திங்கள், 28 ஜூன், 2010

உளவியல் போர்!!உளவியல் போர்!!உளவியல் போர்!!

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் போருக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த போரிலே வெடிமருந்து கிடையாது. துப்பாக்கி கிடையாது. பீரங்கி கிடையாது. இதில் யார் அதிகம் பொய் பேசி வெற்றி பெறுவது என்பதுதான். பொய்யினால் மனதை நிலைகுலைய செய்து, அடுத்தக்கட்டத்திற்கு நம்மை நகரவிடாமல் தடுக்கும் உளவியல் போர்.
சிங்கள பாசிச அரசு இப்போது இப்படிப்பட்ட மனித மாண்புக்கு எதிரான, மனதை பாழடிக்கும் ஒரு போருக்கு தம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை செய்த தவறுகளுக்கு காரணங்களைத் தேடவும், அந்த காரணங்கள் உண்மைதான் என சாட்சியம் அளிக்கவும், அவர்களுக்கு துரோகிகள் தேவைப்படுகிறார்கள். தமது இன, மான அடையாளங்களை இழப்பதற்கு இவர்களுக்கு இப்போது தேவை சொகுசான வாழ்வு.


தம்மை இழந்து இனத்தை காத்த ஆயிரக்கணக்கான மாவீரர்களின் மனதை, அவர்களின் வீர அடையாளத்தை, அவர்களுக்குள் எரிந்து கொண்டிருந்த விடுதலை தாகத்தை இந்த தரங்கெட்ட சிலரால் அணைத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள். கருணா, டக்ளஸ் என வரிசையிலே இப்போது சேர்ந்திருப்பவர் கே.பி. கே.பி.யை வைத்து தமது போர் குற்ற நடவடிக்கைகளை சரி என்று சொல்வதற்கு சிங்கள பாசிச அரசு இவரை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. 2009 ஆகஸ்ட் மாதங்களில் பல்வேறு இணையத்தளங்கள் கே.பி.யைக் குறித்து பக்கம் பக்கமாக தகவல்களை வாசித்தன. சிங்கப்பூரில் இருந்து கே.பி. கடத்தப்பட்டதாகவும், பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் வந்த தகவல்களுக்கு முன்னால், தமிழ் தேசிய அடையாளத்தை சீர்குலைக்கும் வண்ணமாக மேதகு.தேசிய தலைவர் மேல் உலகத் தமிழர்கள் வைத்துள்ள அளப்பரியா நம்பிக்கையை சிதைக்கும் வண்ணமாகவும் கே.பி.யின் அறிக்கைகள் அமைந்தன.


இப்போது வரும் செய்திகள் கே.பி.யின் மூலமே எமது விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கும், சிங்கள பாசி அரசு தாம் செய்த குற்ற செயல்களில் இருந்து தப்பிக்கவும் புதிய முயற்சிகளை கைக்கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. இந்த நிகழ்வுகள் ஒருபுறம் நிலையாக நிற்கட்டும். இப்படிப்பட்ட இக்கட்டான நிலைகளில் நாம் எப்படி நமது வலிமையை நிரூபிப்பது என்பதிலேதான் நம்முடைய போராட்டத்தின் தன்மை இருக்கப்போகிறது. திசை மாறாமல் நமது போராட்டத்தை சரியாக வழிநடத்த இப்போது நமக்குத் தேவை கருவிகள் அல்ல, கருத்துக்கள். கருத்துக்களால் செல்ல வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். மார்டின் லூதர் கிங் கூறுவதைப்போல, நாம் நெருக்கடியான நேரத்தில் எடுக்கும் முடிவுகளே சாதனைகளாகும்.


இப்போது நம்முடைய போராட்ட வடிவம் நெருக்கடியான ஒரு தளத்திலே நின்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்ட முறையை இந்த காலத்தில் நாம் எப்படி நடத்தப் போகிறோம் என்பதிலேதான் நமக்கான விடுதலை உறுதிசெய்யப்பட இருக்கிறது. முதலில் ஒட்டுமொத்த உலக உறவுகளுக்கு ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் நேர்மறை எண்ணம் வளர வேண்டும். நமக்கான விடிவு என்பது, நமக்கான முடிவு என்பது, நமக்கான வாழ்வு என்பது தமிழீழம் என்கின்ற ஒற்றைச் சொல்லிலேதான் முடங்கி இருக்கிறது என்பதை நாம் தெளிவாக உறுதியாக உணரவேண்டும்.


தமிழீழம் என்கின்ற இந்த தாரகச் சொல், நம்மிலிருந்து நம் மனங்களிலிருந்து எந்த நிலையிலும் மாறுபடக்கூடாது. தமிழீழம் எவ்வாறு நம்முடைய மனச் சிறைகளில் விடுதலைக்காக ஏங்கி இருக்கிறதோ, அதேப்போன்றே மேதகு தேசிய தலைவர் மூலம் தான் நமக்கான விடுதலை உறுதி செய்யப்படும் என்ற கூற்றும் நமக்குள் இருந்து விலகக்கூடாது. இடைவிடா நமது செயல்பாடு உலகெங்கும் தமிழீழம் என்கின்ற அடையாளத்திற்கு ஆதரவாக அணித்திரள உறுதுணைப் புரிய வேண்டும். இந்த நேரத்தில் நமது மனதை சிதைக்கும் வண்ணமாக உளவியல் தாக்கத்தை தொடங்கியிருப்பதின் செயல்பாடாகத்தான் தமிழீழத்திலிருந்து புதியப் புதிய கருத்துக்கள், சிங்கள பாசிச அடக்குமுறையாளர்களால் உருவாக்கப்பட்டு அவை காற்றிலே விதைக்கப்படுகிறது.


இந்த சிங்கள பாசிச வெறியர்கள் விதைக்கும் வார்த்தைகள், சிந்தனைகள், கருத்துக்கள், செய்திகள் நம்மை நிலைகுலைய வைக்கும் என சிங்கள இன வெறியர்கள் எதிர்பார்க்கலாம். தமிழர்களின் மன அழுத்தத்தை அவர்களின் மன உறுதியை எப்படி சிதைப்பது என்பதிலேதான் இப்போது சிங்கள அரசு உறுதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் இரும்பைவிட வலிமையான மனம் படைத்தவர்கள் என்பதை நிரூபிப்பவர்களாக, எந்த நிலையிலும் அச்சப்படாமல், எந்த துயருக்கும் கலங்காமல் நம்மை இழப்பதின் மூலமே நமக்கான வரலாற்றை எழுதி வைக்க முடியும் என்கிற அடிப்படை உறுதியை நமக்குள் உருவாக்கிக் கொண்டால் ஒழிய, இந்த பாசிச வெறியர்களின் அடக்குமுறை நிறைந்த, ஆணவம் மிக்க நமது சுயமரியாதைக்கு எதிரான செயல்பாடுகளை நம்மால் வெற்றிக் கொள்ள முடியாது. ஆகவே, களத்திலே கருவி ஏந்தி தமது இன்னுயிர் ஈந்த, அந்த கார்த்திகை பூக்களின் நமது விடுதலை ஒன்றே லட்சியமாகக் கொண்டு இன்று சிங்கள பாசிச வெறியர்களிடம் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வீரர்களின் எண்ணங்கள் வடிவமைக்கப்பட வேண்டிய பணியை உலகம் தழுவிய நமது உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.


எதை குறித்து அவர்கள் சிந்தித்தார்களோ, அதை அடைய அவர்கள் முயற்சித்தார்களோ, அதை முழுமைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு நம்மிடம் குவிந்து கிடக்கிறது. இன்றுவரை தமது சிங்கள பாசிச வெறியை விட்டுக்கொடுக்காத ராசபக்சே சகோதரர்கள், மேலும் மேலுமாய் தம்மிடம் இருக்கும் ஆற்றலை பொய் என்ற பெரும் கருவியால் வெல்ல பெரும் முயற்சி எடுக்கிறார்கள். ஆகவே, நாம் முன்னைக் காட்டிலும் இப்போது உறுதியாக செயல்பட வேண்டும். யார் இடித்துரைத்தாலும், யார் நம்மை அடக்க முனைந்தாலும், அத்தனையும்மீறி நமக்கான லட்சியம் தமிழீழம் மட்டும்தான் என்று சொல்லக்கூடிய துணிவு, தமிழீழம் நிச்சயம் பெறுவோம் என்கிற நம்பிக்கை, மேதகு தேசிய தலைவர் அவர்களின் தலைமையில் மலரப்போகும் தமிழீழத்தில் நாம் நடைபயில்வோம் என்ற மகிழ்ச்சி நிறைந்த எண்ணம் நமக்குள் மேலும் மேலுமாய் வளர வேண்டும்.


இப்படி உளவியல் ரீதியாக நம்முடைய எண்ணங்கள் வளர்ச்சி பெறும்போது, நம்முடைய எண்ணங்கள் புற சூழ்நிலைகளாக மாறும். இந்த புறச் சூழல் தன்மைகள் நம்முடைய போராட்டத்தை உந்தித் தள்ளும். அடக்க முடியாத மாபெரும் ஆற்றலை நமக்குள் நம்முடைய சிந்தனையை வளர்க்கும். எந்த நிலையிலும் நம்முடைய மனங்களில் அவநம்பிக்கை துளிர்விடக் கூடாது. எந்த நிலையிலும் நம்முடைய எண்ணங்களுக்குள் சந்தேகம் எழக்கூடாது. வெற்றி என்கின்ற ஒரே வார்த்தை, தமிழீழம் என்கிற ஒரே லட்சியம், நமது மனதில் எப்போதும் நீடித்து நிலைத்து நிற்க வேண்டும். யாராலும் நம்மை தோற்கடிக்க முடியாது என்கின்ற நம்பிக்கையை நமக்குள் நாம் மேலும் மேலுமாய் வளர்த்துக் கொள்ள வேண்டும். முடியாது என்று சொல்பவர்களை நான் வெறுக்கிறேன் என்று மாவீரன் நெப்போலியன் அடிக்கடி சொல்லுவான்.


ஆகவே, நாமும்கூட தமிழீழம் அமையாது என்று சொல்பவர்களை வெறுக்க பழக வேண்டும். தமிழீழம் என்பது ஏதோ ஒரு காலத்திற்காக ஏற்பட்ட கருத்து அல்ல. இது ஒரு கடமை. ஒரு இனத்தின் அடையாளத்தை காப்பதற்கான கடமை. ஒரு மொழியின் அடையாளத்தை வேளிபோடுவதற்கான கடமை. நமது இனத்தின் உரிமையை, தன்மானத்தை, நமது மொழியின் நாகரீகத்தை, பண்பை, மொத்தத்தில் தமிழன் என்கிற அடையாளத்தை இந்த மண்ணிலே பதிவு செய்வதற்கான கடமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே, கே.பி., கருணா, டக்ளஸ், என தொடர்ந்து பல்வேறு பெயர்களைச் சொல்லி, இவர்களே சொல்லி விட்டார்கள், இவர்களே சரணடைந்துவிட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்படலாம். நாம் இந்தப் போராட்டத்தை துவக்கியது, இவர்களைக் கொண்டல்ல. இவர்கள் நமது போராட்டத்தை நடத்திச் செல்வதற்காக இடையில் வந்தவர்கள், இடையிலேயே சென்றுவிட்டார்கள்.


ஆனால் இந்த போராட்டத்தைத் துவக்கிய மேதகு தேசிய தலைவர் ஒருவேளை தமிழீழம் என்ற நிலையிலிருந்து நாம் மாறினால், என்னை சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று தமது மெய்காப்பாளர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார். ஆக, இந்தப் போராட்டத்தை, தமிழீழம் என்கின்ற உயரிய கோட்பாட்டை, தமிழீழம் அடைவதற்கான சமர்களத்தை, மரபு சமர் கொண்ட ஒரு புதிய உத்வேகத்தை உண்டாக்கி, அதை வழிநடத்திய மாபெரும் ஆற்றலாளன் வாழும் எல்லாலன் மேதகு தேசிய தலைவர் அவர்கள் வாய்மொழியால் வரும் வார்த்தையை தவிர, வேறு எதுவும் நம்மை சலனப்படுத்தக் கூடாது. காரணம், இந்த போராட்டத்திற்காக, நமது லட்சியத்திற்காக நாம் அடைந்த, நாம் இழந்து, நாம் கொடுத்த பலிகள், பொருட்கள், நிலங்கள், வாழ்வு கொஞ்சம் நஞ்சமல்ல. ஆகவே, சரியான புரிதல், சரியான லட்சியத்தை நோக்கி, சரியான பாதையில் நாம் நடக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பணத்திற்காக சில ஊடகங்கள் நம்மையும் குழப்பி, நமது லட்சியத்தையும் குழப்பலாம்.


ஆனால் நாம் குழப்பிப் போகாமல் தெளிவாக, அழுத்தமாக, உறுதியாக நமது லட்சியத்தில் நிற்போம். நமக்கான தேவை தமிழீழம் என்கின்ற நமது நாடு. இது நாம் வேறொருவனை கொள்ளையடிப்பதல்ல. நம்மிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதை நாம் பெற்றுக்கொள்ளவே இந்த சமர்களத்தில் நிற்கிறோம். எந்தஒரு அடக்குமுறையாளனும் தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை. எந்தஒரு ஆட்சியாளனும் தமது அரச பயங்கரவாதத்தை கொண்டு நீடித்து வாழ்வதில்லை. இது ராசபக்சேவுக்கும் பொருந்தும். ஆனால் போராளிகள், லட்சியவாதிகள் தொடர்ந்து இம்மண்ணிலே வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கோடி ஆண்டுகள் ஆனாலும் அவர்களின் குரல் வேறொரு மனிதனின் வாய்வழியாக நமக்கு கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.


ஆகவே அடங்க வேண்டிய நிலையில் நாம் இல்லை, அடக்கி நாம் நமது ஆளுகையை வென்றெடுக்கும் நிலையில் இருக்கிறோம். சிங்கள பாசிச அரசு நடத்தும் இந்த உளவியல் சமரை முறியடிப்போம். உயர்ந்த நமது லட்சியத்தை உயர்த்திப் பிடிப்போம். வரலாற்றில் தமிழீழம் அமைவதற்கு துணைபுரிந்தவர்களின் பட்டியலில் நமது பெயரையும் இணைப்போம். அதற்கான காலமே உங்கள் கரங்களில் இருக்கிறது. போராடுவோம். தொடர்ந்து போராடுவோம். நமது லட்சியத்தை வென்றெடுக்கும்வரை போராடுவோம். எப்போது தமிழீழ குடியரசு அமைகிறதோ, அதுவரை நமது போராட்டத்திற்கு ஓய்வில்லை. நம்முடைய தன்மானத்தை இழந்து வாழ்வதிலே ஒருபோதும் நமக்கு விருப்பமில்லை. தமிழீழ தேசிய தலைவரின் தலைமையிலே தொடர்ந்து முன்னேறுவோம். வெற்றி பெறுவோம். தமிழீழ குடியரசை விரைந்து அமைப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக