வியாழன், 24 ஜூன், 2010

செய்தித்துளிகள்


நுரைச்சோலை அனல் மின்நிலைய ஊழியர் மூவர் உட்பட 9 பேர் பொலிஸாரினால் கைது
-------------------------------------
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மூவர் உட்பட 9 சந்தேக நபர்கள் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனல் மின்நிலையத்திலிருந்து திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 2 மில்லியன் பெறுமதியான செப்புக் கம்பிகளை வாகனத்தில் ஏற்றிச் செல்ல முற்பட்ட வேளையிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 9 பேரும் நேற்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், இவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.


புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் குண்டு வெடிப்பு; 9 பேர் காயம்
---------------------------------------------------------------
கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கிரனைட் தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்




ஐரேப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டோம்- ஜி.எல்.பீரிஸ்
-------------------------
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவது என்பது இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பது போலாகும். எனவே நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


சற்று முன்னர் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


 இலங்கை அரசாங்கத்திடம் 15 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. .அவற்றை ஏற்றுச் செயற்பட்டாலே வரிச்சலுகை வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாம் இதற்கு இணங்கினால், எமது இறைமையை நாம் விட்டுக்கொடுக்கும் செயலாகி விடும்.


எனினும் நிபந்தனைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம் என்றார்.


இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அவசரகால சட்டத்தை நீக்குதல், அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல், மனித உரிமை மீறல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறின், சம்பந்தப்பட்டோரை சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்துதல் உள்ளிட்ட 15 முக்கிய நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தின் மீது விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


அவுஸ்திரேலியக் கடலில் மற்றுமொரு அகதிகள் கப்பல்
-------------------------------
அவுஸ்திரேலியக் கடலில் வைத்து மற்றுமொரு அகதிகள் கப்பல் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்தப் படகில் 51 பேர் இருந்ததாகச் தெரிவிக்கப்படுகிறது.


எனினும் இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றிய எந்த விபரங்களை அவுஸ்திரேலியக் கடலோரக் காவற் படையினர் தெரிவிக்கவில்லை.


இந்த அகதிகள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக