திங்கள், 28 ஜூன், 2010

ஜி.எஸ்.பி. வரி சலுகை ஆகஸ்ட் மாதம் முற்றாக நிறுத்தம்...

ஜி.எஸ்.பி. பிளஸ்' வரிச் சலு கையை ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் நிறுத்துவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என கொழும்பிலுள்ள அதன் தூதுவர் தெரிவித்துள்ளார்.



இலங்கைக்கு மேலதிக கால நீடிப்பு வழங்கப்படமாட்டாது. இலங்கை சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த 15 நிபந்தனைகள் குறித்து இலங்கை கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த 24 ஆம் திகதி வியாழக்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை முற்றாக நிராகரிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தார்.


இதேவேளை, அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய "ஜி.எஸ்.பி. பிளஸ்' வரிச்சலுகை மூலம் இலங்கை தயாரித்த ஆடைகள் உட்பட 3,400 வகையான பொருள்கள் ஏற்றுமதி வரி இன்றி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அதனால் இலங்கைப் பொருள்களை ஐரோப்பிய நாடுகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யக்கூடியதாக இருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக