சனி, 17 ஜூலை, 2010

இலங்கை சர்வாதிகாரத்தை நோக்க நகர்கிறது...!

உயிரச்சம் காரணமாக உள்ள ஊடகவியலாளர்கள் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பேச அஞ்சுகிறார்கள். ஆனால் சர்வதேச ஊடகங்களோ கண்களை மூடிக் கொண்டிருக்கின்றன............
எட்வார்ட் மோரைமர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டதாக மகிந்த ராஜபக்ச அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. ஆனால்...
அந்த சொர்க்கத் தீவில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர் இன்னமும் முடிவடைந்தபாடில்லை. கடந்தவாரம் ஒரு ஊடக நிறுவனம் அச்சுறுத்தல் கடிதத்தைப் பெற்றிருந்தது. இன்னொரு ஊடக நிறுவனத்தின் தலைவர் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை வெளியிட்டதையடுத்து அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களைப் பாதுகாத்த இரண்டு சர்வதேச அரசசார்பற்ற நிறுவன அலுவலர்களுடைய விசா இரத்துச் செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.


அங்கு ஊடகவியலாளர்களுடைய நிலைமைகள் மிகவும் சீர்கேடடைந்து வருகின்றன. சர்வதேச மன்னிப்புச் சபையின் தகவல்களின்படி 2006ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் ஆகக் குறைந்தது 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 20க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். இது ஈரானை விட்டு வெளியெறிய ஊடகவியலாளர்களுடைய எண்ணிக்கையை விட அதிகமாகும். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சட்டபூர்வமற்ற கைதுகள், கடத்தல்கள், படுகொலைகள் பற்றிய ஏராளம் விடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஊடகங்களுக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கைகளைப் புரிந்தவர்கள் எவரும் இதுவரை தண்டனைக்கு உள்ளாக்கப்படவில்லை.
2008 ஜனவரியில் அரசாங்கப்படைகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இறுதி நிலத்தையும் மீட்கும் படை நடவடிக்கையை ஆரம்பித்த போது போர்ப் பிராந்தியங்களிலிருந்து செய்திகள் வெளிவருதை அரசாங்கம் முற்றாகத் தடை செய்திருந்தது.
படுகொலைக்களங்களுக்கு அப்பால் கூட உள்ள ஊடகவியலாளர்கள் பெரும் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அன்றயை நாளொன்றில் எம்ரிவி நிறுவனம் ஆயுததாரிகளின் தாக்குதலுக்குள்ளானது. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவருமான லசந்த விக்ரமதுங்க உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இராணுவத்தினர் வழமையாக ரோந்தில் ஈடுபடும் தெருவொன்றில் வைத்து பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
போர் முடிவடைந்த பின்னரும் நிலைமைகளில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. மின்னஞ்சல்கள் இடைமறிக்கப்படுகின்றன. ஊடகநிறுவனங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன. ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்காளாகின்றார்கள். இன்னும் சில ஊடகவியலாளர்களோ ஒரு வித சுய தணிக்கையைக் கடைப்பிடித்து விருகிறார்கள். பிரகீத் எக்னெலியகொட ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னைய நாளில் இருந்து காணாமல் போயிருக்கிறார்.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் மட்டும் தான் இத்தகைய அச்சத்துள் வாழ்கிறார்கள் என்றில்லை. அரசசார்பற்ற் நிறுவனப் பணியாளர்கள், சட்டத்தரணிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் இத்தகைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் உயிராபத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். வெளியிலிருந்து வரும் விமர்சனங்களுக்கெதிராக அரசாங்கம் கடந்தவாரம் ஒரு பாய்யசலை நடாத்தியிருநதது.
இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க ஐநா செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவைக் கலைக்கக் கோரி கபினட் அமைச்சரான விமல் வீரவன்சவும் அவரது குழுவினரும் கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தினர். இந்தப்போராட்டம் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே நடாத்தப்பட்டது என்பதை ஊகிக்க நிறைய இடமிருக்கிறது.


இவை எவையும் சர்வதேச ஊடகங்கள் அறியாமல் நடைபெறவில்லை. பான் கீ மூனின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் சில தினங்கள் இந்த ஊடகங்கள் அங்கு பார்வையைத் திருப்பியிருந்தன. இலங்கை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படையாகத் தெரியாமலே சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.


2009இல் இலங்கையில் இடம் பெற்ற இறுதிப் போருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட நான்கு மடங்கு அதிகமாக இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு நியூயோர்க் ரைம்ஸ்ஸும் கார்டியன் பத்திரிகையும் இடம் ஒதுக்கி இருந்தன. காஸாவில் இடம் பெற்ற இராணுவ நடவடிக்கையில் 1400 பேர் கொல்லப்படடிருந்தனர். ஆனால் இலங்கையில் இடம் பெற்ற இராணுவ நடவடிக்கையில் ஏழாயிரம் தொடக்கம் நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளிவந்திருந்தது.


இலங்கைப் போருடன் ஒப்பிடும் போது காஸாப்பிரச்சினைக்கு சீனத் தினசரி ஆறு மடங்கு இடம் ஒதுக்கியிருந்தது. தென்னாபிரிக்காவின் இன்டிபென்டன்ட் நியூஸ் பேப்பர் குறூப் பத்துமடங்கு அதிகமாக காஸாப்பிரச்சினைக்கு ஒதுக்கி இருந்தது.


எங்களில் எவராவது சர்வதேச நியமங்களையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் பற்றி அக்கறைப்படுவதுண்டா? ராஜபக்சவினுடைய திரிக்கப்பட்ட விடயங்கள் பதிலளிக்கபடாமல் விடப்பட முடியுமா? அவ்வாறு நாம் அனுமதிப்பதென்பது ஏனைய அரசுகளும் உள்நாட்டில் இருந்து எழும் எதிர்ப்பை இலங்கையினுடைய வழிமுறையைப் பின்பற்றி சர்வதேச சட்டங்களையோ அல்லது பொதுமக்கள் படுகொலையாவதைப் பற்றியோ அக்கறையின்றி முறியடிக்க வழிசமைத்ததாகி விடும்.


கொலம்பியாவிலிருந்து தாய்லாந்து வரையான அரசின் தலைவர்கள் “இலங்கையின் வழிமுறை” குறித்து பெரும் ஆர்வம் கொண்டிருப்பதை அறிக்கைகைள் புலப்படுத்துகின்றன.


இலங்கையின் ஊடகவியலாளர்கள் இன்னும் இத்தகைய பெரும் அச்சுறுத்தல்கள் மத்தியிலிருந்தும் காணாமல் போதல்கள் சித்திரவதை, படுகொலைகள் குறித்த தகவல்களை தமது சர்வதேச ஊடக நண்பர்களின் உதவியுடன் வெளிக்கொண்டு வருகிறார்கள்.
ரஷ்ய ஊடகவியலாளரான அனா பொலிற்கோவ்ஸ்காயாவி; படுகொலை முழு உலகிலுமே கண்டனத்திற்குள்ளானது. லசந்த விக்ரமதுங்கவோ தமது படுகொலை குறித்து தான் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னரே ஆசிரிய தலையங்கத்தில் எழுதி வைத்தவர். எனினும் அது அந்தளவிற்கு உலகின் கவனத்தைப் பெறவில்லை.
ஊடகசுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்கும் சிபிஜே எனப்படும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு சவூதி அரேபியாவையும், உஸ்பெஸ்கித்தானை விட இலங்கையில் ஊடக சுதந்திரம் மிகவும் சீரழிந்த நிலையில் உள்ளதாகக் குற்றம்சாட்டி உள்ளது. எனினும் இது வெளித்தெரியவரவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியிருக்கிறது. நிச்சயமாக இந்த நிலைமை இப்போது மாறியாக வேண்டும். நன்றி : கார்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக