வியாழன், 24 ஜூன், 2010

போட்டியாக காலூன்றும் ஐப்பான்

இலங்கைக்கு கடந்தவாரம் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலர் வந்திருந்தனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட பிரதிநிதியான சமந்த பவார், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி லியன் பெஸ்கோ, சீன உதவிப் பிரதமர் ஸாங் டிஜியாங், ஜப்பானின் விசேட பிரதிநிதியான யசூஸி அகாஸி ஆகியோரே இவ்வாறு இலங்கை வந்தவர்களாவர்.

சர்வதேசத்தைச் சேர்ந்த பலர் இலங்கை வருகிறார்கள். செல்கிறார்கள். ஆனால், அவர்கள் எத்தனை தடவைகள் இங்கு வருகிறார்கள் என்பது குறித்து யாரும் பெரிதாகக் கூறுவதில்லை. ஆனால், அகாஸியின் இலங்கை விஜயமென்றால் அவரின் அந்த விஜயம் எத்தனையாவது தடவை என்பதனை பெரும்பாலான ஊடகங்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தவறுவதில்லை. அவர் இம்முறை இலங்கைக்கு வருவதற்கு முன்னராகவே 20 ஆவது தடவை என்று குறிப்பிட்டேவிட்டன.


இதற்கு முன்னர் பல தடவைகள் நோர்வே பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் இலங்கைக்கு வந்திருந்த போதும் அவரின் பயணத்தின் எண்ணிக்கை தொடர்பில் பெரிதாக எவரும் தெரிவிக்கவில்லை என்பதனையும் இங்கு குறிப்பிட வேண்டும்.


அகாஸி இலங்கை வரும்போதெல்லாம் இலங்கைக்கு ஏதாவதொரு பசுரிப் பொருளைக் கொண்டு வரத் தவறுவதுமில்லை. இம்முறை அவர் இலங்கைக்கு வந்தவுடன் 39 பில்லியன் யென்களை இலங்கைக்கு வழங்குவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, இந்த நிதி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் விசேடமாக , யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கான அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் கூறியிருந்தார். கடந்த புதன்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.


அத்துடன் இலங்கையின் மத்திய, தென் பகுதிகளையும் மறக்கவில்லை எனத்தெரிவித்த அவர், இந்த பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி நடவடிகைகளுக்காகவும் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழ்ப் பிரதேச அபிவிருத்திக்கு மட்டும் தான் ஜப்பான் உதவி செய்யுமா என்ற கேள்வி அரச தரப்பிலிருந்து எழக்கூடாதென்ற வகையில் இதனை அவர் தெரிவித்திருக்கலாம்.


இருப்பினும், குறிப்பிட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் அவரால் தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் பலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்றே கூறப்படுகிறது. இந்த நிதி வழங்கல்கள் ஜப்பானின் தனி இலக்கு மற்றும் நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டமைதான் அது.


இலங்கை அரசாங்கம் அண்மையில் வாகனங்கள் மீதான சுங்கவரியை ஐம்பது சதவீதத்தால் குறைத்திருந்தது. இது ஜப்பானைப் பொறுத்த வரையில் அதன் தேசிய பொருளாதார மற்றும் அந்நியச் செலாவணியை பெருமளவில் ஈட்டுவதற்கானதொரு வாய்ப்பாகவே கருதப்படுகிறது. இலங்கையில் பாவனையிலுள்ள வாகனங்களில் பெரும்பாலானவை ஜப்பானிய தயாரிப்புகளே. இவ்வாறானதொரு வரிச்சலுகை மூலம் அந்த நாட்டிலிருந்து அதிகளவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமென்பது உண்மை. இதன் நோக்கப்படுகிறது.


கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜப்பானிய தயாரிப்பான வாகன இறக்குமதியை அமெரிக்கா குறைக்கவும் நிறுத்தவும் முயற்சித்தபோது ஜப்பான் அரசு சில விடயங்களில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொண்டதால் அந்தத் திட்டத்தை அமெரிக்கா வாபஸ் பெற்றதும் தெரிந்ததே. இந்த அடிப்படையில் மறு கோணத்தில் இந்த விவகாரத்தை நாம் பார்க்கவும் முடியும். சோழியன் குடும்மி சும்மா ஆடுமா என்ன?


மேலும், குறிப்பிட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் அகாஸி தெரிவித்திருந்த சில கருத்துகளும் சர்வதேசத்தைச் சீண்டிப் பார்ப்பது போல் அமைந்திருந்தன. இலங்கை மீது சர்வதேச அமைப்புகள் அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாதென்ற ஒரு வேண்டுகோள் அவரால் விடுக்கப்பட்டிருந்தது.


அவரின் இந்த வேண்டுகோள் இலங்கை அரசினைப் பொறுத்த வரையில் இனிப்பான செய்தியாக விருந்தாலும் சர்வதேச அமைப்புகளுக்கு கசப்பாகவே அமைந்திருந்தது. அவர் இலங்கையின் குரல் தரவல்ல அதிகாரியாகச் செயற்பட்டாரென்று பலர் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு அகாஸி தெரிவித்துள்ள கூற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதிருப்திப்படுத்தியுள்ளதென்றே கூறவேண்டும்.


‘‘தமிழ் மக்களின்’ அவலங்களையோ அவர்களின் அழிவுகளையோ கண்டுகொள்ளாத ஒரு நாடாகவே நாம் ஜப்பானைக் கருதுகிறோம். வடபுலத்தில் இன்று அவலத்துக்கு உள்ளாகியுள்ள மக்கள் தொடர்பிலோ அல்லது அந்த மண்ணின் அழிவுகள் குறித்தோ அவர்கள் கவலைப்படக் கூடியவர்கள் அல்லர். அந்த மக்களுக்கு இவர்கள் நேரடியாகவே உதவிகளைச் செய்வார்களென நாம் நம்பப் போவதும் இல்லை’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.


“ஜப்பான் எப்போதுமே இலங்கை அரசின் நலன் சார்ந்ததாகவே செயற்படுகிறது. அந்த நாடு தமிழ் மக்கள் தொடர்பில் கரிசனை காட்டமாட்டாதென்றே நாம் நம்புகிறோம். எமது மக்களுக்குத் தேவையானவற்றை அவர்கள் செய்வார்களென்பதும் சந்தேகமே’ என்பதே அவரின் வாதமாகவுள்ளது.


இவ்வாறான கருத்துகள் இன்று எழுவதற்கு அகாஸியின் சிலகூற்றுக்கள் காரணமாக அமைந்துவிட்டது என்றே கூற வேண்டும். ஜப்பானின் பிரதிநிதியாக அவர் இருப்பதால் அந்த அரசாங்கத்தின் கருத்தாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. அதுவும் தனது நாட்டிலிருந்து இந்தக் கருத்தைத் தெரிவிக்காமல் இலங்கைக்கு வந்து அரசதரப்பு ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்திருப்பது பல் வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.


இந்தியாவும் சீனாவும் இன்று இலங்கை மீது காட்டிவரும் அக்கறையை ஜப்பான் அறியாமல் இல்லை. இந்த நாட்டின் வளங்கள் தொடர்பில் நீண்டகாலமாக இந்த நாடு தெரிந்து வைத்துள்ளது. இந்த நிலையில் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தப் போகும் மூன்றாவது சக்தியாக ஜப்பான் மாறுமா என்ற ஒரு சந் தேகம் இன்று எழுந்துள்ளது.


இது இவ்வாறிருக்க, அகாஸியினதும் பொஸ்கோவினதும் இலங்கை விஜயம் தொடர்பில் ஹெல உறுமய மாறுபட்ட கருத்தினைத் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான தடயங்களைத் தேடுவதற்கே இவர்கள் வந்துள்ளதாக அந்தக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் இவர்களை விரைவாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டுமென்றும் அந்தக் கட்சி அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.


இவர்களின் இலங்கை விஜயம் தொடர்பில் ஜாதிகஹெல உறுமய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் சில விடயங்களை தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போரை இலங்கையரசாங்கம் முன்னெடுத்தபோது அதனை சீர்குலைக்கும் வகையில் இவர்கள் செயல்பட்டார்கள். அமெரிக்கா உற்பட ஏனைய மேற்குலக நாடுகளும் இலங்கையரசாங்கத்துக்கு உதவிகள் செய்யாது புலிகளுக்கு உதவினர் என்றும் குற்றச்சாடடுக்களை அடுக்காக தெரிவித்தார்.


ஜப்பானின் விசேட தூதுவன் விஜயம் தொடர்பில் தற்போது இருவேறுபட்ட கருத் துகள் யூகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.


இந்த நிலையில் அவரின் இம்முறை இலங்கை விஜயம் தொடர்பில் அவர் நாடு திரும்பி அங்கிருந்து அவரால் அல்லது ஜப்பான் அரசினால் வெளியிடப்படும் அறிக்கைகளைக் கொண்டே உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும். அதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக