சனி, 17 ஜூலை, 2010

இந்தப் போர் எங்களோடு ஆரம்பிக்கவும் இல்லை. முடியவும் இல்லை”-பகத் சிங்

பகத் சிங்கின் இந்த கூற்று ஆயுத போராட்டத்துக்கு மட்டுமல்ல, அஹிம்சை வழியிலான போராட்டங்களுக்கும் பொருந்தும். ஓவ்வொரு தனி மனிதனும், சமூகமும், இனமும் ஏன் முழு உலகமுமே போராடிக்கொண்டு தான் இருக்கிறன. என்ன அவரவரின் தேவைகளும், நோக்கங்களுமே வேறுபடுகின்றன.
இலங்கையில் சுமார் முப்பது வருடங்களாக நடைபெற்று வந்த ஆயுத வழியிலான போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. (அப்படித்தானே கூறப்படுகிறது) இந்த நிலையில்,
இலங்கை தமிழர்கள் என்னென்ன காரணங்களை முன்வைத்து போராட்டங்களை ஆரம்பித்தார்களே அந்த காரணங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியா என்ற பெரிய நாட்டை உருவாக்கிய பிரித்தானியாவே, இலங்கை என்ற நாட்டையும் உருவாக்கியது. தன்னுடைய காலணித்துவ ஆட்டிசிக்காலத்தில் நிர்வாக கட்டமைப்பை உறுதி செய்யவே பல்வேறு ஆட்சியாளர்களை கொண்டிருந்த இந்துஸ்தானத்தை இந்தியாவாக்கினார். அதுவே, இலங்கையிலும் நடந்தது.
அதுவரை பக்கத்து ஆட்சியாளர்களிடம் மோதிக்கொண்டிருந்த மன்னர்களுக்கும், குறுநில அரசர்களுக்கும், மேற்கு மெஹலாயர்களுக்கும்;;, கிழக்கு வங்காளிகளுக்கும், வடக்கு ஆரியனுக்கும், தெற்கு திராவிடனுக்கும் ‘பிரித்தானிய ஆட்சியாளர்கள்’ பொது எதிரியாயினர்.
அதனால், தங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை மறந்து விட்டு போராட்டங்களுக்குள் தங்களை இந்தியனாக உருமாற்றி புகுந்து கொண்டனர். அதுவே, ஈழத்திலும் சாத்தியமானது.
கண்டி சிங்களவனும், கரையோர சிங்களவனும், வடக்கு தமிழனும், கிழக்கு இஸ்லாமிய தமிழனும், கொழும்பு தமிழனும் ஏன் மலே சகோதரனும் தங்களை ஒரு தாய் மக்களாக நினைத்து ஒன்றினைந்து பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக போரிட்டனர். ஆனால். இந்தியாவிலும், இலங்கையிலும் இன்றைய நிலை என்ன?
இலங்கையில் தமிழர்களும் (இங்கு இஸ்லாமியத் தமிழர்களும் உள்ளடக்கப்படுகிறார்கள்), இந்தியாவில் அசாம், மேஹாலயா, அருணாச்சல் பிரதேசம், காஸ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களிலுள்ள மக்களும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது உரிமைகள் வேண்டி போராடுகின்றனர்.
இலங்கைத் தமிழர்கள் சந்தித்த கொடுமைகளையும், ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளையும் இந்திய எல்லையோர மாநில மக்கள் அதுவும், காஸ்மீர், அசாம், அருணாச்சல் பிரதேச மக்கள் தினம் தினம் அனுபவிக்கிறார்கள். ஆனால், இலங்கை தமிழர்களின் போராட்டங்கள் உலகளவில் உற்று நோக்கப்பட்ட அளவுக்கு அவை பார்க்கப்படவில்லை என்பதே உண்மை.
ஜனநாயக மறுப்புக்களும், மனித உரிமை மீறல்களும் இந்த பிரதேசங்களில் தொடர்கின்றன. ‘பயங்கரவாத தடைச் சட்டத்தினால்’ இலங்கை சிறுபான்மை மக்கள் எவ்வளவு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனரோ, அதைவிட இந்திய எல்லையோர மாநில மக்கள் பயங்கர இராணுவ சட்டங்களை தினம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இலங்கையில் இராணுவ குற்றங்கள் மக்கள் மீது எவ்வாறு நீண்டு சென்றுள்ளதோ, அதுபோலவே இந்திய சிறுபான்மை சமூகங்கள் மீதும் அவ்வப்போது பாய்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? நாட்டின் ஆட்சியாளர்களாக இருக்கின்ற பெரும்பான்மையினர், சிறுபான்மையினரின் உரிமைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளமையே.
இந்த புரிந்து கொள்ளாமை, நூறு வருடங்களல்ல ஆயிரம் வருடங்களானாலும் தொடரப்போகிறது. சின்ன உதாரணமொன்று வடக்கில் தங்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழர்கள், இஸ்லாமிய தமிழர்களை அவர்களின் பாராம்பரிய நிலங்களிலிருந்து விரட்டவில்லையா? இதுவெல்லாம் மறக்கவும், மன்னிக்கவும் முடியாதவை.
இலங்கையில் சிறுபான்மை சமூகங்களுக்கு தங்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு அவ்வப்போது வழிகள் பிறக்கின்றன. அதில், தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற பலம் முக்கியமானவை. அவ்வாறானதொரு நிலையை இந்த வருடம் இரண்டு தடவை கடந்து வந்துள்ளோம். அதாவது இரண்டு தேர்தல்களை சந்தித்துள்ளோம்.
ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றது மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே. சிறுபான்மையினரின் வாக்குகளுக்கு பாரிய பலம் இலங்கையில் இருக்கிறது. ஆனாலும், கடந்த இரண்டு தேர்தல்களிலும் அது பெரியளவில் தாக்கம் செலுத்தவில்லை. ஆனாபோதிலும், சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குக்கள் இலங்கையின் ஆட்சியாளர்களை தீர்மானிப்பதில் அவ்வப்போது பங்கு வகிக்கின்றன.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி (அதாவது, தேர்தல் காலங்கள் மற்றும் இருக்கின்ற பாராளுமன்ற பலத்தை வைத்து) சிறுபான்மை சமூகம் தங்களுடைய உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாகவேனும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சரியான முறையில் பயன்படுத்தினால் மறுக்கப்படுகின்ற உரிமைகளை பெறுவதற்கு வழிகள் உண்டு.
இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் பிரசைகள் முன்னணி ஆகிய சிறுபான்மை சமூகங்களின் அங்கீகாரங்களைப் பெற்றுள்ள கட்சிகள் பாராளுமன்றத்தில் தங்களுடைய சமூகங்களின் பிரச்சினைகள் குறித்து உண்மையான மனதுடன் விவாதிக்க வேண்டும்.
அதை விட்டு, பெரும்பான்மையினர் கொண்டுவருகிற அனைத்து சட்ட மூலங்களையும் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ கருத்து தெரிவிப்பது பாரிய சிக்கல்களை தோற்று விக்கும். சிறுபான்மை மக்களின் நலன்களை ஊக்குவிக்கின்ற சட்ட மூலங்களை ஆதரித்தும், சிறுபான்மை சமூகங்களுக்கு சிக்கல்களை வழங்கும் சட்ட திருத்தங்களை எதிர்த்தும் வாக்களிப்பதும், கருத்து தெரிவிப்பதுமே சிறந்தது.
அதை விடுத்து ஒட்டுமொத்தமாக தங்களுக்கு அதிகாரத்தையும், உரிமைகளையும் பெரும்பான்மை சமூகம் வழங்குமென்று காத்திருப்பது வெற்றுக் கனவே. இந்த நிலை, எங்கெல்லாம் தங்களின் உரிமைகளுக்காக போராடுகின்றார்களோ அங்கெல்லாம் பொருத்தி பார்க்கலாம். அதுதான், ‘இந்தப் போர் எங்களோடு ஆரம்பிக்கவும் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக