ஞாயிறு, 16 மே, 2010

தேசிய தலைவரின் ஆளுமை


நம்பிக்கையோடு நமது பயணம் அடுத்த இலக்கை நோக்கி நகர தொடங்கி இருக்கிறது. ஒவ்வொரு நடைமுறையின் நிலையிலும் தேவைகளை முன்னிருத்தியே இயக்கங்கள் அல்லது போராட்டங்கள் நிகழ்வதாக நாம் அறிந்திருக்கிறோம். இதை பலமுறை நாம் வலியுறுத்தி இருக்கிறோம். எந்த ஒரு போராட்டமானாலும் அந்த போராட்டம் தமது தேவையை அடையும்வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
 இது மாந்த குல வாழ்வில் நாம் கண்கூடாக காணும் செயல்களாகும். அறிவியல் படைப்புலகின் பல்வேறு அற்புதங்களை கண்டுபிடித்த பின்னரும், அடுத்து என்ன என்கின்ற சிந்தனை இயல்பாக அறிவியலாளருக்கு ஏற்படுகிறது. அதன் காரணமாக ஒரு காலத்தில் நாம் நிலவை நிலத்திற்கு தொடர்பில்லாத ஒரு கோளாக இல்லையென்றால் அதை ஏதோ ஒரு மாற்றுபொருளாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆகையால் நிலவு, அதன் தன்மைக்கேற்றவாறு சீதளத் தன்மை பொருந்தியதாக இருக்கின்ற காரணத்தினால் இலக்கியங்கள், கவிதைகளில் நிலவு ஒரு நடுத்தன்மை வாய்ந்த பாடுபொருளாக இருந்தது. ஆனால் இன்று நிலவு, அதன் தன்மை, அதன் உள்ளடக்கம் ஆகியவை நீல்ஆம்ஸ்ட்ராங் தொடங்கி பல்வேறு விண்வெளி ஆய்வாளர்கள் அதன்மீது பாதம் பதித்து அதன் பல்வேறு கூறுகளை ஆய்வு செய்த பின்னரும், அதைப்பற்றிய ஒரு தேடல் இதுவரை இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. செய்மதி கோள்கள் தொடர்ந்து இக்கோள்களை ஆய்வு செய்துக் கொண்டிருக்கின்றன. இப்படி இருந்தபோதும்கூட, இன்றுவரை கவிஞர்கள் நிலவை ஒரு பாடுபொருளாகத்தான் வைத்திருக்கிறார்களே தவிர, அது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோள் என்று எவரும் கருதுவது கிடையாது. நிலவு சிலருக்கு இட்லி போல் காட்சி தருகிறது. வேறு சிலருக்கு அது தேன் போல் குளிர் தருகிறது. மற்ற சிலருக்கோ தன் காதலி போல் முகம் தெரிகிறது. ஆக, அந்த ஒரே கோளை சுற்றி பல்வேறு கருத்தியல்கள் தோன்றுவதைப் போல்தான் இன்று ஒரு போராட்டத்தைக் குறித்த கருத்தியல்கள் பல்வேறு காரணிகளை கொண்டதாக இருக்கிறது. நிலவில்தான் இறங்கி அதை ஆய்வு செய்ய தொடங்கிவிட்டோமே, அதோடு அது முடிவு பெற்றது என்று யாரும் அமைதிகாத்துவிட வில்லை. எமது இனிய உறவுகளே! முள்ளிவாய்க்காலில் நமது பகைவன் கால்வைத்த காரணத்தினால் அதை குறித்த ஆய்வோ அல்லது அதன் அடுத்தக்கட்ட இயக்கமோ நின்றுபோவதில்லை, நிற்காது, நிற்க முடியாது. இதுதான் இயக்கவியல். காரணம், இது ஒரு சிறு இடத்தில் முடக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் செயல்பாடல்ல. இந்த புவிப்பந்தில் வாழும் 10 கோடி தமிழர்களின் உயிராதார பிரச்சனை. அது அவர்களின் உயிர் வலியாய் இருக்கிறது. ஆகவே, அதை தவிர்த்து வேறொன்றை சிந்திப்பதற்கோ, அல்லது அதை தவிர்த்து இந்த விடுதலையை ஆய்வதற்கோ தமிழ் மாந்த குலம் தயாராக இல்லை என்பதன் அடையாளமாகத்தான் கடந்த ஓராண்டிற்குப்பிறகும் கூட இரத்த சகதிக்குள்ளான மாந்த சதைகள் பிய்த்தெறியப்பட்டு, போர்த்தப்பட்ட பிணங்களால் இறைந்து கிடந்த அந்த மண்ணை நாம் உணர்வோடு திரும்பி பார்க்கிறோம். அந்த மண்ணிலே சாகடிக்கப்பட்டு, சவ குழிக்குள் நிரப்பப்பட்ட தமிழர்களின் சடலங்கள், தமிழர்களின் வரலாற்றை மீண்டும் ஒருமுறை எழுதுவதற்கு துணை புரிந்ததே ஒழிய, அவர்களின் பிணங்கள் நம்மை எந்த நேரத்திலும் துவண்டுபோக வைக்கவில்லை. இதுதான் இந்த போராட்டத்தில் நாம் கண்டெடுத்த அற்புதம். இதுதான் கடந்த கால விடுதலை உணர்ச்சிகளில் நாம் கடைந்தெடுத்த தத்துவம். ஆகவே, போராட்ட காலத்தில் நாம் இழந்த இழப்புகள், அடைந்த வலிகள் நம்மை அசைத்துப் பார்க்கவில்லை என்பதை இன்று உலகெங்கும் வாழும் மற்ற இன மக்கள் புரிந்து கொள்வதற்கு அந்த முள்ளிவாய்க்காலே துணைபுரிந்தது என்பதை நினைக்கும்போது இறுதி நிமிடம் வரை போர்புரிந்து தம்மை இழந்த முள்ளிவாய்க்காலில் தம்மை முடக்கிக் கொண்ட அந்த போர்குணம் மிக்க தமிழ் மறவர்களுக்கு நாம் நன்றியோடு வீர வணக்கம் செய்கிறோம். இந்த பிரச்சனையை பொருத்தமட்டில் நம்முடைய பார்வை, அணுகுமுறை, நடவடிக்கைகள் என ஒவ்வொன்றும் ஒரு முற்றுப்புள்ளியிலிருந்து அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதாகத்தான் இருக்கிறது. தாம் சொல்ல விரும்புவது முள்ளிவாய்க்கால் என்பது போராட்டத்தில் ஒரு அரைப்புள்ளி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எப்பொழுது ஒரு வாக்கியத்தில் அரைப்புள்ளி பதிவு செய்யப்படுகிறதோ, அப்போதே அந்த வாக்கியம் தொடரப்போகிறது என்ற பொருள் புரிந்து போகிறது. ஆகவே, நாம் முள்ளிவாய்க்கால் நிகழ்வை நமது போராட்டத்தின் அரைப்புள்ளியாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, இதுஏதோ உலக வரலாற்றில் யாருக்கும் நிகழாத ஒரு அவநிலை ஏற்பட்டுவிட்டது என்று கருதுவதற்கில்லை. காரணம், நாம் எப்பொழுது நமக்கான உரிமைகளை மீட்டெடுக்க களத்திற்கு வந்தோமோ, அப்போதே நாம் அநீதிகளை சுமக்கத் தொடங்கிவிட்டோம். அக்கிரம சிலுவையில் நாம் அறையப்பட்டுவிட்டோம். ஆனால் நம்மை அறைந்து, இறந்துவிடுவோம் என்று கருதிக் கொண்டிருந்த சிங்கள பாசிச வெறியர்களுக்கு நமது தேசிய தலைவர் பெயராலே மீண்டும் உயிர்த்தெழுதல் கிடைத்தது. கிறித்துவர்களுக்கு ஈஸ்டரைப் போல, தமிழர்களுக்கு ஒரு ஈஸ்டர் தேசிய தலைவரால் கொடுக்கப்பட்டது. ஆகவே, கிறித்துவர்கள் உலகெங்கும் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படை நம்பிக்கை ஒன்றுதான். அது, கிறித்து உயிர்த்தெழுந்துவிட்டார். இனிமேல் அவர் இறக்க மாட்டார். இப்பொழுது அவர் உயிரோடு இருக்கிறார். நம்மோடு வாழ்கிறார் என்பதுதான். தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும்கூட, தேசிய தலைவரின் தலைமை எப்பொழுது இணைந்ததோ, அப்போதே சாவிலிருந்து விடுதலை உயிர்பெற்று விட்டது. அது இனிமேல் எந்த காலக்கட்டத்திலும் சாகாது. காரணம், அது மரணித்து உயிர்த்தெழுந்த ஒரு மகத்துவம் மிக்க போர் வடிவம். அது, இந்த மாந்த குலத்திற்கே வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்ததாக, அளவிட முடியாத ஈகம் நிறைந்ததாக, துள்ளி எழும் வீரம் கொண்டதாக, அணைத்து நேசிக்கும் அறம் கொண்டதாக, அன்பொழுகும் நிலை கொண்டதாக, இயற்கையை நேசிக்கும் இனம் கொண்டதாக, மொழியை காக்கும் குணம் கொண்டதாக இந்த போராட்ட வடிவம் இருக்கின்ற காரணத்தினால் இது ஒருக்காலமும் வீழ்ச்சி அடையாது. வீழ்ச்சி என்பது ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது. அது நமது வாழ்வில் நிகழ்ந்துவிட்டது. இனிமேல் நமக்கு வீழ்ச்சி இல்லை என்பதை நாம் உறுதியாக நம்புவதற்குத்தான் முள்ளிவாய்க்கால் நமக்கு உறுதுணைபுரிந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்தபோது, லட்சக்கணக்கான மாந்த உயிர்கள் கொன்றொழிக்கப்பட்டது. அய்யோ போர் என்று மாந்தத்தை நேசிப்பவர்கள் எல்லாம் அலறித் துடித்தார்கள். அதைப்போன்றே பல்வேறு நாடுகளில் தேசிய இனங்களின் மீது தொடுக்கப்படும் கடும் சமர்கள், மாந்தத்திதன் மாண்பை கேள்விக் குறியாக்கி இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி, அது தமது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறதென்றால், விடுதலை என்கின்ற அந்த ஒற்றை வார்த்தை, மாந்த வாழ்விலே நீடித்து நிலைக்கொண்டதாக அது தமது வாழ்வை விடுதலை என்கின்ற உணர்வோடு ஒட்டி வாழ்வதாக இருக்கின்றது. ஆகையால்தான் இன்றுவரை விடுதலை என்கின்ற இந்த ஒற்றை வார்த்தைக்காக உலகெங்கும் சமர்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதை ஆதிக்கவாதிகள் தங்களிடம் உள்ள கடும் கருவிகளைக் கொண்டு ஒடுக்க நினைத்து, பின்னர் தோற்று ஓடிப்போய் இருக்கிறார்களே தவிர, ஒருகாலமும் ஒடுக்குமுறையாளர்கள் வெற்றி பெற்றதில்லை, வெற்றிப் பெற போவதும்இல்லை என்பதை நாம் இந்நேரத்திலே நினைத்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். இத்தனை கொடுஞ்செயல் நிகழ்த்தப்பட்ட பின்னரும்கூட, நாம் இந்த நீதிமிக்க சமரை நினைத்துப் பார்க்கிறோம். அதில் உள்ள நியாயத்தின் வடிவத்தை உலகுக்கு அறிவிக்க முனைப்புக் காட்டுகிறோம் என்றால் இது எவ்வளவு ஆற்றல் வாய்ந்த சமராக இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை நாம் உறுதிபடுத்துகிறோம். ஆகவே முள்ளிவாய்க்கால் நமக்கு உறுதி அளித்த மண். அந்த மண்ணை நோக்கி உலக மாந்தர் ஒன்று திரண்டு நின்று வீரவணக்கம் செய்வோம். அந்த முள்ளிவாய்க்காலின் மண்ணை எடுத்து, நெற்றியிலே திலகமிட்டு விடுதலை பயணத்தை மீண்டும் தொடர்வோம். அறநெறி மாறாத ஆற்றலாளன் மேதகு தேசிய தலைவர் அவர்கள் நம்மோடு இருக்கும்வரை, நமக்கான விடுதலை இந்த உலகத்தில் எந்த ஆற்றலாலும் மறுத்துரைக்க முடியாது. நமது தேசிய தலைவரின் பங்களிப்பு நம்மோடு இருக்கும்வரை தமிழீழம் என்கின்ற தமிழர் நாடு அமையாமல் போகாது. தமிழீழம் என்பது ஏதோ ஒரு உணர்ச்சி மயமான போராட்டம் அல்ல. தமிழீழம் அடைய களம் காணுவது ஏதோ ஒரு எழுச்சியை உண்டாக்கி, அதை அணைத்துப்போட அல்ல. தமிழீழம் என்பது நமது இனத்தின் அடையாளம். தமிழீழம் என்பது தமிழர் வாழ்வின் உயிராதாரம். தமிழ் என்று கூறி, தமிழரின் வாழ்வுக்காக நன்மையைவிட, தீமைகளையே செய்து பெருங்கொடுமை புரிந்து தமிழர்களுக்கான ஒரு நிலம் வேண்டும் என்கின்ற ஒருதுளி உணர்வற்று, தமிழர் நிலத்தையெல்லாம் தம் சொந்த நிலமாக்கிக் கொள்ள நினைத்த இந்த கொள்ளையர்களுக்கு இந்த போராட்டம் எரிச்சல் தரலாம். ஆனால் தமிழர்களுக்கான வாழ்வு வேண்டும், தமிழர் வாழ வேண்டும், அந்த தமிழருக்கான அடையாளமான தமிழ்மொழி ஆள வேண்டும், அந்த தமிழ் மொழி ஆள வேண்டும் என்றால், அது அசைவாட ஒரு நிலம் வேண்டும் என்கின்ற ஒரு தொலைநோக்கு சிந்தனையாக தம்மகத்தே கொண்டே தேசிய தலைவர் முனைந்தெடுத்த இந்த போராட்டம் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் முடியப்போவது கிடையாது. இது தேசிய தலைவரின் தலைமையில் துவக்கி, அவர் தலைமையிலேயே நிறைவடையப்போகிறது. தேசிய தலைவரின் ஆளுமையும் பிறந்து அவர் தம் ஆளுகையில் மகிழ்வுறப் போகிறது. இதை தடுப்பதற்காக துரோகிகள் கூட்டம் முணைப்புக் காட்டலாம். அதை முறியடிக்க கோடிக்கணக்கான தமிழர்களின் கரங்கள் இணைந்து உயர்ந்திருக்கிறது. அப்படி இணைவதற்கு இந்த முள்ளிவாய்க்கால் பெரும் துணை புரிந்தது. ஒரு இழப்பிலிருந்துதான் வேறொரு பாடத்தை கற்றுக் கொள்ள முடியும் என்பதை முள்ளிவாய்க்கால் நமக்கு சொல்லித் தந்திருக்கிறது. ஆகவே தேசிய தலைவரின் தலைமைக்கு யாரெல்லாம் துரோகம் செய்கிறார்களோ, அவர்களை புறந்தள்ளுங்கள். தேசிய தலைவரின் தலைமையை, அவரின் கட்டளையை நிறைவேற்றுங்கள். தமிழீழத்தில் கரம் கோர்ப்போம். தரணியெங்கும் நிமிர்ந்து நிற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக