சனி, 17 ஜூலை, 2010

புனர்வாழ்வு துறை அமைச்சரின் மாபெரும் கரிசனை ....

அரசாங்கத்தின் முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி மோசமான முறையில் நடத்தப்படுவதாக முன்னாள் புலிப்போராளிகள் கூறியிருக்கும் நிலையில் இந்த விடயம் குறித்து பி.பி.சி.க்கு கடிதங்களை எழுதுவதற்குப் பதிலாக அவர்கள் தனக்கு எழுதியிருந்தால் தான் கவனத்திற்கு எடுத்திருப்பாரெனவும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் டியூ குணசேகர கூறியுள்ளார்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்கள் தமக்கு அடிப்படை வசதிகள் இல்லையென கூறியுள்ளனர். பி.பி.சி. தமிழ்ச் சேவைக்குக் கடிதங்களிலும் தொலைபேசி அழைப்புகளிலும் அவர்கள் இதனைக் கூறியிருப்பதாக பி.பி.சி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.


நிலையங்களில் தாங்கள் சித்திரவதைக்குட்படுத்தப்படுவதாகவும் அடிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கு முன்னால் இலஞ்சம் கேட்பதாகவும் முகாம்களின் காவலர்கள் ஊழல் புரிவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் சிறந்த முறையில் கவனிக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. யுத்தம் முடிவடைந்த இறுதி வாரங்களில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு சுயாதீனமான விசாரணைக்கும் அனுமதி வழங்க மறுக்கப்பட்டு வருகிறது.


யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது பலர் காயமடைந்ததாகவும் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.


எம்மை அடிக்கடி நாய்கள் என அழைக்கின்றனர். ஒருநாள் கூட நாங்கள் சவரம் செய்யாவிடின் மோசமாக அடிக்கின்றனர் என்று கடிதமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள தமிழ்ப் பாடசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருவரால் எழுதப்பட்ட கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பி.பி.சி. குறிப்பிட்டுள்ளது.


மின்சாரம் மற்றும் சுத்திகரிப்புக் கட்டணங்களுக்கான செலவை தடுத்து வைக்கப்பட்டிருப்போரே ஏற்றுக்கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எம்மிடம் பணம் இல்லை என்று நாங்கள் கூறினால் எம்மை பூஸா சிறைக்கு அனுப்பப்போவதாக அவர்கள் அச்சுறுத்துகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாங்கள் விடுதலையாவோமோ, இல்லையோ என்பது பற்றி எமக்குத் தெரியாது என்று மற்றக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பி.பி.சி. தமிழ்ச்சேவைக்கு கடிதங்கள் மூலமும் தொலைபேசி பேட்டிகள் மூலமும் இவை தெரிவிக்கப்பட்டுள்ளன. முகாம்களுக்கு நேரடியாகத் தொடர்புகொள்ள முடியாததால் இவை பற்றி உறுதிப்படுத்துவது கடினமான விடயமென பி.பி.சி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.


சுமார் 10 ஆயிரம் புலி உறுப்பினர்கள் சரணடைந்தோ அல்லது கைதுசெய்யப்பட்டோ இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சில தடுப்பு நிலையங்கள் இராணுவத்தளங்களிலும் ஏனையவை பாடசாலைகளிலும் உள்ளன.அவர்கள் எழுதும் கடிதங்கள் யாவுமே சுகாதாரமற்ற நிலைமையில் தாங்கள் இருப்பது பற்றியும் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுவது பற்றியும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளன.


அவர்களுக்கு தொழில்நுட்ப,தொழிற்பயிற்சிகளை வழங்கி வருவதாக அரசாங்கம் கூறுகிறது. அவர்கள் வேலைவாய்ப்பைப் பெறக்கூடிய விதத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், ஆக்கபூர்வமான பயிற்சியெதுவும் தங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லையென தடுத்துவைக்கப்பட்டோர் கூறுகின்றனர்.


திருகோணமலை நகரைச் சேர்ந்த பெண்ணொருவரால் எழுதப்பட்ட கடிதத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிலர் கடுமையான முறையில் தாக்கப்பட்டிருப்பதாக எழுதியுள்ளார். சிலர் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டதாகவும் சிலரை தரையில் படுக்கவைத்து பட்டிகள்,தடிகளால் தாக்கியதாகவும் காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை எனவும் அவர் எழுதியுள்ளார்.


தமது அன்புக்குரியவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றிய விபரங்களை அதிகாரிகள் வழங்குவதில்லையென ஏனையோர் குற்றஞ்சாட்டுகின்றனர். தடுப்பு நிலையங்களில் காணமல்போதலும் இடம்பெறுவதாக அவர்கள் கூறியுள்ளனர். விசாரணைக்காகக் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பி வரவில்லையெனவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எவருக்கும் தெரியாதென்றும் அவர்கள் கூறுகின்றனர்.ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் கடுமையாக மறுக்கிறது.


"நான் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியாவுக்குச் சென்று பலரைச் சந்தித்தேன். தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் மனைவிமார்,உறவினர்களை நான் சந்தித்திருக்கிறேன். ஒருவரும் எனக்கு எந்தவொரு புகாரையும் தெரிவிக்கவில்லை. லண்டனிலுள்ள பி.பி.சி.க்கு கடிதம் எழுதுவதற்குப் பதிலாக எனக்கு எழுதுமாறு நான் அவர்களைக் கேட்கிறேன். நான் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துவேன்" என்று புனர்வாழ்வுத்துறை அமைச்சர் டியூ குணசேகர பி.பி.சி.க்குக் கூறியுள்ளார்.


கடந்த வருடம் மூவாயிரம் பேர் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் 600 பெண்கள், தீவிரமான போராளிகள் 1300 பேர் உட்பட எண்ணாயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக டியூ குணசேகர கூறியுள்ளார். முழுமையாகப் பார்த்தால் நாங்கள் மிகவும் பெருந்தன்மையாக இருக்கின்றோம் என்று நான் கூறுவேன் என குணசேகர கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக