திங்கள், 28 ஜூன், 2010

செய்தித் துளிகள்

வடக்கின் புனர்வாழ்வுத் திட்டங்களுக்கு நிதி திரட்டும் நடவடிக்கையில் கே.பி.!
 


வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வுத் திட்டங்களுக்காகத் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. குமரன் பத்மநாதனினால் நிதி திரட்டும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று நேற்று முன்தினம் மலேசியாவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையி லான மலேசிய வாழ் இலங்கைப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இலங்கை நேரப்படி 4.30 மணியளவில் இந்த நிதி திரட்டும் கலாசார நிகழ்வு நடைபெற் றதாக மலேசியாவுக்கான இலங்கைத் தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சர்வதேச புலம்பெயர் தமிழர்கள் பிளவடைந்திருப்பதாகவும், ஒரு பகுதியினர் குமரன் பத்மநாதனுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருவதாகவும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகின்றது. குமரன் பத்மநாதனுக்கு விசுவாசமாகச் செயற்பட்டு வரும் புலம் பெயர் தமிழர்கள் இலங்கை அர சாங்கத்துடன் இணைந்து வடக்குக் கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர் எனவும் அரசாங்க ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.


மீள்குடியேற்றம், புனரமைப்பு, புலி உறுப்பினர்களுக்கான புனர் வாழ்வு, காயமடைந்த படை வீரர் நலத்திட்டம் போன்றவற்றுக்காக திரட்டப்படும் நிதி பயன்படுத்தப்படவுள்ளது. இவ்வாறான நிதி திரட்டும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்ட பெரும்பான்மையான வர்த்த அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கையின் அரச சார்பு ஊடகங்கள் கூறுகின்றன.


மலேசியாவின் மக்ஸீஸ் கம் யூனிகேசன் நிறுவனத்தின் உரிமையாளர் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக 35 மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளதாக அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட குமரன் பத்மநாதனை வடக்குப் புனர்வாழ்வுத் திட்டங்களில் பங்குபடுத்தி வருகின்றமை தொடர்பில் சில அரசி யல் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.


தமிழர் விடுதலைக் கூட்டணி யின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமது எதிர்ப்பைப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். குமரன் பத்மநாதனுடன் மட்டும் புனர்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளை உதாசீனம் செய்து வருவதாகவும் அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.


தமிழ்க் கட்சிகளின் இணக்கப்பாடு டக்ளஸ்-சம்பந்தன் உரையாடல்
================================
தமிழ்க் கட்சிகளின் பொது இணக்கப்பாடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யும் இணைத்துக் கொள்ளும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.


தமிழ்க் கட்சிகளின் பொது இணக்கப்பாட்டில் இணைந்து கொள்வது தொடர்பில் தமது கட்சி கூடி ஆராயும் என இரா.சம்பந்தன் தெரிவித் துள்ளதாகத் தெரியவருகின்றது. இதேநேரம் கஜேந்திரகுமார் பொன்னம் பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யையும் இணைத்துக் கொள்வதற் கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக