திங்கள், 28 ஜூன், 2010

சிறிலங்காவில் சிறு சிறு வன்முறைகளே இடம்பெற்றுள்ளனவாம்!

30 வருடங்கள் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தில் ஓரிரு சிறு சம்பவங்களே இடம்பெற்றன. அவற்றைப் பெரிதுபடுத்தவேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15 ஆவது வருட ஒன்றுகூடலின்போது பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.



அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு, இன்று பல உலக நாடுகளில் அநியாயமாக பலர் தினமும் கொல்லப்படுகின்றனர். அந்த அழிவுகளைத் தடுக்க உலக நாடுகள் முன்வரவேண்டும். அதனைவிட்டுவிட்டு பூரண அமைதி நிலவும் நாட்டில் யுத்தத்தின்போது ஏற்பட்ட விளைவுகளை மீள் பரிசீலனை செய்வதில் பயனில்லை.


கொடூர யுத்தத்தை வெற்றிகொண்ட ஒரே நாடு இலங்கை என்றவகையில் சில நாடுகள் எம்மீது பொறாமை கொண்டுள்ளனவா என்ற ஐயம் நிலவுகிறது. ஊடகங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுதல் வேண்டும். நாம் அதனை ஏற்று தவறுகளைத் திருத்திக்கொள்ளவேண்டும்.


ஆனால் தேவையற்ற விடயங்களை திரும்பத் திரும்ப எழுதி அதனை பிரசாரமாக்கக் கூடாது. சமூக விரோதச்செயல்களை அடிக்கடி எழுதி சமூகத்தை வழி கெடுக்க காரணமாக மாறக்கூடாது. இன்று பல உலக நாடுகள் ஊடக சட்ட விதிகளைப் பின்பற்றுகின்றன.


இதுபோல் இலங்கையிலும் ஊடகவிதிகளை நாம் அனுசரித்து நடக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் மீது பல்வேறு அழுத்தங்களும் மிரட்டல்களும் இடம்பெறுகிறன என்று கூறப்படுகிறது. இதில் உண்மையில்லை இதில் ஓரிரு ஊடகவியலாளர்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக