வியாழன், 17 ஜூன், 2010

துரோகங்களை தோற்கடிப்போம் -கண்மணி

எதைக் கொண்டு விடுதலையை ஒடுக்க முடியும்? அலைகளை தடுக்க முடியும் காலம் வரும்போது, விடுதலையும் ஒடுக்கப்படலாம். சூரியனை மறைக்க திரைத்தேடி அலையும் ஒரு கூட்டம் இன்னும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. இயல்பாக பற்றி எரியத் தொடங்கிய லட்சியத்தீ எதிர் முழக்கத்தை உதாசீனப்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்வியல்
கட்டமைப்புகளை ஆற்றல்மிக்க தளமாக மாற்ற தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் இளைஞர் பெரும்படை எதிர்பார்ப்பு ஏதுமின்றி எதிர்களமாட குவிகிறது. யாரையும் எந்த நிலையிலும் எதிர்க்க தம்மை உறுதிப்படுத்திக் கொண்ட தமிழ் இளைஞர்களின் மனப்பக்குவம் இன்று பேராற்றல் கொண்டதாக தமிழ்நாட்டிலே வலம்வரத் தொடங்கியிருக்கிறது. தமிழ் இளைஞர்களின் துவண்டுப்போகாத குணமும், மனக்குகையில் மூண்டிருக்கும் கொள்கைத் தீயும், கொள்ளைக்காரர்களை புரட்டி எடுக்க புறப்பட்டிருக்கிறது.


பொருக்கி எடுத்து அழிக்க அல்ல, இன வரலாற்றில் துரோகம் செய்தவர்களை எல்லாம் சுட்டெரிக்கும் சினத்தீயாக இளைஞர்களின் வரலாறு திசை திரும்பி இருக்கிறது. இந்த நாட்டை, இந்த நாட்டின் வரலாற்றை, இந்த மக்களை ஒட்டுமொத்தமாய் கொள்கை ரீதியாக ஒழித்து, அவர்களின் வறுமையின் மேலே செல்வ செழிப்பான கோட்டை அமைத்துக் கொண்டு வாழும் கொடியவர்களின் கூடாரத்தை இடித்துத்தள்ள, இடி முழக்கம் என இளைஞர்படை இயங்கத் தொடங்கியிருக்கிறது. யாரடா என் பகைவன் என நாவாடிக்கொண்டு இந்த நானிலத்திற்கே சவால் விடும் போர்படையாக தமிழர்படை செழித்து வளர்ந்துக் கொண்டிருக்கிறது.


இன்னல்கள், இடர்பாடுகள், துயர்கள் எதையுமே பொருட்படுத்தாத பெரும்படையாக லட்சிய கொள்கையை தாங்கிப் பிடிக்கும் குன்றாக இன்று, தமிழ்நாட்டு இளைஞர்கள் வளரத் தொடங்கியிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் இருந்து எடுக்கப்பட்ட சினத்தீ, இன்று இளைஞர்களின் அகப்புறங்களில் ஏற்றப்பட்ட பந்தங்களாக, இன்று நாடு முழுக்க தமது உறவுகளின் தீபமாக இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழீழ தேசிய தலைவர் மிக தொலைநோக்கோடு திட்டமிட்டுச் சொன்னார், தமது நாட்டிற்கு விடுதலை கிடைக்க வேண்டும். தமது இயக்கம் சரியான பாதையில் பயணிக்க வேண்டும். நமக்கென்று ஒரு முழக்கம் வேண்டும். என்ன முழக்கம் தேர்வு செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது, இப்படிச் செய்யலாமே! என நினைத்து, `தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்' என்ற முழக்கத்தை முன் வைத்தார். இந்த முழக்கத்தின் உயிர் பொருள், இந்த தாகம் வெறும் தமிழீழத்திற்குள் முடக்கப்பட்ட ஒரு வார்த்தை அல்ல. இது ரத்தமும் சதையும் கொண்டு உயிர்வாழும் ஒரு லட்சியமாக தமிழர்களின் மனங்களிலே உறவாடிக் கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலை என்பது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் விடுதலையை ஒட்டிய ஒரு பெருஞ்செயல் என்பதை தமிழீழ தேசிய தலைவர் தொலைநோக்கோடு அறிந்திருந்தார்.


ஆகவே, தமிழ்நாட்டில் களமாடினாலும், தமிழீழ விடுதலையை நோக்கியே தமிழ்நாட்டு இளைஞர்களின் அசைவுகள் இருக்கின்றன. இது உலகத் தமிர்களை ஒருங்கிணைக்கும் உன்னத லட்சியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட அசைவுகள். உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலையை வென்றெடுக்க இசைவு பெற வேண்டும் என்பதற்காக, இந்த அசைவுகள் தொடர்கின்றன. ஆனால், துரோகங்களின் பக்கம் இன்னமும் அழுத்தமாக நமது விடுதலையை நெறித்துப்போட இயங்கிக் கொண்டுதான் வேறொருப் பக்கம் செயல்படுகின்றன. ஆனால் ஒருபோதும் தமிழீழ தேசிய விடுதலையை எந்த ஒரு ஆதிக்க ஆற்றலாலும் அசைத்துப்பார்க்க முடியாது என்பதை இந்த துரோகிகள் புரிந்து கொள்ள வேண்டும். எமது போராட்டம் அறியாமையிலிருந்து தோன்றியதல்ல. அறிவிலிருந்து புறப்பட்டது. எமது போராட்டம் பஞ்சணைமீது பாதம் பதித்து தொடர்ந்தது அல்ல. கொடும் தோட்டாக்களை மார்பிலே சுமந்து, முள்மேலே நடந்து, குருதி கொட்டி நடத்திய போராட்டங்கள்.


எந்த லட்சியமும் எளிதில் தோற்றுவிடாது. அதுவும் மாந்த விடுதலைக்கான லட்சியம் ஒருபோதும் தோற்றதாக வரலாறு சொல்லவில்லை. வரலாற்றின் பக்கங்கள் எல்லாம் லட்சியங்களுக்கு எதிரான துரோகங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும்கூட லட்சியம் தான் வென்றுக் கொண்டிருக்கிறது. இந்த லட்சியத்தை முடக்கிப்போட, லட்சியம் கொண்டவர்களை நசுக்க, கேவலம் பதவி சுகத்தைக் கொண்டவர்கள், பணத்தை கண்டவர்கள் தமது ஆதிக்க கரங்களை ஆக்டோபசாக எமது போராளிகள் மேல் விரிக்கப்பார்க்கிறார்கள். நாம் நெருப்பிலிருந்து எழுந்து வந்த கொள்கை புலிகள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும் காலத்திற்கே நாம் வந்திருக்கிறோம். நெருப்பு நம்மை சுட்டெரிக்க முடியாமல் செத்துப்போனது. துரோகம் நமது நெருப்புச் சுடர் பட்டு பொசுங்கிப் போனது. ஆனால் நாமோ தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றோம். நமக்கான நாட்டை பெறும்வரை இந்த முன்னேற்றத்தை யாராலும் முடக்க முடியாது என்பதை பதிவு செய்வதிலே நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.


நிலைமை இவ்வாறு இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்னால் விழுப்புரம் மாவட்டத்திலே இருப்புப்பாதை ஒன்று தகர்க்கப்பட்டதற்காக எமது தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் கடந்த 12ஆம் தேதி கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ் வேங்கை, சோதி, நரசிம்மன், பாபு, எழில், இளங்கோ, ஏழுமலை, லலித் குமார், செயராமன், கணேசன், சிவராமன், சக்திவேல் ஆகிய தோழர்களை கைது செய்து, கண்காணாத இடத்தில் விசாரணை என்ற பெயரிலே அடைத்து வைத்திருக்கிறார்கள். உச்சநீதிமன்ற வழிக்காட்டுதல்படி ஒருவரை கைது செய்யும்போது, கைது செய்யும் காவல் அதிகாரி, அவருடைய பெயர், பதவி போன்றவற்றை தெரிவிக்கவும், கைது செய்யப்பட்டவரின் உறவினரிடம் இவரை என்னக் காரணத்திற்காக கைது செய்கிறோம், இவரை எங்கே அழைத்துச் செல்கிறோம் என்பதைக் குறித்தெல்லாம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது அரசியல் சட்டத்தின் நெறியாக இருக்கிறது.


ஆனால், காவல்துறையை பொருத்தமட்டில் நெறி தவறி பிழை செய்வதுதான் அவர்களின் கொள்கையாக தொடர்கிறது. அவர்களைச் சொல்லியும் எந்தப் பயனும் கிடையாது. அவர்கள் எசமானின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் பணியாளர்களாகத்தான், பணயாளர்கள் என்று சொல்வதுக் கூடத் தவறு. அடிபணியும் அடிமைகளாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி கைது செய்யப்பட்ட மேற்கண்ட தோழர்கள், உயர்நீதிமன்றத்திலே ஆள்கொணர்வு மனு செய்யப்பட்டப்பின், அவசர அவசரமாக அந்த இளைஞர்களை விடுதலை செய்ததோடு மட்டுமல்லாமல், நடந்த விவரங்களை யாருக்கும் சொல்லக்கூடாது என எழுதித் தரும்படி வலியுறுத்தி இருக்கிறார்கள்.


இது காவல்துறைக்கே உரித்தான செயலாக தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. அடக்குமுறை, அநியாயங்கள், அட்டூழியங்கள், கொலை, கொள்ளை என நாள்தோறும் செய்தித்தாள்களில் வாசிக்கும்போது இந்த காவல்துறையினரை எண்ணி நாம் வெதும்பிப் போகிறோம். பாவம், இவர்கள் என்னச் செய்வார்கள்? இவர்களின் எசமானன் தமக்கு எதிரான கொள்கைக் கொண்டவர்களை அடக்குவதற்கு இவர்களைப் பயன்படுத்த பழக்கி வைத்துள்ளான். அதைத்தான் அவர்களால் செய்ய முடியும். அதனால்தான் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த லதிகாசரண் என்ற காவல்துறையின் தலைவர் மாவோயிஸ்டுகளுக்கும், நிகழ்வுக்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார். அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் ஜாபர்சேட் என்கிற உளவுத்துறை அதிகாரி, இது புலிகளின் வேலை என்று கூறுவதின்மூலம் தமது எசமானர்களை புல்லரிக்கச் செய்கிறார். கூலிக்கு மாரடிக்கும் தினமலர் கூட்டம், புலிகளின் கொடூரம் என தலைப்பிட்டு தமது இதழை கொண்டு வருகிறது.


பெரும் கொடுமைக்காரர்களாக இவர்கள் மாறுவதற்கு, இவர்களின் எசமானர்கள்தான் காரணம். இல்லையெனில் இந்தியாவிற்கு ராச மரியாதையோடு வந்துவிட்டு, தம்மை எவனும் எதுவும் செய்ய முடியாது என்ற திமிரோடு மீண்டும் அவன் நாட்டிற்கே செல்வதற்கு டக்ளசால் முடியுமா? இந்திய அரசியல் சட்டத்தின்படி தேடப்படும் ஒரு குற்றவாளி, இந்தியாவின் தலைமை அமைச்சர் ஒருவரோடு கைகுலுக்கி சிரிக்கும் அளவிற்கு இந்த நாட்டின் அரசியல்சட்டம் தரம்தாழ்ந்து போனது எப்படி? முதலில் அனுமதித்துவிட்டு, விமானநிலையத்திற்கு வந்தவுடன் இவர்களின் பெயர் கருப்புப்பட்டியலில் இருக்கிறது என்று சொல்லி, வந்த விமானத்திலேயே வயதானவர் என்று கூட பாராமல், நோயர் என்ற மாந்தநேயம் இல்லாமல் மேதகு தேசிய தலைவரின் தாயாரை திருப்பி அனுப்பிய அரசியல் சட்டத்திற்கு தெரியாதா? போபால் நச்சுவாயுவால் கொன்றொழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. அந்த வாயு கசிவால் ஏற்பட்ட பாதிப்பு இன்றுவரை தீராமல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.


இதற்கு காரணமான யூனியன் கார்பைட் நிறுவத்தின் தலைவன் ஆண்டர்சனை புறவழியாக அமெரிக்காவிற்கு தப்ப விட்டபோது, இவர்களுக்குத் தெரியாதா இந்திய அரசியல் சட்டம் குறித்து. இப்படி இருக்க, டக்ளஸை தப்ப விடுவதற்கும், ஆண்டர்சனை தப்ப விடுவதற்கும் இந்தியாவின் அரசியல் கொள்கை தலைசாய்த்து விடுகிறது. ஆனால் பார்வதி அம்மாள் சிகிச்சைக்கு வரும்போது தலைநிமிர்ந்து விடுகிறதே. கஞ்சிப்போட்ட காக்கி சட்டை, அப்போது மட்டும் எப்படி விரைப்போடு கடமையாற்றுகிறது. புரியவில்லை. ஆகவே, எப்பாடு பட்டாவது தமிழீழ விடுதலையை ஒடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி காங்கிரஸ் கடமையாற்றுகிறது. கழகம் துணை புரிகிறது. செம்மொழி நடத்த இருக்கும் இந்நேரத்தில், செம்மொழி வேண்டாம். எமது தாய் மொழியில் வழக்காட உரிமை வேண்டும் என்றுக் கேட்டு வழக்கறிஞர்கள் உண்ணாநிலை அறப்போரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்களே! செம்மொழி காவலரின் செவிகளுக்கு இச்சேதி சென்று சேரவில்லையா? பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய பிறகு, செய்தித்தாளைப் பார்த்துத்தான் செய்தி அறிந்தேன் என்று சொல்லக்கூடிய அரசத் தலைவருக்கு, வழக்குரைஞர்களின் உண்ணாநிலை அறப்போராட்ட செய்தி இதுவரை செய்தித்தாளில் வரவில்லையா?


டக்ளஸ் தேவானந்தா குற்றவாளிதான். அவர்மீது இந்திய குற்றவியல் சட்டத்தின்படி கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி என்பது செய்தித்தாள் பார்த்துத்தான் நமது அரசத்தலைவர் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறதா? ஊடகங்களும் திட்டமிட்டு இந்த விடுதலைப்போராளிகளின் போராட்டத்தை மறைக்கிறதே? என்னக் காரணம்? ஊடகங்கள் யாருக்காக இயங்க வேண்டும்? மக்களுக்காகத்தானே ஊடகங்கள்? அரசத் தலைவர்களின் பொய்த் தோற்றங்களையும், நடிகர் நடிகைகளின் அரிதார முகங்களையும் அடுத்தடுத்து சொல்வதற்கா ஊடகங்கள்? இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டும். கைது செய்யலாம். தமிழின உணர்வாளர்கள் எவ்வளவு பேரை கைது செய்வீர்கள்.


கோடிக்கணக்கான இளைஞர்கள் வரிசை வரிசையாய் காத்திருக்கும்போது எந்த சிறைச்சாலையில் அவர்களை அடைப்பீர்கள்? நீங்கள் இவர்களை சிறையில் பூட்ட வேண்டும் என்றால், இந்த நாடே திறந்தவெளி சிறைச்சாலையாக அல்லவா மாறிவிடும். காரணம், பணத்திற்காகவும், பதவிக்காகவும், தன்னல வாழ்வுக்காகவும் மட்டும் நீக்கிவிட்டால், மீதம் இருக்கும் மொத்தப்பேருமே லட்சியம் கொண்டவர்கள் தானே? இவர்களை எல்லாம் எந்தச் சிறையில் கொண்டுபோய் அடைப்பீர்கள். இது சரியான பாதையல்ல. தமிழீழ விடுதலை என்பது யாராலும், எந்த நேரத்திலும், எத்தனை இடர் வந்தாலும் தவிர்க்க முடியாத நிலை. இதை மாற்ற முடியாது. தமிழீழ விடுதலை நிகழ்ந்தே தீரும். தமிழீழ குடியரசின் தலைவராக மேதகு தேசிய தலைவர் அவர்கள் அமர்வார். அந்த காலத்திற்காக உலகத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். அது எட்டிய தூரத்தில்தான் கனியாக பழுத்திருக்கிறது. அதுவரை நாம் தொடர்ந்து போராடுவோம். துரோகங்களை தோற்கடிப்போம். லட்சியங்களை வெல்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக