களும் எக்காலத்திலும் ஏட்புடையதன்று. அதற்க்கு சிங்கள மக்களாகிய நாம் முதலில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக,  போர்க்குற்றங்களுக்கு எதிராக  ஒன்றினைவோம். ராஜபக்ஷே அரசாங்கத்தின் வெறியாட்டத்திட்கெதிராக தமிழ் மக்களுடன் கை கோர்த்து போர்க்குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அவர்களுக்கு உறுதுணையாக குரல் கொடுப்போம். மக்களின் ஆணையை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர்களை ஆட்சி பீடத்திலிருந்து இறக்கி நாட்டை சுபீட்சம் பெற வைப்போம். இதுவே இச்சிறு தீவின் அமைதியான வாழ்விற்கும் நம் சந்ததியினர்க்கும் நாம் செய்யும் முழு முதற் கடமையாகும். இச்சந்தர்ப்பத்தை நாம் தவற விடுவோமாயின், தமிழர்களின் உரிமைகளை மறுப்போமாயின் நம் அனைவரது வாழ்க்கையில் அமைதியுடன் கூடிய வளர்ச்சி என்பது இல்லாது போகும் என்பது திண்ணம். 

-துஷார பெரேரா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக