வியாழன், 17 ஜூன், 2010

தமிழரது கலாச்சாரத்தை அழித்து சிங்களப்பிரதேசமாகும் வடபகுதி!

இலங்கையின் வட மாகாணம் வேறுபட்ட விதத்திலான தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. இந்தத் தடவை இராணுவ ரீதியான தாக்குதல் இடம்பெறவில்லை. ஆனால், கலாசார,மத ரீதியான தாக்குதலே
இடம்பெறுகிறது.அம்மாகாணப் பகுதிகள் சிங்களமயமாதலை எதிர்கொண்டுள்ளன என்று ருக்ஷன் பெர்னாண்டோ என்பவர் ஏசியா நியூஸுக்கு கூறியுள்ளார்.


மனித உரிமைகள் பணியாளரும் சட்ட சமூக நம்பிக்கையகப் பணிப்பாளருமான இவர் அண்மையில் வட மாகாணத்தின் வன்னி மற்றும் கிளிநொச்சி பகுதிகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்ததாக ஸ்பெரோ நியூஸ் செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.


முதலாவது உதாரணமாகக் காணப்படுவது வீதி அறிவிப்புப் பலகைகளாகும். தமிழ்மொழி மூலமான அறிவிப்புப் பலகைகள் மறைந்துவிட்டன. சகலதும் இப்போது சிங்களத்தில் காணப்படுகின்றன. தமிழ் சொற்பதங்கள் மிக நீண்டவையாகவும் சிக்கலானதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், சிங்கள பெயர்களுக்கப்பால் பெயர்ப்பலகைகளில் பழைய சிங்களப் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த நிலங்கள் சிங்களவர்களுடையவை என்பதைக் காட்டும் முயற்சியாக பெயர்கள் காணப்படுகின்றன என்று தமிழ் மதகுரு ஒருவர் கூறியதாக ருக்ஷன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


உள்ளூர் வரலாற்றையும் சமூகத்தையும் மாற்றுவதற்கான முயற்சியாக இது காணப்படுகிறது. அத்துடன், இது மதம் சம்பந்தப்படுத்துவதாகத் தென்படுகிறது. உதாரணமாக கிளிநொச்சியில் பெரிய தோரணமொன்று அமைக்கப்பட்டுள்ளது. பௌத்தம் பிரகாசிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்களில் அநேகமானோர் இந்துக்கள் அல்லது கிறிஸ்தவர்களாகும்.


பௌத்த ஆலயங்கள் மீளக்கட்டப்படுகின்றன. அதேபோன்று ஏனைய மத ஸ்தலங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கடைசியாக நினைவுச்சின்னங்கள் எழுப்பப்படுகின்றன.தமிழ்ப் புலிகளை அரசாங்கமும் இராணுவமும் வெற்றிகொண்டதைப் பாராட்டும் நினைவுத்தூபிகள் நிர்மாணிக்கப்படுகின்றன. உள்ளூர்வாசிகளைப் பொறுத்தவரை இவை தங்களை மேலாதிக்கம் செலுத்தும் அடையாளமாக அவர்களால் நோக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக