வியாழன், 17 ஜூன், 2010

செய்தித் துளிகள்


பிரபாகரனின் புகைப்படத்தை வைத்திருந்த சிங்களவர் புத்தளம் பொலிஸாரால் கைது
---------------------------------------------
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் புத்தளம் பொலிஸாரால் சிங்களவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் தொடர்புள்ளதா என்ற தீவிர விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


பிரபாகரனின் புகைப்படமொன்றை புகைப்படப்பிடிப்பு நிலையத்திலிருந்து பிரேம்செய்து எடுத்து வரும் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


புலிகள் இயக்கத்தின் தலைவர் குறித்து தனது பிள்ளைகள் உட்பட எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற காரணத்தினாலேயே அவர் அந்தப் புகைப்படத்தை எடுத்துச் சென்றதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.


மேற்படி சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்படும் மேலதிக விசாரணைகளை அடுத்து அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.


மாமியாரது இறுதி கிரியைகளில் இன்று கலந்துகொள்ள பொன்சேகாவுக்கு அனுமதி
------------------------------------------
இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு, தனது மாமியாரின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.


இந்நிலையில் இன்று மாலை ஜெனரல் சரத் பொன்சேகா அவரது மாமியாரின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வார் என்று ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.


ஜெனரல் பொன்சேகாவின் பாரியாரான அனோம பொன்சேகாவின் தாயார் இன்று காலை காலமானார். அவரது இறுதிக் கிரியைகள் இன்று மாலை பொரளையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நெதர்லாந்தில் புலி சந்தேக நபர்கள் கைது
-------------------------------------------
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக அந்த நாடு 4 தமிழர்களை கைது செய்துள்ளது.


நெதர்லாந்தின் பிரெடா, ரொட்டர்டாம், ஹீம்ஸ்கிர்க் மற்றும் ஹீர்லீன் ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக நெதர்லாந்து நாட்டு வழக்குத் தொடர்பான பேச்சாளர் தெரிவித்தார்.


விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பதற்கான நடடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்களது விசாரணை திசைதிருப்பப்பட்டிருப்பதாகவும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார். இந்நிலையில், நெதர்லாந்தில் விடுதலைப் புலி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் அந்த நாட்டு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.


வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சுதந்திரமான தமிழ் நாடொன்றை அமைக்க முயலும் மேற்படி அமைப்பு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பயங்கரவாதப் பட்டியலில் கடந்த 2006ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டிருந்தது.


மில்ரோய் – முரளிதரன் இன்று யாழ். விஜயம்
--------------------------------------------------
மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் இன்று யா ழ்ப்பாணம் பயணமாகின்றனர்.


இதன் போது அவர்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் மற்றும பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்றும் அங்கு இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஏற்கனவே இவர்கள் இருவரும் கிழக்கில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக