திங்கள், 28 ஜூன், 2010

மகிந்த இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி!

சிறிலங்கா தொடர்பில் இந்தியாவும் எமது அயல்நாடுகளுமே எனக்கு முக்கியம். ஏனைய நாடுகள் பற்றி எனக்க கவலை இல்லை. நாட்டில் தற்போதுதான் போர் முடிவடைந்திருக்கிறது. படிப்படியாகத்தான் சகலதையும் செய்யலாம். தீர்வுத்திட்டம் என்பது.....
நூடில்ஸ் அல்ல. உடனடியாக தயாரித்து வழங்குவதற்கு. அரசமைப்பு திருத்தங்கள், அவற்றின் ஊடாக அணுகுமுறைகள் என்று பல விடயங்கள் அவற்றில் உள்ளன.


இவ்வாறு சிறிலங்கா அரச அதிபர் மகிந்த இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் அந்த செவ்வியில் கூறியுள்ள ஏனைய விடயங்கள் வருமாறு:


பிரபாகரனை தோற்கடிக்கும் வரை அவரை படு பயங்கரமான ஒரு தலைவர் என்று வெளிநாடுகளும் ஐ.நா.வும் வர்ணித்தன. தற்போது அவரை தோற்கடித்தவுடன், வேறு விதமாக இந்த நாடுகள் பேச ஆரம்பித்துள்ளன. இப்படித்தான், பின்லேடனை பற்றியும் எதிர்காலத்தில் அவரை தோற்கடித்த பின்னர் பேசுவார்களோ தெரியவில்லை.


சிறிலங்காவில் இப்போதுதான் போர் முடிவடைந்திருக்கிறது. தீர்வு, அபிவிருத்தி போன்ற விடயங்களை படிப்படியாகத்தான் மேற்கொள்ளமுடியும். நாட்டின் அரசமைப்பில் மாற்றம்கொண்டு வந்த பின்னரே அதிகாரப்பகிர்வு என்பது சாத்தியம். அதனை நோக்கி நகர்வதற்கு பல படிமுறைகளை தாண்டி செல்லவேண்டியுள்ளது. நாட்டின் அரசமைப்பு புத்தகம் என்பது வாரம் ஒரு முறை அல்லது மாதாந்தம் வெளியிடும் சஞ்சிகை அல்ல. எல்லாவற்றுக்குமே நேரம், காலம் தேவைப்படுகிறது.


எம்மிடம் எல்லாவற்றுக்கும் திட்டங்கள் உள்ளன. அபிவிருத்தி, தடுப்புக்காவலில் உள்ளவர்கள், நாட்டின் பொருளாதாரம், அதிகாரப்பகிர்வு, நாடாளுமன்ற பெரும்பான்மை என எத்தனையோ விடயங்களை நோக்கி நாம் நகர்ந்து வருகிறோம்.


இந்த நாட்டில் சகல இன மக்களும் கலந்து வாழும் நிலை உருவாகவேண்டும் என்பதே எனது விருப்பம். முப்பது ஆண்டுகளுக்கு முன், கொழும்பில் சிங்களவர்களே பெரும்பான்மை மக்கள். ஆனால், இன்று கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினர். 27 வீதமானவர்களே வாழுகிறார்கள். தமிழர்களும் முஸ்லிம்களுமே அதிகம். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.


மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும். தென்னிலங்கை மக்கள் தங்கத்தை பயனாக பெறுகிறார்கள் என்றால், வடக்கு மக்களுக்கு இரும்பை கொடுக்கமுடியாது. அவர்களும் தங்கத்தை பெற்றுக்கொள்ளவேண்டும். அந்த சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு உழைப்போம். என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக